You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆல்ஃபா அடிமை - சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: ஈஸ்வர், கல்கி, வினோத் வர்மா, அருண் நாகராஜ், ஜினோவி; ஒளிப்பதிவு: மணிகண்டன் மூர்த்தி; இசை: சத்யா & ஜென்; இயக்கம்: ஜினோவி. வெளியீடு: Sony Liv.
பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு மத்தியில் வெளியாகும் சில சிறிய பட்ஜெட் படங்கள் தங்கள் திரைக்கதையின் வலிமையால் ரசிகர்களை வெகுவாக ஆச்சரியப்படுத்திவிடும். அப்படி ஒரு திரைப்படம்தான் இந்த ஆல்ஃபா அடிமை.
ஒரு சின்ன நிகழ்வை வைத்துக்கொண்டு, எந்த அளவுக்கு சுவாரஸ்யப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். மயில்சாமி ஒரு சின்ன கஞ்சா வியாபாரி. அவன் வீட்டில் பத்து லட்ச ரூபாய் கஞ்சா இருக்கும்போது காவல்துறை ரெய்டுக்கு வரும் தகவல் கிடைக்கிறது. அதனால், அந்த கஞ்சாவை கோவையிலிருந்து ஊட்டிக்குக் கொண்டுசெல்ல மயில்சாமியும் அவன் கூட்டாளிகளான ஆறு, பொன்னன் ஆகியோரும் இணைந்து திட்டமிடுகிறார்கள். இந்தப் பயணமும் பயணத்தின் முடிவும்தான் மீதிக் கதை.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படம், ஓர் இடத்தில்கூட தொய்வடையாமல் ஒரே வேகத்தில் செல்வது சிறப்பாக இருக்கிறது. படத்தின் துவக்க காட்சியில், நான்கைந்து நண்பர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சிக்கும் பிரதான கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அந்தக் காட்சியில் வரும் ஒரு நபர் பேசும் நீளமான வசனம் ஒன்று, 'அட' என ஆச்சரியப்படுத்துவதோடு, படத்தை தொடர்ந்து பார்க்கவைக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
எந்த சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தாத விதத்தில் அறிமுகமாகிறது பொன்னன் என்ற பாத்திரம். ஆனால், இந்த பொன்னன் மெல்ல மெல்ல கதையின் மையப் பகுதிக்கு வருவதோடு, ஒரு கட்டத்தில் முழுக் கதையையும் ஆக்கிரமித்துவிடுகிறான். அந்த பாத்திரம் பெரிதாக, பெரிதாக படத்தில் நிலவும் சஸ்பென்சும் அச்சமும் கூடிக்கொண்டே போகிறது.
ஒரு வீடு, ஒரு கார் - இவைதான் படம் நெடுக வருகின்றன. ஆனால், ஒரு இடத்தில்கூட சலிப்புத்தட்டாமல் நகர்கிறது கதை. ஒரு கட்டத்திற்குப் பிறகு காரும் அந்தக் காரில் பயணம் செய்யும் ஐந்து பேரும்தான் படத்தில் இருக்கிறார்கள். இந்த ஐந்து பேரின் குணாதிசயங்கள் அந்த ஓடும் காருக்குள் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
படத்தில் நடித்திருக்கும் அனைவருமே புதுமுகங்கள். ஆனால், எந்த இடத்திலும் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தைப் பார்க்கும் உணர்வே ஏற்படவில்லை. மயில்சாமியாக வரும் கல்கி, ஆறு என்ற பாத்திரமாக வரும் ஜினோவி, பொன்னனாக வரும் ஈஸ்வர் ஆகிய மூவரும் தேர்ந்த நடிகர்களைப் போல நடித்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, இசை போன்றவை உரிய பங்கைச் செய்திருக்கின்றன. சில இடங்களில் ஒலிப்பதிவு சுமாராக இருக்கிறது.
ஆனால், உறுத்தலான ஒரு விஷயம் படத்தில் உண்டு. தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த மிக கேலியான வசனங்கள் பல இடங்களில் வருகின்றன. அவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இயக்குனர் அளித்த பேட்டிகளின்படி பார்த்தால், இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, ஒரு ட்ரையாலஜியை எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அந்த ட்ரையாலஜியின் இந்த முதல் பாகம், அடுத்தடுத்த பாகங்கள் குறித்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தானில் தாலிபன் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டதா? கள நிலவரம் என்ன?
- ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த பிகார் எம்.எல்.ஏ: பயணிகள் புகார்
- உணவு இல்லை, ஆபத்தில் 50 லட்சம் மக்கள், உடனடி உதவி தேவை - ஐநா
- சங்க இலக்கியங்களை திராவிட களஞ்சியம் என்ற பெயரில் வெளியிடத் திட்டமா? அமைச்சர் விளக்கம்
- இரண்டு கைகளும் இல்லை; நீச்சல் போட்டியில் 4 தங்கப் பதக்கம் - யார் இந்த ஜெங் தாவோ?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்