விஜய்யின் அடுத்த படம் 'பீஸ்ட்’: பிறந்தநாள் கொண்டாட்ட திட்டமென்ன?

    • எழுதியவர், ச. ஆனந்தப்ரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடிகர் விஜய்க்கு இந்த ஆண்டு 'மாஸ்டர்' திரைப்படம் வெற்றித் தொடக்கமாக அமைந்தது. இந்த நிலையில், அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'தளபதி 65' என்று குறிப்பிடப்பட்டு வந்த படத்திற்கு தற்போது 'பீஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அறிவித்துள்ளது. மேலும், அந்த திரைப்படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' படமும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடமே கொரோனா பொது முடக்கம் காரணமாக தனது பிறந்த நாளை விஜய் கொண்டாடவில்லை. இந்த வருடம் அவர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்?

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

விஜய் தனது 47வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். குழந்தை நட்சத்திரத்திலிருந்து கதாநாயகன், பாடகர் என சினிமாவிலும் மக்கள் மத்தியிலும் தனக்கான இடத்தை தக்க வைத்திருக்கிறார் நடிகர் விஜய். விஜயின் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங், காமன் டிபி என பரபரப்பாகவே இயங்கினர்.

வழக்கமாக, நடிகர் விஜய் பிறந்த நாளுக்காக அவரது படங்களின் டீசர், ட்ரைய்லர், பாடல் வெளியீடு போன்றவை நடக்கும். அந்த வகையில், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'தளபதி 65' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியிடப்பட்டது.

'பீஸ்ட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் துப்பாக்கியோடு நடிகர் விஜய் இருப்பது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

'தளபதி65' படப்பிடிப்பு எப்போது?

கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மற்றும் படக்குழு பங்கேற்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டது. அங்கு காலநிலை மாற்றம் உள்ளிட்ட சில பிரச்னைகள் காரணமாக திட்டமிட்டபடி சில காட்சிகளை எடுக்க முடியாமல் போக, சண்டை காட்சிகள் உட்பட சில காட்சிகள் என முழுமையான படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே நடந்தன. இதன் பிறகு சென்னை திரும்பிய படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நாயகி பூஜா ஹெக்டேவுடன் ஆரம்பிக்க இருக்கிறது. மேலும் படத்திற்காக பிரமாண்டமான ஷாப்பிங் மால் அமைக்கும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

தற்போது சினிமா மற்றும் டிவி சீரியல்களின் படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளோடு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அடுத்த மாதம் 'பீஸ்ட்' படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'டார்கெட்', 'மிஷன்' என பல தலைப்புகள் சமூக வலைதளங்களில் உலாவ, படக்குழு அதிகாரப்பூர்வமாக 'பீஸ்ட்' என தலைப்பை அறிவித்திருக்கிறார்கள்.

இதுமட்டுமில்லாமல், 'தளபதி 65' இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகை கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன் ஆகியோரும் ட்விட்டர் ஸ்பேசில் நடிகர் விஜய் பிறந்த நாளுக்காக இன்று இரவு பேச இருக்கிறார்கள்.

ரசிகர்கள் மனநிலை என்ன?

விஜய் மக்கள் இயக்கம், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"தளபதி பிறந்தநாள் எனும் போது ஜூன் மாத ஆரம்பத்தில் இருந்தே கொண்டாட்ட மனநிலைக்கு நாங்கள் வந்து விடுவோம். அதே சமயம் ரசிகர் மன்றங்கள் சார்பாக மக்களுக்கு முடிந்த உதவிகளையும் செய்ய ஆரம்பித்து விடுவோம். நாட்டுப்புற கலைஞர்கள், அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தேவையான பொருட்கள், குழந்தைகளுடைய பள்ளி படிப்பு செலவு இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம்.

