You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரை இயான் ஃபிளெமிங் தேர்வு செய்தது ஏன்? - ஹாலிவுட் சினிமா பற்றிய சுவாரசிய வரலாறு
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
இன்னும் சில நொடிகளில் பேரழிவை ஏற்படுத்தும் நாசகார ஆயுதத்தை வில்லன் பயன்படுத்தப் போகிறார். பல நூறு பேர் உயிரிழக்கப் போகிறார்கள். பல கோடி ரூபாய் பொதுச் சொத்துகள் நாசமாகப் போகின்றன.
ஏதோ இரண்டு உலக நாடுகளுக்கு இடையே சண்டை மூளப் போகிறது. இத்தனை சிக்கல்களையும் தீர்க்கப் போகும் நாயகன் கடைசி நேரத்தில் வந்து சேருகிறார். கொடூரமான முறையில் வில்லனைக் கொன்றுவிட்டு தனது சொந்த நாடான பிரிட்டனையும், உலக அமைதியையும் காப்பாற்றி விடுகிறார். அவர்தான் ஜேம்ஸ்பாண்ட் 007.
திரைப்படங்களில் நாம் இப்படிப் பார்த்த ஜேம்ஸ் பாண்ட், எம்.ஐ. 6 என்ற பிரிட்டனின் ரகசிய உளவு அமைப்பில் பணியாற்றும் அதிகாரி. துப்பாக்கிகள், கார்கள், அறிவியல் தொழில்நுட்பங்கள் ஆகியவை பற்றிய நுட்பமான அறிவும் வியத்தகு உடல் வலிமையும் கொண்டவர். துப்பறிவதில் நிபுணர். சாகசங்களை பெரிதும் விரும்புவர். நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவர். கடந்த நூற்றாண்டின் மத்தியில் இருந்து உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கிவரும் இந்தக் கற்பனை மனிதர் உலக சாகசக்காரர்களின் பிம்பமாகவே பார்க்கப்படுகிறார்.
இத்தகைய பிரபலமான கதாத்திரத்தை உருவாக்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயான் ஃபிளெமிங். ஃபிளெமிங்கின் கற்பனைப்படி ஜேம்ஸ் பாண்ட் என்பவர் முழுச் சோம்பேறியான, எதிலும் ஆர்வங்காட்டாத மனிதர். சுற்றி என்ன நடந்தாலும் அவற்றையெல்லாம் பொருள்படுத்தாமல் தம் விருப்பப்படி நடந்து கொள்பவர். போர்களில் பங்கேற்றபோது தாம் நேரில் கண்ட உளவாளிகளின் கலவையாகவே ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தை ஃபிளெமிங் படைத்தார்.
ஜேம்ஸ் பாண்ட் எப்படியிருக்க வேண்டும் என்று கேட்டால் ஹோகி கார்மிக்கேல் என்ற அமெரிக்கப் பாடகரை அடையாளமாகக் காட்டுவார் ஃபிளெமிங். பார்ப்பதற்கு பிளெம்மிங்கைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்டவர் இவர். இதன் மூலம் பிளெமிங், ஜேம்ஸ் பாண்டாக தம்மையை உருவகப்படுத்திக் கொண்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயர் எங்கிருந்து வந்தது?
ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயரை ஃபிளெமிங் தேர்வு செய்தததற்கான காரணம் மிகவும் சுவையானது. ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரைக் கொண்டவர் உளவாளியோ சாகசக்காரரோ கிடையாது. அமெரிக்காவைச் சேர்ந்த பறவைகள் ஆய்வாளர். கரீபியன் பிராந்தியத்தில் பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த இவரது பல ஆய்வுக் கட்டுரைகளை ஃபிளெமிங் படித்திருக்கிறார்.
தனது கதாநாயகனின் பெயர் மிகச் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதாலும், தாமே ஒரு பறவை விரும்பி என்பதாலும், ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரைத் தேர்வு செய்தார் ஃபிளம்மிங்.
ஆக, "பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்" என திகில் குரலில் இந்தப் பெயர் பேசப்படவேண்டும் என்று ஒருபோதும் ஃபிளெம்மிங் விரும்பவில்லை. ஜேம்ஸ் பாண்ட் என்பவர் ஒரு பறவை ஆராய்ச்சியாளர் என்பதை நினைவுகூரும் விதமாக "டை அனதர் டே" படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
செய்தியாளராக இருந்ததால் ஃபிளெமிங்கின் எழுத்து நடையில் அந்தச் சாயலைப் பார்க்க முடியும். காலையில் மூன்று மணிநேரம், மாலையில் ஒரு மணி நேரம் என நான்கு மணி நேரம் மட்டுமே எழுதும் வழக்கம் கொண்ட ஃபிளெமிங், நாளொன்றுக்குச் சராசரியாக இரண்டாயிரம் சொற்களை எழுதியதாகவும் கூறியிருக்கிறார். தாம் எழுதியதை சரிபார்த்துத் திருத்தும் வழக்கம் அவருக்கு இல்லை. ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போது, அடுத்த அத்தியாயத்தைப் படிக்கத் தூண்டும் அளவுக்கு சுவையான புதிரை வைப்பது ஃபிளெமிங்கின் வழக்கம்.
ஜேம்ஸ் பாண்டாக நடிக்கத் தயங்கிய நடிகர்கள்
இப்போது ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை ஏற்று நடிப்பது பெருமைக்குரியது. ஆனால் அந்தக் காலத்தில் அப்படியில்லை. ஜேம்ஸ்பாண்ட் கதைகளை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதும் பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் முன்னணி நடிகர்கள் பலர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மறுத்துவிட்டனர்.
1960-களில் பிரிட்டனில் தொலைக்காட்சிப் பெட்டிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர் டேஞ்சர் மேன். ஜான் ட்ரேக் என்ற உளவாளிக் கதாபாத்திரத்தைக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் பாட்ரிக் மேக்கூகன் என்ற நடித்திருப்பார். இதன் வெற்றிகளைப் பார்த்த இயான் ஃபிளமிங் மற்றும் EON Flims நிறுவனத்தின் பிரோக்கோலி ஆகியோர் மேக்கூகனை ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால், மேக்கூகன் மறுத்துவிட்டார். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஒழுங்கீனமான காட்சிகள் இடம்பெறும், அதைத் தம்மால் செய்ய முடியாது என்று அவர் கூறினார்.
இதன் பிறகுதான் ஷான் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1962-ஆம் ஆண்டில் "டாக்டர் நோ" என்ற பெயரில் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் வெளியானது. ஜமைக்காவிலும் பிரிட்டனில் உள்ள அரங்கிலும் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.
ஷான் கானரியை ஜேம்ஸ் பாண்டாகவே மக்கள் பார்க்கத் தொடங்கினர். இந்தத் திரைப்படத்தில் ஷான் கானரியின் சாகச நடிப்பைப் போலவை மிகவும் அதிகமாக விரும்பப் பட்டது படத்தின் தீம் மியூசிக் எனப்படும் மைய இசை. மாண்டி நார்மன் உருவாக்கிய இந்த இசை இன்றுவரைக்கும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இசைக்கான காப்புத் தொகையாக மட்டும் இதுவரை சுமார் 60 கோடி ரூபாக்கும் அதிகமான பணம் கிடைத்திருக்கிறது.
நேரடி அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகள்
பெரும் பணக்காரக் குடும்பத்தில் 1908-ஆண்டு பிறந்தவர் ஃபிளெமிங். தந்தை நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சிறுவனாக இருந்தபோதே அதிகாரவர்க்கத்தை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பள்ளியிலும் கல்லூரியிலும் பெரிதாக ஏதும் சாதிக்காத அவருக்கு, எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இளம் வயதிலேயே இருந்திருக்கிறது.
பல தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு, 1931-ம் ஆண்டில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணி கிடைத்தது. குடும்பச் சூழல் காரணமாக அந்தப் பணியை விட்ட ஃபிளெமிங் இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டன் கடற்படையின் உளவுப் பிரிவில் உதவியாளராகச் சேர்ந்தார்.
குறுகிய காலத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைப் பெற்று, உளவுப் பிரிவின் முக்கிய நபரானார். பல்வேறு ரகசிய உளவுத் திட்டங்களைத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தினார். போர் முடிந்த பிறகு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிய ஃபிளெமிங், 1945-ம் ஆண்டு "தி சண்டே டைம்ஸ்" நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் பிறகுதான் உளவாளிகள் குறித்த நாவல்களை எழுதும் எண்ணம் அவருக்குள் தோன்றியது.
1952-ம் ஆண்டு ஜமைக்காவில் இருந்த அவர், தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு Casino Royale என்ற தனது முதல் நாவலை எழுதத் தொடங்கினார். இதன் நாயகர்தான் ஜேம்ஸ் பாண்ட். தம்மையை இந்தக் கதாபாத்திரத்தில் பிளெம்மிங் உருவகப்படுத்தியிருந்தார்.
