You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா அகதியாக, துயரங்கள், தடைகளைக் கடந்து விமானி பயிற்சி பெற்ற பெண் மாயா கசல்
- எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்
- பதவி, பிபிசி நியூஸ்
மாயா கசல் சிரியாவின் உள்நாட்டு போரிலிருந்து தப்பி வந்த லட்சக்கணக்கானவர்களில் ஒருவர். ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் அவருக்கு அகதி நிலை வழங்கப்பட்டது. ஆனால் அவர் தனது கல்வியை பெற போராட வேண்டியிருந்தது. அவர் தற்போது விமானியாக தகுதி பெற்றுள்ளார். ஐ.நா அகதிகள் முகமையின் நல்லெண்ணத் தூதராகவும் உள்ளார்.
"ஓவ்வொரு முறை நான் விமானத்திற்குள் நுழையும்போதும் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். நான் இப்போது ஒரு பைலட். எனது வாழ்க்கையை பின்னோக்கி பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. பள்ளிகளிலேயே நிராகரிக்கப்பட்டவள் நான்"
மாயா கசலுக்கு 16 வயது இருக்கும்போது தனது உடன் பிறந்தவர்கள் மற்றும் தாயுடன் சிரியாவிலிருந்து தப்பி பிரிட்டனில் இருந்த தனது தந்தையுடன் சேர வந்தார்.
ஆறு ஆண்டுகள் சென்றுவிட்டன. தனியார் பைலட் அனுமதி பெற்ற ஒரே சிரியா அகதி மாயா கசல் மட்டுமே. தற்போது பயணிகள் விமானப் பயிற்சியில் உள்ளார். ஆனால் இது கடினமான பாதைதான்.
அவர் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகருக்கு வந்தபோது மீண்டும் கல்வி பெறலாம் என்று நினைத்தார். ஆனால் மேற்கல்வி பெறுவது அத்தனை எளிதாக இல்லை.
"நான் ஒரு சிரியா அகதி என்றவுடன் நான் அதிகம் படிக்காதவள் என்று நினைப்பார்கள். அதேபோன்று நான் பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வந்தவள் என்று நினைப்பார்கள் ஆனால் அது உண்மையில்லை" என்கிறார் 22 வயது மாயா.
’மனமுடைந்துவிட்டேன்`
மாயா பிரிட்டனுக்கு வந்த பிறகு 16 வயதுக்கு மேல் கல்வியோ, பயிற்சியோ பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் கல்விக்காக நான்கு இடங்களில் விண்ணப்பித்திருந்தார். இயற்பியல் மற்றும் கணிதத்தில் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் தேர்சி செய்யப்படவில்லை,
ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையர், பிரிட்டனில் சிரியாவின் பள்ளி சான்றிதழ்கள் அங்கீரிக்கப்படுவதில்லை என்பதால் அவர் நிராகரிக்கப்பட்டார் என்று தெரிவிக்கிறார்.
"எனது கதையை கேட்க யாரும் இல்லை. அதுதான் என்னை பாதித்த்து. பள்ளிகளில் நிராகரிக்கப்படும்போது நான் மனமுடைந்துவிட்டேன்," என்கிறார் மாயா.
ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத் தகவல்படி உலகம் முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான சிரியா அகதிகள் வாழ்கின்றனர்.
அதில் 20 ஆயிரம் பேருக்கு பிரிட்டனில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன் அகதிகள் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, சமூக ஊடகங்களில் ஐரோப்பாவிற்குள் அகதிகள் படையெடுப்பது போன்ற புகைப்படங்கள் வலம் வந்தன. அதில் சிலர் அகதிகளுக்கு எதிரான போக்கிலும் விமர்சனம் செய்தனர்.
"ஊடகங்களின் சித்தரிப்பால் அகதிகள் என்றால் பணம் திருட வந்தவர்கள் என மக்கள் நினைக்கிறார்கள்" என்கிறார் மாயா.
"அதேபோல என்னை குறித்து யோசிக்க எனக்கு விருப்பமில்லை. அகதிகள் என்ற சொல்லே அவ்வளவு நன்றாக இல்லை." என்கிறார்.
பல மாற்றங்கள்
மாயா குழந்தையாக இருக்கும்போது நாட்டின் தூதராக வேண்டும் என நினைத்தார். அரசியல் அறிவியல் படித்து தூதர் ஆக வேண்டும் என நினைத்தார். ஆனால் சிரியாவில் நடந்த போரால் தன் நாட்டின் மீதிருந்த நம்பிக்கை அவருக்குப் போய்விட்டது. நாட்டின் பிரதிநிதியாக இருக்கவும் விரும்பவில்லை அவர்.
இத்தனைக்குப் பிறகும் சிரியாவில் சந்தோஷமாக கழித்த தனது சிறுவயது நினைவுகள் குறித்து பேசுகிறார் மாயா. குடும்பம் முழுவதும் அருகருகில் வாழ்ந்த மகிழ்ச்சித் தருணம் அது.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கசின் புறநகர் பகுதியில் மாயாவின் தந்தை துணி தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் அந்த பகுதி ராணுவத்தால் சூழப்பட்ட பிறகு வேறு வழியில்லாமல் அதை விட்டுவிட்டு பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.
சிரியாவில் தனது கல்வியை முடிக்க மூன்று முறை பள்ளி மாற வேண்டியிருந்தது மாயாவுக்கு.
2015ஆம் ஆண்டு மாயாவின் குடும்பம் புதிய எதிர்காலம் என்ற கனவை சுமந்து கொண்டு பிரிட்டனுக்கு வந்தது. ஆனால் அந்த கனவுக்கான கதவுகள் மாயாவிற்கு திறக்கப்படவில்லை.
மாயாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள 83 மில்லியன் அகதிகள் கல்வி பெறுவது பெரும் சிரமம்தான்.
சர்வதேச அளவில் அகதிகளில் வெறும் 3 சதவீதத்தினர் மட்டுமே உயர் கல்வி பெறுகின்றனர். மற்றவர்களில் 37 சதவீதம் பேருக்கு இருக்கும் இந்த வாய்ப்பு அகதிகளில் வெகு குறைவுதான்.
தொடர் நிராகரிப்புகளும், குறைத்து மதிப்பிடுதலும்தான் தன்னை தொடர்ந்து போராட வைத்தது என்கிறார் மாயா.
மாறிய திசை
மாயா பொறியியலில் தேசிய டிப்ளமா படிப்பில் சேர ஒப்புக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க லண்டன் சென்றபோது ஹீட்த்ரூ விமான நிலையத்திற்கு அருகில் தனது தாயுடன் விடுதி ஒன்றில் தங்கினார். அங்குதான் அவர் விமானங்கள் புறப்படுவதையும் தரையிறங்குவதையும் பார்த்துள்ளார். ஒரு புதிய கனவு அவரை உலுக்கியது. உடனடியாக பைலட் ஆக வேண்டும் என முடிவு செய்துவிட்டார்.
இருப்பினும் சிலர் `நீ ஒரு பெண் நீ எதற்கு பைலட்டாக வேண்டும் என நினைக்கிறாய்? யார் உனக்கு வேலை கொடுப்பார்கள்` என்று கேள்வி எழுப்பினர்.
பயணிகள் விமானப் போக்குவரத்துறை என்பது இன்னும் ஆண்கள் அதிகளவில் உள்ள துறையாகவே உள்ளது. சர்வதேச அளவில் 20ல் ஒருவர் மட்டுமே பெண்ணாக உள்ளனர் என்கிறது ஏர் லைன் விமானிகள் கூட்டமைப்பு.
2017ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் மாயாவுக்கு விமான போக்குவரத்து பொறியியல் மற்றும் விமானிக்கான படிப்பில் இடம் கிடைத்தது
அதன்பின் பகுதிநேர பணி செய்து, நிகழ்ச்சிகளில் உரையாற்றி, கடன் வாங்கி தனது கனவை நிறைவேற்றப் போராடியுள்ளார்.
"விமானியாக எனது முதல் அனுபவம் கடினமானதாக இருந்தது. எனக்கு அது பிடிக்கவில்லை. நான் நினைத்த மாதிரி அது இல்லை," என்கிறார் மாயா.
" எனது காதுகளில் வலி வந்துவிட்டது. எனது தலைவலித்தது. நாங்கள் புறப்பட்டோம் ஆனால் ரேடியோவில் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை"
ஆனால் பிரிட்டன் வந்த நான்கு ஆண்டுகளில் அவர் தனியாக விமானத்தை இயக்கினார். அவர் பறக்க தயாராக இருந்தபோது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரேடியோவில் அவர் பெயர் ஒலித்தது. அவருக்கு புல்லரித்த தருணம் அது.
"எனது முதல் அனுபவம் மிக சிறியது. விமான நிலையத்தை சுற்றி வந்து தரையிறங்கினேன். அது மிகச் சிறந்த அனுபவம். எனக்கு பெருமையாக இருந்தது".
தனது பட்டப்படிப்பில் மாயா 2:1 பகுதியை முடித்துள்ளார். தற்போது அவர் முதுநிலை படிப்பில் சேர விரும்புகிறார். பயணிகள் விமானிக்கான அனுமதியை பெற வேண்டும். அதற்கு அவர் 150 மணி நேரங்கள் விமானியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும் 275 அமெரிக்க டாலர்கள் அவருக்கு செலவாகும்.
அவரின் படிப்பின் ஊடே அவர் அகதிகள் உரிமை குறித்தும் செயலாற்றி வருகிறார். அவர் TED-ல் பேசியுள்ளார். இந்த ஆண்டு ஐநா அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவிட் பயண கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணைய முகமை மாயாவை அகதிகள் முகாமிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. அதைபோல 2030ஆம் ஆண்டிற்குள் அகதிகள் எண்ணிக்கையில் 15% பேர் உயர் கல்வி பெறுவார்கள் என்றும் அந்த முகமை நம்புகிறது.
உணவு மற்றும் நீரை போன்று கல்வியும் முக்கியம் என மாயா நம்புகிறார். ஆனால் அதேசமயம் அகதிகள் குறித்த பார்வையை மாற்றி, அவர்களுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
"அகதிகளுக்கு உதவுவது மிக எளிதானது. அவர்களைப் பார்த்து சிரிப்பது, நகரம் குறித்து பேசுவது, பணி ஒன்றை பெறுவதற்கான உதவியை செய்வது என சின்ன சின்ன விஷயங்களை செய்யலாம்"
தனது வெற்றி பிறருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என மாயா நினைக்கிறார்.
"எனக்கு எதுவும் எளிதில் கிடைத்துவிடவில்லை என்பது பிறருக்கு புரிய வேண்டும். நான் சிரியாவிலிருந்து வந்துள்ளேன், ஒரு போர் சூழலிலிருந்து தப்பி வந்துள்ளேன். நான் ஒரு அகதி," என்கிறார்.
நான் பிரிட்டனிற்கு முதலில் வந்தபோது, எனக்கு உத்வேகம் அளிக்கும் ஓர் அனுபவம் குறித்து நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எனது நிலையில் இருந்து அதை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்க விரும்பினேன்.
மாயாவின் கதையை கேட்கும் மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்குவதாக அவர் தெரிவிக்கிறார். அதேபோன்று அகதிகள் குறித்த எதிர்மறையான எண்ணத்தை போக்க அது உதவுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
"நான் ஒரு அகதி என்பதாலோ அல்லது அரேபிய பெண் என்பதாலோ அல்லது பெண் என்பதாலோ என்னைப் பற்றி முன் முடிவுகள் வேண்டாம். எனது விமானத்தை நான் கட்டுப்படுத்துவது போல எனது வாழ்க்கையையும் என்னால் கட்டுப்படுத்த முடியும்." என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்