You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின்
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறி இனி தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வு முடிவுகளை சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதன் விவரங்களை பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வாசித்தார்.
"கீழடி என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துள்ளது. அதே உணர்வைத் தாங்கி தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை, கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, மயிலாடும்பாறை, கொடுமணல், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் கிடைத்த அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் செலவில் பொருநை அருங்காட்சியகம் உருவாக்கப்படும்.
தமிழ் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதி பெற்று தொல்லியல் ஆய்வுகளை நடத்தும்.
இதன் முதற்கட்டமாக தற்போது கேரளாவில் பட்டணம் என்ற பெயரில் உள்ள முசிறி, ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காடு, ஒரிசாவில் உள்ள பாலூர் ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடத்தப்படும்.
அன்றைய ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய எகிப்தின் குசிர் அல் காதிம், பெர்னிகா, ஓமன் நாட்டின் கோர்ரோரி ஆகிய இடங்களில் தமிழ்நாட்டோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதிசெய்யும் தமிழி எழுத்து பொரிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில் அந்நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ராஜேந்திரச் சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனீசியா, வியட்னாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் தொல்லியல் வல்லுநர்களின் உதவியோடு, தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் நிறுவுவதே தமிழ்நாடு அரசின் கடமை" என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- பருமனான பெண்களுக்கு ப்ரா தயாரிப்பதில் புரட்சி செய்யும் பெண்
- செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்காவின் 'இதயத்தை' காயப்படுத்திய பயங்கரவாதிகள்
- இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கையில் உணவுப் பஞ்சமா - உண்மை என்ன?
- கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வழக்கு: திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பின் வரலாறு
- ஆப்கானிஸ்தானில் தாலிபனின் இடைக்கால அமைச்சரவை - யாருக்கு என்ன பொறுப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்