டாக்டர்: சினிமா விமர்சனம் - சிவகார்த்திகேயன் படம் எப்படி உள்ளது?

SIVAKARTHIKEYAN DOCTOR
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், இளவரசு, வினய், மிலிந்த் சோமன்; ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்; இசை: அனிருத்; இயக்கம்: நெல்சன் திலீப் குமார்.

கோலமாவு கோகிலா படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் படம் இது. கோலமாவு கோகிலா வித்தியாசமான கதையுடன் இருந்ததால், இந்த டாக்டர் திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

டாக்டர் வருண் ராணுவத்தில் பணியாற்றும் ஒரு மருத்துவர். எல்லா ஒழுங்குகளையும் கடைப்பிடிப்பவர். இதன் காரணமாகவே அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பத்மினி, வருணை திருமணம் செய்ய மறுத்துவிடுகிறாள். இந்த நேரத்தில் பத்மினியின் அண்ணன் மகள் காணாமல் போய்விடுகிறாள். அந்தக் குழந்தையைத் தேடுவதில் உதவ இறங்குகிறார் டாக்டர் வருண். குழந்தையைக் கடத்தியது யார், எதற்காக, எப்படி மீட்கிறார்கள் என்பது மீதிக் கதை.

ஒரு சீரியசான திரில்லர் படத்தைப் போலத் துவங்கினாலும், விரைவிலேயே இது ஒரு பிளாக் காமெடி திரைப்படம் என்பது புரிந்துவிடுகிறது. கிட்டத்தட்ட கோலமாவு கோகிலாவைப் போல. குழந்தை கடத்தல் என்ற தீவிரமான விஷயத்தை அபத்த நகைச்சுவை காட்சிகளோடு நகர்த்திச் செல்கிறார்கள்.

டாக்டர் வருணாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் பாத்திரம் ஆரம்பத்தில் தடுமாற்றத்தைத் தருகிறது. ஒழுக்கமானவராக இருக்க வேண்டுமென்றால், ஏதோ எந்திரத்தைப் போல இருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டார்களா எனத் தெரியவில்லை. இதனால், படத்தின் துவக்க காட்சிகள் சற்று நெருடுகின்றன. ஆனால், விரைவிலேயே சமாளித்துக்கொள்கிறார்.

படம் நகரநகர யோகிபாபு, ரெடின் போன்ற கலகலப்பான பாத்திரங்கள் கதையில் வந்து சேரும்போது, ஓர் அக்மார்க் black comedy படமாக உருவெடுக்கிறது டாக்டர். குறிப்பாக, யோகிபாபு, ரெடின், சுனில் (சீதக்காதி படத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வந்து கலக்குவாரே அவர்தான்) ஆகியோர் பின்னியிருக்கிறார்கள்.

யோகிபாபு நடித்து சமீபத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் அவரது நகைச்சுவை மீதே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தப் படத்தில் மனிதர் மீண்டும் பழைய பாணிக்குத் திரும்பியிருக்கிறார். அதிலும், குழந்தைகளைப் போல கையைத் தட்டிவிட்டு விளையாடும் காட்சிகள் வயிறுவலிக்கச் சிரிக்கவைக்கின்றன.

டாக்டர்: சிவகார்த்திகேயன் படத்தின் சினிமா விமர்சனம்

அதேபோல, ரெடின் கின்ஸ்லின் சற்று ஏகமாக சத்தம்போட்டாலும் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் புன்னகையையாவது ஏற்படுத்தத் தவறுவதில்லை. தமிழ் சினிமாவில் அபத்த நகைச்சுவைக்கு ஓர் உருவம் கொடுத்தால் அது ரெடினாகத்தான் இருக்கும். அதேபோல, சுனிலும் அவரது அடியாளாக வரும் நபர்களும் கலக்கியிருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்பான அம்சங்கள் இருந்தும் பல இடங்களில் திரைக்கதை தேங்கிப்போவதால் சோர்வு ஏற்படுகிறது. குறிப்பாக, படம் கோவாவுக்கு நகர்ந்த பிறகு, சில காட்சிகளில் ரொம்பவுமே பொறுமையைச் சோதிக்கிறார்கள்.

வில்லன் பாத்திரத்தின் வடிவமைப்பும் சற்று ஒவ்வாமல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கதாநாயகனோ, அவன் தரப்பினரோ கையில் சிக்கும்போது அவர்களை உடனடியாக தீர்த்துக்கட்டாமல், "சித்ரவதை செய்து கொல்கிறேன், மனதை காயப்படுத்தி கொல்கிறேன்" என்கிற பெயரில் நேரத்தை நீட்டிக்கொண்டே செல்ல, அதற்குள் கதாநாயகன் தப்பிவிடுகிறான்.

படத்தின் இறுதிக் காட்சிக்கு சற்று முன்பாக, கதாநாயகன் உட்பட அவன் தரப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் தனித்தனித் தூணில் கட்டிவைத்து கீழே தீயை வைத்து கொல்ல முயல்கிறான் வில்லன். அடியாட்கள் விறகுக்கட்டையை அடுக்கிக்கொண்டிருக்க, சாவதற்கு முன்பாக, நாயகனுடன் பேச விரும்புகிறேன் என்கிறாள் நாயகி. 1960களின் திரைப்படத்தில் வருவது போன்ற இந்தக் காட்சியை 'நினைவுகளில் மூழ்கும்' உணர்வைத் தருவதற்காக இயக்குநர் வைத்திருந்தாரா என்று தெரியவில்லை.

அதேபோல, படத்தின் இறுதியில் கர்ணல் என்று சொல்லப்படும் ஒருவர் ஏகப்பட்ட எந்திரத் துப்பாக்கிகள், கிரனைடு குண்டுகளை ஏவும் துப்பாக்கிகளோடு வந்து நாயகனை மீட்கிறார். ராணுவ வீரர்கள் பொதுவாக வெளியில் செல்லும்போது, எதற்கும் இருக்கட்டுமென நான்கைந்து துப்பாக்கிகளையும் சில ஏவுகணைகளையும் கையில் கொடுத்துவிடுவார்களா?

கதாநாயகி பிரியங்கா நன்றாகவே நடித்திருக்கிறார். அதேபோல, பணிப்பெண்ணாக வரும் தீபாவும் சில காட்சிகளில் பிரகாசிக்கிறார். அனிருத்தின் இசையில் படத்தின் இறுதியில் வரும் பாடல் சிறப்பாக இருக்கிறது. ஆனால், ஆரம்பித்து அரை மணி நேரத்திவ்ற்குள் இரண்டு பாடல்களை வைத்திருப்பது சற்று அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

படத்தில் உள்ள சின்னச்சின்ன பலவீனங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரித்துவிட்டு வரத்தக்க படம்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :