BBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்

உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள 100 பெண்களும் தற்போது நிலவும் நெருக்கடியான காலகட்டத்தில் நேர்மறையான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியவர்கள்.

இந்த ஆண்டு வழக்கமான ஆண்டு கிடையாது உலகெங்கிலுமுள்ள எண்ணிலடங்காத பெண்கள் பிறருக்கு உதவுவதற்காக இந்த ஆண்டு பல தியாகங்களை செய்துள்ளார்கள்.

அந்தப் பெண்களின் தியாகங்களை போற்றும் வகையில் 100 பெண்களை உள்ளடக்கிய ஒரு பட்டியலில் ஓர் இடம் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் தன்னலம் பாராமல் வாழ்ந்தும் அங்கீகாரம் கிடைக்காத அந்தப் பெண்களுக்கானது.

ஒரு அசாதாரண ஆண்டில், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பெண்கள் தியாக உள்ளத்துடன் மற்றவர்களுக்கு உதவ, அவர்களின் வேலையை அங்கீகரிப்பதுதான் முதல் பணி. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உயிர் துறந்தவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகெங்கிலும் பங்களிப்பு வழங்கிய ஒவ்வொரு பெண்ணையும் பிபிசி 100 பெண்கள் பட்டியலில் சேர்க்க முடியாது என்றாலும், 2020 ஆம் ஆண்டில், உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களைப் பற்றி சிந்திக்க இது உதவும்.

இசைவாணி, இசைக் கலைஞர்

இந்தியாவின் ஒரே பெண் கானா பாடகி என்ற பெருமை இசைவாணிக்கு உள்ளது. தமிழகத்தில் வடசென்னையைச் சேர்ந்த இவர், ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வரும் கானா பாடல் துறையில் பல ஆண்டுகளாக சாதித்து வருகிறார்.

பிரபல ஆண் கானா பாடகர்கள் பாடிய அதே மேடையில் இவர் பாடுவதே ஒரு சாதனைதான். பழைய நடைமுறையை இசைவாணி உடைத்ததை அடுத்து, மற்ற இளம் பெண் கானா பாடகர்களும் இப்போது களமிறங்கியுள்ளனர்.

"2020-ல் உலகம் மாறிவிட்டது. ஆனால் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது: பெண்கள் செயல்பாடுகளின் போக்கை மாற்றியுள்ளனர், பணி நிலைகளை மாற்றியுள்ளனர். வரக்கூடிய தலைமுறைகளுக்கு இந்த நடைமுறை நிலையாக இருக்கும்"

பில்கிஸ் பானோ, போராட்டக்குழு தலைவர்

82 வயதான பில்கிஸ் சர்ச்சைக்குரிய குடிமக்கள் சட்டத்தற்கு எதிராக நடந்த பெண்கள் போராட்டத்தில் அமைதியாக போராடியவர். தலைநகரில் முஸ்லிம்கள் வாழும் ஷாஹீன் பாக் பகுதியில் அதிக நாட்கள் போராட்டம் நடந்த இடத்தில், போராட்டத்தில் முக்கியமானவராக அவர் இருந்தார். ``ஒடுக்கப்பட்டவர்களின் குரல்'' என்று அவரை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராணா அயூப் குறிப்பிட்டுள்ளார்.

"பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறி குரல் எழுப்புவதில், குறிப்பாக அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதில் அதிகாரம் பெற்றவர்களாக உணர வேண்டும். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராவிட்டால், தங்கள் பலத்தை எப்படிக் காட்ட முடியும்?" - பில்கிஸ் பானோ

ரிதிமா பாண்டே, பருவநிலை செயல்பாட்டாளர்

ரிதிமா பாண்டே பருவநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாட்டாளர். பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி 2019-ல் தன் 9வது வயதில், வேறு 15 சிறுவர் மனுதாரர்களுடன் சேர்ந்து வழக்கு தொடர்ந்தார். ஐந்து நாடுகளுக்கு எதிராக அவர் ஐ.நா.வில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரிதிமா இப்போது சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று, மற்ற மாணவர்களுக்கு அதிகாரம் கிடைக்க உதவுகிறார். அனைத்து நிலைகளிலும் எதிர்காலத்துக்காகவும், பல்லுயிர்ப் பெருக்கத்துக்காகவும் போராட உதவுகிறார். தன்னுடைய மற்றும் வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்காக ரிதிமா பாடுபட்டு வருகிறார்.

"நாம் ஒன்றுபட்டு பலமாக இருந்து, கஷ்டமான சூழ்நிலைகளில் நம்மால் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபிக்க வேண்டிய தருணம் இது. ஒரு விஷயத்தை சாதிக்க ஒரு பெண் முடிவு செய்துவிட்டால், யாரும் அவரை தடுத்துவிட முடியாது," என்று ரிதிமா கூறியிருக்கிறார்.

மானசி ஜோஷி, தடகள வீராங்கனை

இந்திய மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனையான மானசி, இப்போது மாற்றுத் திறனாளி பாட்மிண்டன் உலக சாம்பியனாக இருக்கிறார். 2020 ஜூன் மாதம் உலக பாட்மின்டன் சம்மேளனம் அவரை எஸ்.எல்.3 ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக அறிவித்தது. மானசி பொறியாளராகவும், மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் இருக்கிறார்.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளும், மாற்றுத் திறன் விளையாட்டும் அணுகப்படும் முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது இவருடைய விருப்பமாக உள்ளது. சமீபத்தில் இவரை - அடுத்த தலைமுறை தலைவராக டைம் இதழ் பட்டியலிட்டது. அதன் ஆசிய பதிப்பின் அட்டைப்படத்தில் அவரது படம் இடம் பெற்றது. இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் என அந்த இதழ் குறிப்பிட்டிருந்தது.

"இந்த ஆண்டு பல வகைகளில் பெண்களுக்கு சவாலான ஆண்டாக உள்ளது. சவாலான நேரங்கள் உங்களை வென்றுவிட அனுமதிக்காதீர்கள்: ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் உங்களுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள்," என்று மானசி ஜோஷி கூறியிருக்கிறார்.

பிபிசி 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி?

பிபிசி 100 உமன் குழுவினர் தாங்கள் தேர்வு செய்த மற்றும் பிபிசி உலக சேவை மொழிகளின் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட பெண்களின் பெயர்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. அவர்களில் இந்த ஆண்டு அதிகமான தாக்கம் செலுத்தியவர்கள் மற்றும் செய்திகளில் இடம் பிடித்த பெண்களை தேர்வு செய்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

பிறருக்கு ஊக்கமளிக்கக் கூடிய கதைகள் உள்ளவர்கள், மிக முக்கியமான சாதனைகள் செய்தவர்கள், சமூகத்தின் மீதான நேர்மறை தாக்கம் செய்தவர்கள் ஆகியோரின் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தாங்கள் சார்ந்துள்ள துறையில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் கவனிக்கத்தக்க வகையில் செயல்பட்ட பெண்களின் பெயர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

படங்களின் காப்புரிமை: மெல்பர்ன் பல்கலைக்கழகம், கிம் சூஹியோன், குவாக் டாட், ராச்சட்டா சாங்க்ரோட், ஃபீ-குளோரியா க்ரோனெமேயர், ரக்யான் பிரமாஸ்டோ, என்.சி.ஐ.டி, தாமஸ் லெய்ஸ்னே, நந்தர், குஞ்சன் ஜோஷி, ஷாஜன் சாம், ஷாபாஸ் ஷாஜி, ஆக்ஸ் கிமியா, அராஷ் ஆஷூரினியா, யு.என்.ஹெச்.சி.ஆர், நான்சி ராசெட், எமிலி ஆல்மண்ட் பார், ஐசிஏஆர்டிஏ, 89அப், நோ ஐசோலேஷன், அன்னா கோத்ரேயேவா, போக்தனோவா ஏகதேரீனா, அனஸ்தசியா வோல்கோவா - சிட்னி மார்னிங் ஹெரால்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் / ஜான் கெய்ர்ன்ஸ், அர்வித் எர்கின்சன், ஜெரோனிமோ ஜூனிகா / அமேசான் பிரண்ட்லைன்ஸ், அலெசான்ட்ரா லோபேஸ், விக்டர் ஹியூகோ யானெஸ் ராமோஸ், ரிக் புகானன் போட்டோகிராபி, எட்டி ஹெர்னாண்டஸ் போட்டோகிராபி, ஏன்ட் ஐ போட்டோகிராபி, கிறிஸ் கோலிங்ரிட்ஜ், அப்துல் ஹமீது பெலாஹ்மிடி, குன்மி ஓவோபேட்டு, ஏலியன் ப்ரோஸ் ஸ்டுடியோ,மாஸ்டர்கார்டு அறக்கட்டளை, ஹன்னா மென்ட்ஸ், போர்ட்ஸ், வைஸ் மீடியா குரூப் எல்.எல்.சி, சைட்டட் ஸ்டுடியோஸ், பிரான்சிஸ் மெவ்ஸ், ஏஞ்சலோ ஸ்டுடியோ, சோலா ஃபோட்டோ, டேவிட் கீ, வில் கிர்க், பாலோமா ஹெர்ப்ஸ்டீன், மிகுவல் மென்டோசா ஃபோட்டோ ஸ்டுடியோ,டெனிஸ் எல்ஸ், டியோனட் வில்லியம்ஸ், அல்கால்டியா மேயர் டி போகோடா, நெட்ஒர்க் ஆப் உம்ன் பீஸ் பில்டர்ஸ் ,பிரெசிடென்ட்ஸ் ஆர்டிஸ்ட்ஸ் ரீஸ் வில்லியம்ஸ், செபாஸ்டியன் லிண்ட்ஸ்ட்ரோம், கெட்டி இமேஜஸ், ஆண்ட்ரேஸ் கெரெஸ், குல்னாஸ் ஜுஸ்பேவா, கிளாரி கோட்லி, ஆஸ்திரேலிய நீர் சங்கம், லாரா கோதிலா பிரதம அமைச்சர் அலுவலகம், ஓஷியா டோமெட்டி, மரியா எஸ்மே டெல் ரியோ,ஜியோ சோலிஸ், லாரன்ட் செரோஸ்ஸி, டி.சி.எம்.எஸ்., இன்டி கஜார்டோ, மோர்கன் மில்லர், ஹெலினா பிரைஸ் ஹாம்ப்ரெக்ட், ஜான் ருஸ்ஸோவின் மரியாதை, ஐ.நா. பெண்கள் / பிளாய் புட்பெங்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: