You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்வதேச யோகா தினம்: உலகை ஒருங்கிணைக்கும் பழங்கலை - கட்டுப்பாடுகளுடன் நடந்த நிகழ்ச்சிகள்
சர்வதேச யோகா தினத்தின் ஏழாம் ஆண்டு நிகழ்ச்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டன. இதையொட்டி நடைபெற்ற யோகா கலை பயிற்சி நிகழ்ச்சிகள் சமூக இடைவெளி, கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டன.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு, பொது முடக்க கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதால், பல இடங்களில் வழக்கமாக பிரமாண்டமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, இம்முறை கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி யோகா ஆர்வலராக அறியப்படுகிறார். ஆண்டுதோறும் இவரே முன்னின்று டெல்லியின் திறந்தவெளி மைதானத்தில் யோகா கலை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இம்முறை அத்தகைய வழக்கத்தை அவர் கடைப்பிடிக்கவில்லை. அதற்கு பதிலாக காணொளி வாயிலாக நாட்டு மக்களுக்கு யோகா சிறப்புகளை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாகவும் அவர் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவில் இருந்து உலகுக்கு வழங்கப்பட்ட பரிசு யோகா கலை என்று பெருமிதப்பட்ட மோதி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக யோகா கலை விளங்கியதாக தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று தீவிரம் அடைந்தபோது, அதை எதிர்கொள்ள எந்தவொரு நாடும் தயாராக இருக்கவில்லை. இந்த கடினமான காலகட்டத்தில் யோகா கலைதான் மக்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் தமது செயலக ஊழியர்கள் முன்னிலையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
மனித குலத்துக்கான இந்தியாவின் பிரத்யேக பரிசு யோகா என்று ராம்நாத் கோவிந்த் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, அவரது மாளிகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
பிரதமர் மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களும் அவரவர் தொகுதிகளிலும் டெல்லியிலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள் பலரும் யோகா பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டாலும், பெரிய அளவிலான கூட்டங்களில் அத்தகைய பயிற்சியில் ஈடுபடாமல் தவிர்க்க அனைவரும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் பல மாநிலங்கள் நோயாளிகளை சமாளிக்க முடியாத நிலையில் இருந்ததை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு பார்த்தது.
அந்த நிலைமையில் இருந்து இந்தியா மெல்ல, மெல்ல மீண்டு வருவதன் அறிகுறியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பரவலாக குறைந்து வருகிறது.
இருப்பினும், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தொடர்ந்து அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே இருக்கவும் அத்தியாவசிய பணிகளில் உள்ளவர்கள் மட்டும் வெளியே வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பண்டைய காலத்தில் ஆன்மிகத்தின் அங்கமாக விளங்கி வந்த யோகா கலை, இப்போது உலக அளவிலான கலையாக கருதப்படுகிறது. இதன் வெளிப்பாடாக ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினம் ஆக ஐ.நா 2015ஆம் ஆண்டு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கான முன்மொழிவை ஐ.நா அவையில் செய்தவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. இந்த ஆண்டுக்கான யோகா தின கருத்தாக்கமாக நலன் பேணும் யோகா என ஐ.நா அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு தனி நபரின் உடல் நலனைப் பேணுவதற்கான முகமாக யோகா கலை விளங்குவதாக ஐ.நா கூறியுள்ளது.
உளவியல், சமூக பராமரிப்பு, மறுவாழ்வு என கொரோனா பாதிப்பு மற்றும் அதன் தாக்கத்தால் வீட்டுத் தனிமையில் இருப்போருக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் யோகா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்தியாவை போலவே உலகின் மற்ற நாடுகளிலும் யோகா பயிற்சியில் பலரும் இன்று ஈடுபட்டனர். சீனாவின் ஹூபே மாகாணத்தின் கோர்ஜெஸ் அணை முன்பாக, யோகா கலைஞர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இங்கே நீங்கள் காண்பது நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்குவயர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்ட யோகா ஆர்வலர்கள்.
பாகிஸ்தானின் லாகூர் நகரிலும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.
டெல்லியில் நகர காவல்துறை ஆணையர் தமது மனைவியுடன் மேற்கொண்ட யோகா பயிற்சி படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்தியாவில் விளையாட்டு வீரர்கள், தியைரையுலக பிரபலங்கள் பலரும் யோகா பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர்.
பிற செய்திகள்:
- கால்நடை திருட்டு சந்தேகம்: திரிபுராவில் மூவர் அடித்துக் கொலை
- பயணத் தடையை மீறிய பொதுமக்களை முட்டியிட வைத்த இலங்கை ராணுவத்தினர்
- 14ஆம் நூற்றாண்டில் பெருந்தொற்றின் போது தொலைந்த தங்க நாணயம் கண்டெடுப்பு
- தமிழ்நாட்டில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன?
- இரண்டாம் உலகப் போர்: 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :