You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லைலா முஸ்தஃபா: சிரியா பெண்ணுக்கு உலகின் சிறந்த மேயர் விருது - என்ன செய்தார் இவர்?
- எழுதியவர், ஹேவர் ஹசன்
- பதவி, பிபிசி அரபு சேவை
சிரியாவில் "ரக்கா விடுதலை" ஆகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் கோட்டை மற்றும் தலைநகரமாக அப்பகுதி அறியப்பட்டது. அந்த இடத்தில் ஐ.எஸ் இப்போது கிடையாது.
ஆனால் அந்த கொந்தளிப்பான ஆண்டுகளின் விளைவுகள் இன்னும் உணரப்படுகின்றன. குறிப்பாக சில கிறிஸ்தவ மற்றும் யஸீதி இன பெண்கள், ஐ.எஸ் கட்டுப்பாட்டில் நகரம் இருந்த காலகட்டத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். பலர் பாலியல் அடிமைகளாக வாங்கி விற்கப்பட்டனர். நிகாபை (முகத்தை மறைத்தல்) அணிய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
லைலா முஸ்தஃபா என்ற இந்தப் பெண், தனது சொந்த நகரான ரக்காவை மீண்டும் கட்டியெழுப்பவும், அங்குள்ள பெண்களுக்கு உதவவும் தீவிரமாக முயற்சித்து வருகிறார். அதற்கான கெளரவமாக அவர் உலகின் சிறந்த மேயர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார்.
சிரியாவில் லைலா முஸ்தஃபா சந்தித்த சவாலான மற்றும் ஆபத்தான பணி பற்றி பிபிசியிடம் அவர் பேசியது.
லைலா முஸ்தஃபா யார்? இந்த விருது அவருக்கு கிடைக்க காரணம் என்ன?
லைலா முஸ்தஃபா (34) ஒரு குர்திஷ் பெண். வடக்கு சிரியாவின் ரக்காவில் பிறந்தார்.
சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்ற இவர், ரக்கா சிவில் கவுன்சிலின் இணைத் தலைவராக இருந்துள்ளார்,
2017ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அமெரிக்க தலைமையிலான கூட்டணி படையின் ஆதரவுடன் சிரியா ஜனநாயக படைகளால் (எஸ்.டி.எஃப்) ஐ.எஸ் குழு ரக்காவில் வீழ்த்தப்பட்டது.
அப்போது முதல் லைலாவின் தலைமையின் கீழ், ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் போரால் அழிக்கப்பட்ட தங்களுடைய நகரை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இடைவிடாது வேலை செய்கிறார்கள்.
ரக்கா மீட்கப்பட்ட பிறகு எஸ்டிஎஃப் மூலம் பல பிராந்திய அமைப்புகளில் நகர சபை நிறுவப்பட்டது.
ரக்கா நகரின் புனரமைப்பில் லைலா தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் லைலா உலக மேயர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார்.
போரின்போது ரக்கா கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் இந்த நகரை ஐஎஸ் குழு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால், அங்கு வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நகரத்தை விட்டு வெளியேறினர்.
ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்தபோது நகர வீதிகளில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் இன்னும் பல இடங்களில் அகற்றப்படாமல் புதைந்து கிடக்கின்றன. அங்கு திடீரென எழுச்சி பெறும் வாய்ப்பை ரகசிய குழுக்கள் அல்லது ஐ.எஸ் ஆதரவு குழுக்கள் பயன்படுத்த எப்போதுமே காத்திருக்கின்றன.
லைலா முஸ்தஃபா தனது சொந்த நகரத்தில் பெண்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார், எனவே இந்த விருதில் உள்ள முரண்பாட்டைக் காண்கிறார் அவர் - நகரத்தை கைப்பற்றிய ஐஎஸ், பெண்களை அடக்குவதில் பேர் போனவர்கள்.
உலக மேயர் திட்டம் (இது சர்வதேச ஆராய்ச்சி சிந்தனைக் குழுவான தி சிட்டி மேயர்ஸ் ஃபவுண்டேஷனால் இயக்கப்படுகிறது) 2004 முதல் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஈராண்டுகளுக்கும் இந்த திட்டம், வெவ்வேறு கருப்பொருள்களை கொண்டு விருது பெறுவோரை தேர்வு செய்கிறது.
2016ஆம் ஆண்டில், இந்த திட்டம் அகதிகள் நெருக்கடியில் கவனம் செலுத்தியது.. 2018இல், உள்ளூர் நிர்வாகப் பதவிகளில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்தியது. பிறகு இந்த ஆண்டு, பெருந்தொற்று நோய்களின் போது நகரங்களின் நிலைமை தொடர்பாக அறக்கட்டளை கவனம் செலுத்தியது.
இந்த ஆண்டு, லைலா முஸ்தபாஃபா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஒன்பது மேயர்களுக்கு விருது வழங்கப்பட்டது, ஆனால் வெற்றிப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே பெண் இவர் மட்டுமே.
'கடுஞ்சிறைக்கு பிறகு பாதுகாப்பான புகலிடம்'
ரக்காவை மீள்கட்டியெழுப்பும் பணியை லைலா முஸ்தஃபா மேற்கொண்டபோது, அந்த நகரில் போரில் சுக்குநூறான சிதைவுகள் மற்றும் இடிபாடுகள் தவிர எதுவும் மிஞ்சியிருக்கவில்லை.
நகரில் மின்சாரமோ குடிநீர் வசதியோ இல்லை. பொது சேவைகள் கிடையாது. ஒரு சில சுகாதார சேவைகள் மட்டுமே இயங்கின.
ஆனால் 2020ஆம் ஆண்டில் நகரின் பல்வேறு கலாசாரம், மதம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படும் ரக்கா அருங்காட்சியகம் மீளுருவாக்கப்பட்டு புதிய அடையாளத்துடன் விளங்கின.
"வரையறுக்கப்பட்ட திறன்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்கள் இல்லாவிட்டாலும், நாங்கள் நிறைய சாதித்துள்ளோம், இப்பகுதி மக்களுக்கு நன்றி, ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ற திட்டங்களை நாங்கள் உருவாக்கினோம்." என்றார் லைலா முஸ்தஃபா.
"அழிவின் அளவோடு ஒப்பிடும்போது, அது 95% அழிவை எட்டியிருந்தது. நாங்கள் அதை அங்குலம் அங்குலமாக கட்டியெழுப்பி சாதித்தோம்," என்றார் லைலா.
முன்பு சிறை போல இருந்த நகரம், இப்போது பாதுகாப்பான நகரமாகியிருக்கிறது. மின்சாரம், குடிநீர் வழங்கல் மற்றும் மருத்துவமனைகள், பள்ளிகள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட பிற உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படுகின்றன. வீடுகள், வீதிகள் உள்ளிட்ட இதர பொது சேவைகளை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்கிறார் லைலா.
இவரது மேற்பார்வையின் கீழ், 390க்கும் மேற்பட்ட பள்ளிகள், 25க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள், 10 தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள், எட்டு மின் நிலையங்கள், 30 குடிநீர் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
புதிதாக இடம்பெயர்ந்தவர்கள் உட்பட இங்குள்ள மக்கள் தொகை ஏறக்குறைய பத்து லட்சத்தை கடந்துள்ளது.
அனைத்து சமூக மற்றும் கலாசாரப் பின்னணியிலிருந்தும் மக்களை மேம்படுத்துவதற்காக லைலா தொடர்ந்து பணியாற்றியதால், நகரவாசிகளின் நம்பிக்கையையும் மரியாதையையும் இவரால் பெற முடிந்தது.
சுய நிர்வாக திட்டம்
வடகிழக்கு சிரியாவில் பொறுப்பேற்றுள்ள மற்ற குர்துகளைப் போலவே, லைலா முஸ்தஃபா சுய நிர்வாகத் திட்டம் நாட்டின் பிற பகுதிகளில் ஒரு நாள் செயல்படுத்தப்படும் என நம்புகிறார்,
மேலும் சிரியா முழுமைக்குமான ஒரு வெற்றிகரமான முன்மாதிரி நகராக ரக்கா மாறும் என்று லைலா நம்புகிறார், குறிப்பாக பாலின சமத்துவம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.
இந்த இளம் பெண் ஏற்றுக்கொண்ட பணி எளிதானது அல்ல, ஏனென்றால் இவர் வேலை செய்யும் சூழல் இன்னும் பழங்குடி மற்றும் பழவமையான சடங்குகளுக்கு மதிப்பை தருகிறது.
நகர சபையை வழிநடத்தும் ஒரு இளம் குர்திஷ் பெண்ணாக லைலா இப்பகுதியில் உள்ள பல்வேறு இனங்கள், சமூகம் மற்றும் கலாசார பின்னணியிலிருந்து வரும் பல பெண்களை ஊக்குவிக்கிறார். சமூகத்தையும் நகரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களுக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்த்தச் செய்கிறார்.
"சிவில் கவுன்சிலில் பெண்களின் விகிதம் 40%ஐ எட்டியது. நகரத்தில் இது மிக அதிக சதவீதமாகும்" என்கிறார் லைலா.
"ரக்காவின் சிவில் கவுன்சிலில் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 10,500. இதில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் 4,080 பெண்கள் உள்ளனர்.
"ரக்காவில் ஒட்டுமொத்தமாக அனைத்து நிறுவனங்களிலும் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டியுள்ளது, இது நாங்கள் எப்போதும் போராடும் நீதி மற்றும் சமத்துவத்திற்கான சான்று" என்று அவர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள எல்லா நாடுகளிலும் பெண்களுக்கு ஒரு செய்தியை வழங்க லைலா முஸ்தஃபா விரும்புகிறார்.
பெண்களின் உரிமைகள் எங்கெல்லாம் கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் பெண்கள் உறுதியுடன் தங்களை நம்பினால் ஒவ்வொரு துறையிலும் தங்கள் திறன்களை அவர்களால் நிரூபிக்க முடியும்," என்கிறார் லைலா.
ரக்கா வரலாற்றில் இங்குள்ள கவுன்சில் தலைவராக ஒரு விதிவிலக்கான மற்றும் புகழ்பெற்ற நிகழ்வாக லைலாவின் தேர்வு ஆகியிருக்கிறது. இந்த மண்ணில் இதுவரை ஆண்டு வந்த சிரியா அரசாங்கமானாலும் சரி, துருக்கியை ஆதரித்து வந்த எதிர்கட்சி அல்லது ஐஎஸ் குழுவை ஆதரித்த கட்சிகளின் தலைமை ஆனாலும் சரி, எல்லா நேரத்திலும் இங்கு ஆண்களே பதவிகளை அலங்கரித்திருந்தனர்.
ரக்காவில் அப்போது என்ன நடந்தது?
சிரிய போருக்கு முன், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ரக்காவில் இருந்தனர். அவர்கள் அரேபியர்கள், குர்துகள், கிறிஸ்தவர்கள், சிரியர்கள் மற்றும் பலர் வாழ்ந்தனர். அவர்கள் பல்வேறு இனம், மதம், சமூக பின்னணியில் இருந்தனர்.
இந்த நகரம் சமூக பழமைவாதமாக காணப்படுகிறது, பழங்குடி மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்களின் தாக்கத்தை அதிகமாகக் கொண்டிருந்தது.
இருப்பினும், நாட்டில் நடந்த உள்நாட்டுப் போர் இப்பகுதியில் உள்ள கொள்கைகளை மாற்றிக் கொள்ளச் செய்துள்ளது.
2013ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிரியா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ரக்கா நகரை துருக்கி ஆதரவான எதிர்க்கட்சி "ஃப்ரீ ஆர்மி" மற்றும் அல்-காய்தாவுடன் இணைந்த அல்-நுஸ்ரா ஃப்ரண்ட் கைப்பற்றிய பிறகு, அதன் பெயரை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்று மாற்றியது, அமெரிக்கா அந்த அமைப்பை ஒரு பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்ட ஓராண்டுக்குள் ஐஎஸ் குழு இந்த நகரின் கட்டுப்பாட்டை தன் வசமாக்கிக் கொண்டது.
இதைத்தொடர்ந்து அந்த நகரை இஸ்லாமிய கலிபா என்ற ஐ.எஸ் குழு அழைத்துக் கொண்டு அதை தமது தலைநகராக அறிவித்தது, பின்னர் லட்சக்கணக்கான மக்கள் அந்நகரை விட்டு வெளியேறி அண்டை நகரங்களுக்கும் துருக்கி எல்லைக்கும் தப்பினர்.
2017ஆம் ஆண்டு அக்டோபரில் ஐஎஸ் குழு வீழ்த்தப்பட்ட பிறகு, சிரியா ஜனநாயக படைகள் (எஸ்.டி.எஃப்) மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் ரக்கா நகரை மீண்டும் மீட்ட பிறகு இங்கு சிவில் கவுன்சில் உருவாக்கப்பட்டது.
அந்த குழுவில் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், பழங்குடி தலைவர்கள், தொழில்நுட்ப உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் அடங்கிய குழுவுக்குத் தான் நகர வரலாற்றிலேயே முதல் முறையாக லைலா முஸ்தஃபா தலைமை தாங்கியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது?
- சைகோ கொலைகாரனா துரைமுருகன்? போலீஸ் என்கவுன்டர் பின்னணி என்ன?
- சிங்கு எல்லையில் தலித் விவசாயி கொலை - அதிர்ச்சியில் போராட்டக் குழுவினர்
- சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள்
- ஆப்கன் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் - 30 பேர் பலி, 90 பேர் காயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்