இரண்டே மாதத்தில் எழுதி முடிக்கப்பட்ட இந்த நாவல், 1953-ம் ஆண்டு வெளியானபோது மிகவும் பரபரப்பாக விற்பனையானது. 3 முறை சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் படமாக்கப்பட்டுள்ளது இந்த நாவல்.
கேஸினோ ராயலுக்குப் பிறகு 1964-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தாம் இறக்கும் வரை, ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, 12 நாவல்களையும் 2 சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டார் பிளெம்மிங்.
படைத்தவர் இறந்த பிறகும், மறையாத கதாபாத்திரம்
ராபர்ட் மார்க்கம், ஜான் கார்ட்னர் ஆகிய எழுத்தாளர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு பல நாவல்களை எழுதியுள்ளனர். இயான் ஃபிளம்மிங்கின் மரணத்துக்குப் பிறகு ராபர்ட் மார்க்கம் கலோனல் சன் என்ற நாவலை எழுதினார்.
1966-ம் ஆண்டு கார்ட்னர், எழுதுவதைக் கைவிட்டபிறகு, ரேமண்ட் பென்சன் என்ற எழுத்தாளர் அந்தப் பணியைத் தொடர்ந்தார். 2013 ஆண்டில் வில்லியம் பாய்ட் எழுதிய சோலோ என்ற நாவல் வெளியானது. இப்போது அந்தோனி ஹோரோவிட்ஸ் என்ற எழுத்தாளர் ஜேம்ஸ் பாண்ட் நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார்.
இயான் ஃபிளெம்மிங் எழுதிய ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் மிக முக்கியமான எதிரெதிர் பண்புகள் கொண்ட கதாபாத்திரங்களையும் பண்புகளையும் பார்க்க முடியும் அவற்றுள் முக்கியமானது எம் என்று பெயரிடப்படும் உளவுத் துறையின் தலைவரின் பாத்திரம்.
ஒவ்வொரு கதையிலும் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் எம் ஆகியோரின் சந்திப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். திரைப்படங்களில் பெர்னார்ட் லீ, ராபர்ட் பிரௌன், ஜூடி டென்ச், உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
பொதுவாக பிளெமிங்கின் கதைகளில் சோவியத் ஒன்றியத்தையும் கம்யூனிஸ சித்தாந்தங்களையும் விமர்சிக்கும் வகையிலான கருத்துகள் நிறைய இடம்பெற்றிருக்கும். சோவியத் ஒன்றியம் சுதந்திரமற்ற ஒரு நாடு, உலக அமைதியைக் கெடுப்பதற்கான செயல்களைச் செய்து வருகிறது என்பன போன்ற கருத்துகள் பெரும்பாலும் உண்டு.
திரைப்படங்கள் மட்டுமல்லாது, சித்திரக்கதைகளிலும் வானொலிகளிலும்கூட ஜேம்ஸ் பாண்ட் தொடர்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஜேம்ஸ் பாண்டின் துப்பாக்கி, அவரது கார், கருவிகள் போன்றவையும் மக்களிடையே பிரபலமாகியிருக்கின்றன.
ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் அவர்பயன்படுத்தும் கார்களும், கருவிகளும் அதிகமாகப் பேசப்படும். 1962-ஆம் ஆண்டு வெளியான முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான டாக்டர் நோ அடுத்த மாதம் வெளியாக இருக்கும் "நோ டைம் டூ டை" வரை அனைத்துத் திரைப்படங்களிலும் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
திரைப்படங்கள், சித்திரக் கதைகள், வீடியோ கேம்கள் போன்றவற்றையும் ஜேம்ஸ்பாண்ட் ஆக்கிமித்திருக்கிறார். ஷான் கானரி, ரோஜர் மூர், பியர்ஸ் பிராஸ்னன், டோனி கிரெக் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களுக்கு அடையாளமாக இருப்பதும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம்தான்.
முட்டாளுக்கும் மேதைக்கும் இடையேயான தொலைவு வெற்றி மூலமே அளவிடப்படுகிறது என்பார் பிளெம்மிங். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் அடிப்படைக் குணமும் அதுதான்.
பிற செய்திகள்:
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
- எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு: வேலூரா புழலா? அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம்
- ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் போர் 20 ஆண்டுகளாக நீடிப்பது ஏன்? - விரிவான பின்னணி
- தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா?
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்