You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 4 தங்கப் பதக்கம்: இரண்டு கைகளும் இல்லாத சீன வீரர் ஜெங் தாவோ சாதனை
சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார்.
"என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!" என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங்.
குழந்தையாக இருக்கும்போதே தமது கைகளை இழந்த ஜெங், டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் ஃப்ரீஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், பட்டர்ஃபிளை நீச்சல் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தி பதங்கங்கள் வென்றார். இவை அனைத்துமே உலக சாதனை அல்லது பாராலிம்பிக் போட்டி அளவிலான சாதனைகள்.
சீனாவின் 500வது பாராலிம்பிக் பதக்கம்
புதன்கிழமை நடந்த 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் இறுதிப் போட்டியில் அவர் நிகழ்த்திய பாராலிம்பிக் போட்டி அளவிலான சாதனையை சீனாவின் சமூக ஊடகங்களில் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். காரணம் கோடைகால பாராலிம்பிக் போட்டிகளில் சீனா வென்ற 500வது தங்கப் பதக்கம் இது. 1984ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் முதல் முதலாக சீனா பங்கேற்றது.
இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெங், "டோக்யோ 2020 பாராலிம்பிக் போட்டிதான் என் கடைசி பாராலிம்பிக் போட்டியாக இருக்கும் என்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முழு முயற்சியையும் மேற்கொண்டேன். இதுதான் இதுவரை நான் பங்கேற்ற பாராலிம்பிக் போட்டிகளிலேயே எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது," என்றார்.
முன்னதாக, 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் ஓர் உலக சாதனை படைத்தார் ஜெங். அந்த தூரத்தை அவர் 31.42 விநாடிகளில் நீந்திக் கடந்தார்.
இந்தப் போட்டிக்குப் பிறகுதான் அவர் தனது இரண்டு வயது மகளிடம் வீடியோ கால் மூலம் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இந்த வீடியோதான் பிறகு வைரலாக பகிரப்பட்டது.
இந்த போட்டிக்காக நீச்சல் குளத்தில் வாயில் ஒரு ஷீட்டைக் கவ்விக் கொண்டிருந்த அவர் தம்மை உதைத்துத் திருப்பிக் கொண்டதைப் பார்த்த சமூக ஊடகப் பயனர்கள் அவரது உடல் வலுவைப் பார்த்து ஆச்சரியத்தை வெளியிட்டனர். அவர் தங்களுக்கு ஊக்கம் தருவதாகவும், பெருமிதமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
டோக்யோ பாராலிம்பிக் போட்டிக்கான பயிற்சியில் ஜெங் ஒவ்வொரு நாளும் 10 கி.மீ. தூரம் நீந்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
13 வயதில் விளையாட்டுப் போட்டிக்கு வந்த அவர், 19 வயதில் முதல் முதலாக சர்வதேச நீச்சல் போட்டி ஒன்றில் பங்கேற்றார். நெதர்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி அது.
அவருக்கு முதல் பாராலிம்பிக் தங்கப் பதக்கம் 2012ம் ஆண்டு கிடைத்தது. லண்டனில் நடந்த அந்தப் போட்டியில் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் அவர் தங்கம் வென்றார்.
இதுவரை 9 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார் ஜெங் தாவோ.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்