விநோதய சித்தம் விமர்சனம்: சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Vinodhaya Sitham/Trailer
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: தம்பி ராமைய்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, தீபக், முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ்; இசை: சத்யா சி; இயக்கம்: சமுத்திரக்கனி; வெளியீடு: ZEE 5 OTT
படத்தின் பெயர் சற்று விநோதமாக இருந்தாலும், தமிழ் படம்தான். 'டம்மீஸ் ட்ராமா' என்ற குழுவினரால் மேடை நாடகமாக நடத்தப்பட்டுவந்த இந்த விநோதய சித்தம் தற்போது சினிமாவாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில் பெரும்பாலும் மேடை நாடகங்களே சினிமாவாகிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்தத் தொடர்பு அற்றுப்போய்விட்டது. இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு, மேடையிலிருந்து ஒரு கதை திரைக்கு வந்திருக்கிறது.
படத்தின் கதை இதுதான். கதாநாயகனான பரசுராம் (தம்பி ராமைய்யா) மிகவும் கண்டிப்பான ஒரு மனிதர். எல்லாம் ஒழுங்குடன் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவர். தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் தானே இயக்குவதாகக் கருதுபவர். மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் பரசுராம்.
அடுத்த நாள் 25வது திருமண நாளைக் கொண்டாடவிருந்த நிலையில், திடீரென ஒரு விபத்தைச் சந்திக்கிறார். அதில் மரணமடையும் அவரை அழைத்துச் செல்ல காலன் வருகிறான். தனக்கு நிறைய வேலைகள் இருப்பதால் சற்று அவகாசம் தரும்படி கேட்கிறார். 90 நாட்கள் அவகாசம் தருகிறான் காலன். அந்த 90 நாட்களில் பரசுராமிற்கு ஏற்படும் புரிதல்கள்தான் மீதிப் படம்.
இம்மாதிரி படங்களில் திரைக்கதையும் பாத்திரங்களின் நடிப்பும் மிக மிக முக்கியம். இரண்டுமே இந்தப் படத்தில் சிறப்பாக கைகூடி வந்திருக்கின்றன. பரசுராமாக நடித்திருக்கும் தம்பி ராமைய்யா, படத்தின் முதல் காட்சியில் குளித்துவிட்டு, அலுவலகத்திற்குப் புறப்படுவார். அந்த ஒரு காட்சி போதும், அவர் தேர்ந்த நடிகர் என்பதைச் சொல்ல. படம் முழுக்க பின்னியெடுத்திருக்கிறார் மனிதர்.

பட மூலாதாரம், Vinodhaya Sitham/Trailer
திரைக்கதையும் சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தில் வரும் ஒரு காட்சிகூட தேவையில்லாத காட்சியாக அமையவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சுவாரஸ்யமான அம்சம், அந்த காட்சியை ரசிக்கவைக்கிறது.
இந்தப் படத்தில் காலனாக நடித்திருப்பது படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி. படங்களில் ஆம்புலன்ஸ் டிரைவராக வந்தால்கூட அறிவுரையை அள்ளி வீசுவார். அப்படியிருக்கும்போது காலனாக வந்தால் சும்மா விடுவாரா என்ற அச்சம் ஆரம்பத்தில் ஏற்படுகிறது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளிலேயே அந்த அச்சத்தைப் போக்கிவிடுகிறார் மனிதர். ஒவ்வொரு காட்சியிலும் காலனாக வரும் சமுத்திரக்கனி என்ன சொல்லப்போகிறார் என கவனிக்க வைத்திருக்கிறார்.
தம்பி ராமைய்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீரஞ்சனி, முனீஷ் காந்த், ஜெயப்பிரகாஷ், சஞ்சிதா ஷெட்டி என எல்லாருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். திரை ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத முகங்கள் சிலவும் வந்தாலும், அவர்களும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். தம்பி ராமைய்யா ஏற்கனவே தேசிய விருதைப் பெற்றவர். இன்னும் பல விருதுகளுக்குத் தகுதியானவர் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.
சில இடங்களில் மேடை நாடகத்தின் தாக்கம் தெரிகிறது. ஆனால், மிகச் சில இடங்களில்தான். ஒரு கட்டத்தில் மேடை நாடகமா, திரைப்படமா என்ற எல்லைகளை மறந்து ரசிக்கவைக்கிறது படம்.
அரண்மனை - 3 படத்திற்கு இசையமைத்த சி. சத்யாதான் இந்தப் படத்திற்கும் இசை. அவரா இவர் என கேட்க வைக்குமளவுக்கு, சிறப்பாக அமைந்திருக்கிறது பின்னணி இசை.
தம் இருப்பு குறித்தும் தாம் செய்யும் காரியங்கள் குறித்தும் மனிதர்கள் கொண்டிருக்கும் தேவையில்லாத நம்பிக்கைகள், பெருமிதங்கள் ஆகியவற்றை உடைக்கும் தத்துவ உரையாடல்தான் இந்தப் படம். ஆனால், அதை சுவாரஸ்மான சினிமாவாக்கியிருப்பதில் சமுத்திரக்கனியின் திறமை பளிச்சிடுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