சென்ற வருடம் தளபதி பிறந்த நாளின் போது கொரோனா முதல் அலை தீவிரமாக இருந்தது. அப்போது யாருக்கும் இந்த நோயின் தீவிரத்தன்மை எதுவும் தெரியாமல் இருந்தது. அந்த சமயத்திலேயே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். எங்கள் அனைவரது நலனும், குடும்பமும் முக்கியம் என கறாராக தளபதி சொல்லியிருந்தார். கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் நலத்திட்டங்கள் செய்ய யாரும் வெளியே போக வேண்டாம் எனவும் சொல்லி விட்டார். ஆனாலும், சில விஷயங்களை பாதுகாப்போடு செய்து கொண்டிருக்கிறோம்.

சமூக வலைதளங்களில் அண்ணன் ஆக்டிவாக இருப்பார். அதன் மூலமாகவும், நிர்வாகிகள் மூலமாகவும் இந்த விஷயங்கள் அவருக்கு தெரிய வரும். பிறந்தநாளின் போது எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற அவரது விருப்பத்தைதான் நிறைவேற்றி வருகிறோம். மேலும், கொரோனா காலத்தில் இறந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் குடும்பத்தை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் சொன்னது மட்டுமில்லாமல், அவர்களுக்கான பண உதவிகளையும் செய்தார்.

கொரோனாவுக்கு முந்தைய கால கட்டத்திலும் கூட பிறந்த நாளை பெரிதாக கொண்டாட மாட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்பு, அண்ணியோடு போய் அவரது பிறந்தநாளன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம், முதியவர்களுக்கு உதவி, உணவு போன்ற விஷயங்களை செய்து வந்தார். ஆனால், இப்போது அவரே நினைத்தாலும் வெளியே வர முடியாத சூழல். வீட்டில் பிறந்தநாளன்று கடவுள் வழிபாடு, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது இது வழக்கமாக நடைபெறும். இதுவரை பெரிய அளவில் பிறந்தநாள் கொண்டாட்டம், கேக் கட்டிங் கூட அவர் செய்தது கிடையாது. மக்களோடு மக்களாகதான் அவர் கொண்டாட்டம் இருந்திருக்கிறது.

மதுரை என்றால் போஸ்டரும், கொண்டாட்டமும்தானே. பிறந்தநாளுக்கு 15 நாட்கள் முன்பே அதெல்லாம் ஆரம்பித்து விடுவோம். ஆனால், இந்த முறை அதிகம் அது இல்லை. அதற்கு பதிலாக பிறந்தநாளுக்கான காமன் டிபி, தளபதி 65 ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாவது என தளபதி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு சந்தோஷம் தருவதாக இருக்கிறது."

அரசியல் நிலைப்பாடு என்ன?

"தளபதியுடைய அரசியல் வருகை என்பது எல்லாருமே எதிர்ப்பார்த்து இருப்பதுதான். சில இடங்களில் மக்கள் மனு எல்லாம் கூட கொடுப்பார்கள். நாங்கள் அரசாங்கம் கிடையாதே. எங்களால் முடிந்த அளவில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முயல்வோம். தளபதியை சந்திக்கும்போது கூட, 'நடிப்பா? அரசியலா?' என்றுதான் எங்களிடம் கேட்டுவிட்டு, 'இரண்டுமே ஒரே நேரத்தில் செய்ய முடியாது நண்பா' என சிரிப்பார். ரசிகனாக திரையில் அவரை பார்க்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்ப்பார்ப்பு. மக்களுக்கு அவர் அரசியலில் வர வேண்டும் என்பது எதிர்ப்பார்ப்பு. விரைவில் நல்லது நடக்கும் என நம்புவோம்" என்று அவர் கூறினார்.

இந்த வருடம் என்ன திட்டம்?

விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸிடம் பேசியபோது, "கொரோனா தீவிரம் காரணமாக, நடிகர் விஜய் இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பெரிதாக எதுவும் திட்டமிடவில்லை" என்பதோடு முடித்து கொண்டார்.

விஜய் தந்தையின் அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் குற்றங்கள் குறையவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமரா வழங்க இருப்பதாக இந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். இதன் முதல் கட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் சென்னையில் 10 ஆ.யிரம் வீடுகளுக்கு கேமரா தர இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :