You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செப்டம்பர் 11 தாக்குதலில் உலக வர்த்தக மைய கட்டடங்கள் நொடியில் தகர்ந்த இரு காரணங்கள்
- எழுதியவர், கார்லோஸ் செரானோ
- பதவி, பிபிசி முண்டோ
செப்டம்பர் 11, 2001 அன்று, இரண்டு போயிங் 767 விமானங்கள் நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கட்டடமான இரட்டை கோபுரங்களின் மீது மோதியது.
காலை 8.45 மணிக்கு முதல் விமானம் வடக்கு கோபுரத்தைத் தாக்கியது. அந்தத் தீ 102 நிமிடங்கள் வரை எரிந்து கொண்டே இருந்தது, பின்னர் 10.28 நிமிடங்களில் இந்த கோபுரம் வெறும் 11 வினாடிகளில் சரிந்து வீழ்ந்தது.
காலை 09.03 மணிக்கு, விமானம் முதல் கோபுரத்தைத் தாக்கிய 18 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு விமானம் இரண்டாவது கோபுரத்துடன் மோதியது. 56 நிமிடங்கள், இந்த கோபுரம் தீ மற்றும் புகையுடன் போராடியது, அடுத்த 9 வினாடிகளில் சரிந்தது.
வடக்கு கோபுரத்தின் 47 வது மாடியில் வேலை செய்யும் புருனோ டெலிங்கர் அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார், "கட்டடம் விழும் சத்தத்திற்கு பிறகு, சில வினாடிகளுக்குள் இருள் சூழ்ந்தது. இரவை விட அடர்ந்த இருள், ஒரு கணம் அனைத்து சத்தங்களும் அடங்கின. என்னால் மூச்சு கூட விட முடியவில்லை."
"மூளை எதையும் சிந்திக்க முடியாததால், நான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன்." செப்டம்பர் 11 ம் தேதி நினைவு மற்றும் அருங்காட்சியகத்தில் இருந்து அவர் தனது கோரமான தருணங்களை விவரித்தார்.
கோபுரங்கள் இடிந்தது எதனால்?
மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்ஐடி) சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் எட்வர்டோ காஸெல் பிபிசி முண்டோவிடம், "இரண்டு கோபுரங்களும் இடிந்து விழுந்தது பயங்கரவாதத் தாக்குதலால் தான் என்பதை அனைத்து வல்லுநர்களும் ஏற்றுக்கொண்டனர்." என்று கூறினார்.
தாக்குதலில் கோபுரம் இடிந்த பிறகு, கட்டடத்தின் கட்டமைப்பு, பொறியியல் மற்றும் கட்டடக்கலை கண்ணோட்டத்தில் இரட்டை கோபுரங்களின் சரிவை ஆய்வு செய்த எம்ஐடியின் நிபுணர் குழுவின் தலைவராக காஸெல் இருந்தார்.
அபாயகரமான நிகழ்வு
2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எம்ஐடியின் ஆய்வு முடிவுகள், அமெரிக்க அரசின் தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐஎஸ்டி) கண்டுபிடிப்புகளுடன் நெருக்கமாகப் பொருந்துகிறது. இந்த அமைப்பு, கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து அறியும் பொறுப்பை ஏற்றிருந்தது. இதன் அறிக்கை 2008-ல் வெளியானது.
எம்ஐடி மற்றும் என்ஐஎஸ்டி இரண்டும் கோபுரம் இடிந்து விழ இரண்டு பெரிய காரணங்கள் ஒரே நேரத்தில் சம்பவித்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தன.
முதலில், விமானங்கள் மோதியதில் இரண்டு கட்டடங்களும் கடுமையான கட்டமைப்புச் சேதத்தைச் சந்தித்தன.
இரண்டாவதாக, மோதலுக்குப் பிறகு, கட்டடங்களில் தீ பல தளங்களுக்குப் பரவியது.
"தீ இல்லை என்றால், இந்தக் கட்டடங்கள் இடிந்து விழுந்திருக்காது" என்கிறார் காஸெல். மேலும் அவர், "தீ மட்டுமே ஏற்பட்டிருந்து கட்டடத்திற்கு வேறு எந்த விதமான கட்டமைப்புச் சேதமும் ஏற்படாமல் இருந்திருந்தாலும், இந்த இரட்டைக் கோபுரங்கள் சரிந்திருக்காது." என்று கூறுகிறார்.
"அந்தக் கட்டடம் எதையும் தாங்கும் உறுதியுடன் அமைக்கப்பட்டிருந்தது." என்கிறார் பொறியாளர் காஸெல்.
என்ஐஎஸ்டி அறிக்கையின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இந்தக் கட்டடத்தின் வடிவமைப்பின் போது இருந்த மிகப்பெரிய வணிக விமானமான போயிங் 707 விமானத்தின் மோதல்களைத் தாங்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருந்தது என்று என்ஐஎஸ்டி-யின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இருப்பினும், என்ஐஎஸ்டி ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வர, தாங்கள் பயன்படுத்திய அளவுகோல்கள் மற்றும் முறைகள் பற்றி எந்தத் தகவலையும் வழங்கவில்லை.
இரட்டை கோபுரங்கள் எப்படி உருவாக்கப்பட்டன?
1960 இல் இந்த இரட்டை கோபுரங்களின் கட்டுமானம் தொடங்கியபோது, அந்தக் காலத்தின் தரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வடிவமைப்பு அவர்களிடம் இருந்தது.
இரண்டும் லிஃப்ட் மற்றும் மாடிப்படி கொண்ட எஃகு மற்றும் கான்கிரீட் கட்டடங்கள்.
எஃகுக் கம்பிகள், ஒவ்வொரு தளத்திலும் கிடைமட்டமாக நிறுவப்பட்டன, அவை மையத்தில் தொடங்கி, கட்டிடத்தின் வெளிப்புற சுவர்களை உருவாக்க அமைக்கப்பட்ட எஃகு கம்பிகளுடன் இணைக்கப்பட்டன.
எஃகுக் கம்பிகளின் குழுக்கள் ஒவ்வொரு தளத்தின் எடையையும் தூணை (மையம்) நோக்கி விநியோகிக்கின்றன. அதே நேரத்தில், ஒவ்வொரு தளமும் அதற்கு (தூண்) தனித்தனியாக ஆதாரமாக இருக்கிறது. அதனால் அது வளைந்து போகாது. சிவில் இன்ஜினியரிங்கில் இது பக்லிங் என்று அழைக்கப்படுகிறது.
இரட்டை கோபுரங்களில் நிறுவப்பட்ட எஃகு அமைப்பு கான்கிரீட்டால் மூடப்பட்டிருந்தது, இது தீ ஏற்பட்டால் கம்பிகளைப் பாதுகாக்கப் போதுமானது.
விட்டங்களும் தூண்களும் மெல்லிய தீயெதிர்ப்பு அடுக்கால் மூடப்பட்டிருந்தன.
தீ பரவ உதவிய காற்று
இரண்டு கோபுரங்களும் ஒரு பெரிய போயிங் விமானத்தால் மோதப்பட்டன. போயிங் 707 மோதியதைத் தாங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டன, ஆனால் அதைவிடப் பெரிய போயிங் 767 மோதியது.
மின்கம்பங்கள் மற்றும் தூண் கட்டமைப்பை உள்ளடக்கிய தீயணைப்பு இன்சுலேட்டரைத் தகர்த்த இந்த மோதலின் காரணமாக கட்டடத்தின் தூண்கள் கடுமையாகச் சேதமடைந்தன என்று என்ஐஎஸ்டி அறிக்கை கூறுகிறது.
"மோதலால் உருவாகும் அதிர்வுகள் எஃகு மீது இருந்த தீயெதிர்ப்புப் பூச்சை உடைத்ததால், அந்தக் கம்பி, எளிதில் நெருப்புக்கு இரையானது." என்று காஸெல் விளக்குகிறார்.
இதனால் முழுக் கட்டடமும் தீப்பிழம்புகளுக்கு இரையானது. கட்டமைப்புச் சேதமும் உண்டானது.
தீ பரவியபோது, கட்டிடத்தின் வெப்பநிலை 1000 டிகிரி சென்டிகிரேட்டை எட்டியது, இதன் காரணமாக ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்தன. ஜன்னல்கள் உடைந்ததால், வெளிக்காற்று உள்ளே நுழைந்து தீ பரவுவதற்குக் காரணமானது." என்கிறார் காஸெல்.
"பறக்கும் வெடிகுண்டு"
ஒவ்வொரு விமானத்திலும் சுமார் 10,000 கேலன் எரிபொருள் (37,850 லிட்டருக்கு மேல்) இருந்ததாக அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
"அவையே பறக்கும் வெடிகுண்டுகளாகத் தான் இருந்தன" என்கிறார் காஸெல்.
அந்த எரிபொருளின் பெரும்பகுதி விமானம் மோதியதன் காரணமாக உருவான தீயில் எரிந்தது. மேலும் அதிக அளவில், கோபுரத்தின் கீழ் தளங்களில் விழுந்தது.
இது தீ பரவுவதற்கு உதவியது, மேலும் தீப்பிடிக்கக்கூடிய பல பொருட்களும் சேர்ந்து தீ பரவுவதை வேகப்படுத்தின.
எரியும் நெருப்பின் காரணமாக இரண்டு விஷயங்கள் நடந்ததாக எம்ஐடியின் பொறியாளர்கள் கூறுகின்றனர்.
முதலில், மிக அதிக வெப்பம் ஒவ்வொரு தளத்திலும் கம்பிகள் மற்றும் ஸ்லாபுகள் வரை பரவியது. இதன் காரணமாக, கம்பிகள், ஸ்லாப்பில் இருந்து பிரிக்கப்பட்டன.
அதே நேரத்தில், பீம் விரிந்து, தூணை வெளியே தள்ளியது.
பின்னர் மற்றொரு விளைவு நடந்தது.
தீப்பிழம்புகள் கம்பிகளின் இரும்பை மென்மையாக்கத் தொடங்கின, இதனால் அவை நெகிழ்ந்தன.
இதன் காரணமாக, இரட்டை கோபுரத்தின் வலுவான அமைப்பு ஒரு கயிறு போல் தோன்ற ஆரம்பித்து முழுக் கட்டடமும் தூணை உள்நோக்கி தள்ளத் தொடங்கியது.
"இது கோபுரத்திற்கு ஆபத்தானது," என்கிறார் காஸெல்.
கட்டடம் முற்றிலும் எரிந்தது
தூண்கள் இப்போது நேராக இல்லை. காரணம், பீம்கள் அவற்றை முன்னும் பின்னுமாக வளைக்க, அவை வளையத் தொடங்கின.
இவ்வாறு, என்ஐஎஸ்டி அறிக்கையின்படி, தூண்கள் வளைந்து இடிந்து விழத் தொடங்கின. அவை இணைக்கப்பட்ட கம்பிகள், அவற்றை உள்நோக்கி இழுத்தன.
மறுபுறம், காஸெலின் பகுப்பாய்வின் படி, விட்டங்கள் தூண்களை வலுவாக இழுக்கின்றன, அவை தூண்களுடன் இணைக்கப்பட்டிருந்த அவற்றின் நட்டு போல்ட்களை உடைத்தன. இதன் காரணமாக இந்தத் தளங்கள் இடிந்து விழுந்து அந்த இடிபாடுகளே அவற்றின் அடிப்பகுதியில் அதிக எடையை உருவாக்கத் தொடங்கின.
இது ஏற்கனவே பலவீனமான தூணில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, முழு கட்டடமும் இடிந்து விழுந்தது.
கட்டடம் இடிந்து விழுந்தவுடன், அதன் தளங்களுக்கு இடையில் இருந்து காற்று வெளியேறி வேகமாக எல்லா இடங்களிலும் பரவியது என்று காஸெல் விளக்குகிறார். இதன் காரணமாக அங்கு பலத்த காற்று வீசியது. அங்கே தூசி மேகம் உருவாவதற்கு இதுதான் காரணம்.
சில வினாடிகளில் இரு கட்டடங்களும் மறைந்துவிட்டன, ஆனால் அடுத்த பல நாட்களுக்கு இந்தத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.
20 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த தாக்குதலின் திகில் மற்றும் வலி குறையவில்லை.
பிற செய்திகள்:
- உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?
- கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின்
- பருமனான பெண்களுக்கு ப்ரா தயாரிப்பதில் புரட்சி செய்யும் பெண்
- செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்காவின் 'இதயத்தை' காயப்படுத்திய பயங்கரவாதிகள்
- இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கையில் உணவுப் பஞ்சமா - உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்