You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது? எப்படி உதவி செய்வது?
- எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
- பதவி, பிபிசி மராத்தி சேவை
55 வயதாகும் சாந்தாபாயின் குடும்பத்தில் எல்லாம் நன்றாகவே நடக்கிறது. கணவருக்கு நல்ல சம்பளம், படித்து முடித்த குழந்தைகள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சாந்தாபாயால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, அவருக்கு எதுவும் செய்யப் பிடிப்பதில்லை.
அன்றாட வாழ்வில் அவர் மகிழ்ச்சியை உணரவில்லை. தூக்கம் கெடுகிறது, அடிக்கடி வயிற்றுத் தொல்லைகள் வருகின்றன. அவரது நடவடிக்கைகள் மாறியிருப்பதைக் குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்தார்கள். சிலர், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க அவர் இப்படி செய்கிறார் என்றார்கள். வேறு சிலரோ அதீத மகிழ்ச்சியால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொன்னார்கள்.
சாந்தாபாய்க்கு ஏதோ பிரச்னை என்று அவர் கணவர் உணர்ந்தார். ஆனால் கூடுதல் பொறுப்புகளை அவர் ஏற்க விரும்பவில்லை என்பதால் "எல்லாம் சரியாகிவிடும்" என்ற பொதுவான சமாதானத்தோடு அவர் நிறுத்திக்கொண்டார். சாந்தாபாயும் சரி, அவரது குடும்பத்தினரும் சரி, அவர் மனம் பாதிக்கப்பட்டதை உணரவில்லை.
சாந்தாபாய் ஒரு கற்பனை உதாரணம்தான் என்றாலும் இதுபோல துன்பப்படுபவர்களைப் பல குடும்பங்களில் நாம் பார்க்க முடியும்.
உடலைப் போலவே மனதின் நலனும் பாதிக்கப்படும் என்பதையே பெரும்பாலானோர் உணர்வதில்லை. எல்லா வயதினருக்கும் மனம் சார்ந்த பிரச்னைகள் வரலாம்.
அன்றாட வாழ்வில் சில உணர்ச்சிப் பெருக்குகள் இயல்பானவை. ஆனால் மனதை சரிநிலையில் வைத்துக்கொள்வதற்கே சில நேரம் அடுத்தவர்களின் உதவி தேவைப்படும். அதுபோன்ற சூழலில் என்ன செய்யலாம் என்பதை விவாதிக்கலாம்.
மனநலம் பற்றிய பல தவறான புரிதல்கள் இருப்பதால் பொதுவாக மக்கள் இதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை, யோசிப்பதையே தவிர்க்கிறார்கள். ஆனால் இப்படி செய்யும்போது பாதிக்கப்பட்டவரின் மனம் சார்ந்த பிரச்னைகள் இன்னும் அதிகமாகும்.
குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது?
வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்னைகளும் தேவைகளும் உண்டு. ஆனால் இவை எல்லை தாண்டிப் போகும்போது அது நம் வாழ்வை பாதிக்கிறது. அதை சரியான நேரத்தில் நாம் கவனிக்க வேண்டும்.
மனதில் ஏற்படும் குழப்பத்தைத் தயங்காமல் ஆலோசகரிடமோ மனநல மருத்துவரிடமோ தெரிவிக்க வேண்டும். எல்லா நேரத்திலும் மருத்துவர் மருந்து தர மாட்டார். ஆரம்ப கட்டப் பிரச்னைகளாக இருந்தால் ஆலோசனை மூலமாகவும் நடத்தையை மாற்றிகொள்வதன்மூலமாகவும் அதிலிருந்து மீண்டுவிடலாம்.
சரியான நேரத்தில் மனநல பாதிப்பைக் கண்டறிந்தால் விரைவிலேயே நலம் பெறலாம். உதவி பெறாமல் தட்டிக்கழிக்கும்போது அது மனநலத்தை இன்னும் ஆழமாக பாதிக்கிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நலம் பெறுவதற்குக் கூடுதல் முயற்சியும் நேரமும் தேவைப்படும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அதுவே மனநலத்துக்கான முதல் படி.
"குடும்ப உறுப்பினர்களின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க வேண்டும், அதைப் பொறுத்து மனநல உதவி தேவையா இல்லையா என்பதை முடிவெடுக்கலாம்" என்கிறார் மனநல மருத்துவர் ராஜேந்திர பார்வே.
"தினசரி வேலைகள், வெளியிலிருக்கும் வேலைகள், குளிப்பது, கழிவறைக்குச் செல்வது போன்றவற்றில் பிரச்னை இருந்தால் அதை கவனிக்கவேண்டும். அதுவே அறிகுறி அல்ல, அதைக் கூடுதலாகக் கவனிக்கவேண்டும். அன்றாட வாழ்வின் மகிழ்ச்சியை அவர்கள் இழந்துவிட்டார்களா? இயந்திரத்தைப் போல நடந்துகொள்கிறார்களா? பசி, உடல் கழிவை வெளியேற்றுதல், தூக்கம், பாலியல் செயல்பாடு ஆகியவற்றில் தொந்தரவு இருக்கிறதா?, எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்" என்கிறார்.
எப்படி உரையாடுவது?
நம் குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் நாம் அவர்களுடன் பேசலாம், கேள்வி கேட்கலாம், ஆனால் அதைப் பேசும்போது அக்கறையாகவும் அன்பாகவும் இருக்கவேண்டும்.
இந்தப் பிரச்னைகளுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? பிரச்னைகள் தீவிரமாக இருக்கின்றனவா? இவை எப்போதாவது வருகின்றவா அடிக்கடி வருகின்றவா? எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை வருகின்றன? போன்ற கேள்விகளைக் கேட்டு குடும்பத்தினரின் மனநலத்தைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் இவற்றை எடுத்த எடுப்பில் போட்டு உடைத்துவிட முடியாது. சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ளவேண்டும்.
இதற்கு எதிர்மறையாகவும் பதில் வரலாம், எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் சொல்லலாம். அந்த சூழலில் பொறுமையாக இருந்து அவர்களைக் கூடுதல் அக்கறையோடு கவனித்துக்கொள்ளவேண்டும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அடிக்கடி மனத்தொய்வு, பதற்றம், கோபம், பொறாமை போன்றவை வரும்போது அவர்களுக்கு நாம் உதவி செய்ய சில முயற்சிகள் எடுக்க வேண்டும்.
தவறான நம்பிக்கைகளிலிருந்து எப்படி விடுபடுவது?
பொதுவாக எந்த மனநலப் பிரச்னையையும் "பைத்தியம் பிடிப்பது" என்றோ மனத்தொய்வு என்றோ மக்கள் நினைப்பார்கள். ஆனால் தடுக்க முடியாத எண்ண ஓட்டம், பதற்றம், ஓசிடி, மனத்தொய்வு போன்ற பல பிரச்னைகளும் வரலாம். மனநல மருத்துவரையோ ஆலோசகரையோ சந்தித்தாலே அவர்களுக்கு மனநோய் வந்துவிட்டது என்ற தவறான புரிதலில் இருந்து நாம் விடுபடவேண்டும். இதுபோன்ற எண்ணங்களோடு வீட்டிலும் விவாதிக்ககூடாது.
மின் அதிர்ச்சி சிகிச்சை மூலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதும் ஒரு தவறான புரிதல். இது 'Electro Conclusive Therapy' (ECT) என்று அழைக்கப்படுகிறது. நோயுற்ற எல்லாருக்கும் இது தேவைப்படுவதில்லை. இந்த சிகிச்சையைப் பெறுபவர்கள்கூட வீட்டுக்குத் திரும்பிவிடலாம். இது அனைவருக்கும் தரப்படுவதும் இல்லை.
மனநலப் பிரச்னைகள் குறித்து தெரிந்தபின்பு என்ன செய்வது?
நமக்கு மனநலப் பிரச்னை இருப்பது தெரிந்தபின்னும்கூட நாமாக எதுவும் செய்யக்கூடாது. மனநல மருத்துவர்கள், ஆலோசர்களிடம் பேசவேண்டும். மனநல பாதிப்பு எப்படிப்பட்டது என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள். இணையத்தில் அறிகுறிகளைத் தேடி நாமாக நோயை முடிவு செய்து மருந்துகள் எடுத்துக்கொள்வது ஆபத்தானது.
"கூகுளில் தேடக்கூடாது. உங்களது எல்லா அறிகுறிகளையும் கேட்டபின்பே மருத்துவர்கள் சிகிச்சையை முடிவு செய்வார்கள். யாருக்கு மருந்து தேவை, யாருக்கு ஆலோசனை தேவை, யாருக்கு இரண்டுமே தேவை என்பதையெல்லாம் முடிவெடுக்க ஒரு முறை உள்ளது. கூகுளால் இதை செய்ய முடியாது" என்கிறார் மருத்துவர் ராஜேந்திர பார்வே.
குடும்பம் மற்றும் ஆதரவுக் குழுக்கள்
"யாராக இருந்தாலும் அவர்கள் மனநலம் சீராவதற்குக் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியம்" என்கிறார் பொதுநலக் கழகத்தைச் சேர்ந்த ஆலோசகர் வைதேஹி பிடே.
"ஆலோசகர், மருத்துவர்களின் உதவியோடு மனநலத்தை சரிசெய்வது இயல்புதான். மருந்துகளை எடுத்தால்தான் எல்லாம் சரியாகும் என்றும் மருந்துகள் எடுத்தால் அதுவே பழகிவிடும் என்றும் ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அதிலிருந்து மக்கள் விடுபடவேண்டும். மருத்துவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சோதனைகள் செய்தபிறகு சிகிச்சை பற்றி முடிவெடுப்பார்கள். குடும்பத்தினருடன் ஆதரவுக் குழுக்களும் மனநலம் மேம்பட உதவுகின்றன.
தன்னைப் போலவே பலருக்குப் பிரச்னை இருக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டிருக்கிறார்கள் என்பதை நோயுற்றவர் உணர்வார். தாங்கள் மட்டும் தனியாக இல்லை, மற்றவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்ற உணர்வே அவர்களுக்கு ஆறுதலைத் தரும்" என்கிறார்.
தவிர்க்க வேண்டியவை
குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தால் சில விஷயங்களைத் தவிர்க்கவேண்டும். முதலில் குற்றம் சொல்லி பழி போடக்கூடாது. விதியைக் காரணம் காட்டக்கூடாது, நேரம் சரியில்லை, போன ஜென்மப் பாவம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. தீர்க்கமுடியாத ஒரு பரம்பரை வியாதி என்று சொல்லக்கூடாது. நோயுற்றவருக்கு ஆதரவு தர முயற்சி செய்யவேண்டும்.
நாம் கூட இருக்கும் உணர்வைத் தந்து அவர்கள் வலியைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். அவர்கள் நமக்குத் தொல்லை தரவில்லை என்பதை உணரவேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இதை அவர்கள் தெரிந்து செய்வதில்லை, அவர்களது மனநலப் பிரச்னைகள் இப்படி நடந்துகொள்ள வைக்கின்றன. ஆகவே மேலும் மேலும் கேள்வி கேட்டு அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது.
பிற செய்திகள்:
- பூச்சி இனங்களின் அழிவுக்கு காரணமான தெரு விளக்குகள் – ஆய்வாளர்கள் சொல்லும் மாற்று வழி
- பாரம்பரியத் திருமணத் தடைகளை புதுமையாக உடைக்கும் இந்திய-அமெரிக்க ஒரு பாலின தம்பதிகள்
- என்னவானது கேரளாவின் `கோவிட் தடுப்பு மாடல்'? - அதிர்ச்சிப் பின்னணி
- மைசூரு கூட்டுப்பாலியல் வல்லுறவு: காட்டுப்பகுதியில் மாணவியிடம் வெறிச்செயல் - என்ன நடந்தது?
- கொடநாடு விசாரணையை விரிவுபடுத்துவதன் பின்னணியில் நடப்பவை என்ன? அதிமுக-வுக்கு என்ன சிக்கல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்