DOM வெப் சீரிஸ் விமர்சனம்

டாம்

பட மூலாதாரம், Amazon Prime Video India, Youtube

நடிகர்கள்: கேப்ரியல் லியோன், ஃப்ளாவியோ டொலஸானி, ஃபிலிப் ப்ரகன்கா, ராக்கல் வில்லர், மரியானா செரோன், லைலா காரின்; இசை: மெலிசா ஹார்ட்விக்; இயக்கம்: ப்ரெனோ சில்வெய்ரா.

வேறு ஒரு கலாச்சாரம், நிலப்பரப்பு, மனிதர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்கள், திரில்லர், ஹரார், ஆக்ஷன் தொடர்களாக இல்லாத பட்சத்தில் அவை கவனிக்கப்படும் வரவேற்கப்படுவதும் மிக அரிதாகவே நடக்கும். அந்தப் பட்டியலில் சேர்கிறது இந்த DOM தொடர்.

இந்த முதல் சீசனில் மொத்தம் எட்டு எபிசோடுகள். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கிறது கதை. பிரேசிலில் போதைப் பொருளான கொக்கெய்ன் அறிமுகமாகும் 70களில், அதனைக் கட்டுப்படுத்தும் பிரிவில் ஓர் உளவாளியாக சேர்கிறான் விக்டர் டான்டேஸ். எவ்வளவோ நடவடிக்கைகளுக்குப் பிறகும், நாட்டில் தொடர்ந்து கொக்கெய்ன் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

விக்டருக்கு (ஃப்ளாவியோ டொலஸானி) இரண்டு பிள்ளைகள் - பெட்ரோ டாம் மற்றும் லாரா. இதில் பெட்ரோ (கேப்ரியல் லியோன்) மெல்ல மெல்ல கொக்கய்னுக்கு அடிமையாக ஆரம்பிக்கிறான். தவிர, கொள்ளைகளிலும் ஈடுபட ஆரம்பிக்கிறான். இந்த போதைப் பழக்கத்திலிருந்து மகனை எப்படியாவது மீட்டுவிட முயற்சிக்கிறான் விக்டர். ஒவ்வொரு மீட்பு முயற்சிக்குப் பிறகும், அதைவிடத் தீவிரமாக அடிமையாகிறான் பெட்ரோ.

2000களின் துவக்கத்தில் ரியோ டி ஜெனிரோவில் உண்மையிலேயே வாழ்ந்த ஒரு போதைக் கும்பல் தலைவனின் கதைதான் இது. 2005ஆம் ஆண்டில் அவன் கொல்லப்பட்டுவிட, அவனுடைய தந்தையிடமிருந்து கதையைக் கேட்டு இந்தத் தொடரை உருவாக்கியிருக்கிறார்கள்.

டாம்

பட மூலாதாரம், Amazon Prime Video India, Youtube

போதைக்கு அடிமையான ஒரு மகன் - மீட்கப் போராடும் தந்தை என்ற வகையிலும் இந்தக் கதையைப் பார்க்கலாம். அல்லது போதைக்கு அடிமையாக, மிகத் திறமையாக கொள்ளைகளில் ஈடுபடும் ஒரு சாகசக்காரனின் கதையாகவும் பார்க்கலாம். அல்லது பிரேசிலில் போதை வர்த்தகம் அதிகார வர்க்கத்தின் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம்வரை எந்த அளவுக்கு ஊறிப்போயிருக்கிறது என்பதைச் சொல்லும் ஒரு கதையாகவும் பார்க்கலாம். ஒருவகையில், இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துச் சொல்லும் தொடர்தான் இது.

பிரேசில் நாட்டுப் பின்னணியில், போர்ச்சுக்கீசிய மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும் பார்க்க ஆரம்பித்தவுடனேயே ஈர்க்கிறது இந்தத் தொடர். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான போராட்டத்தை இவ்வளவு விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமூட்டுகிறது. தொடரின் எந்த இடத்திலும் தொய்வே இல்லாமல் செல்வதற்கு, இதில் கையாளப்பட்டிருக்கும் non - linear பாணி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தந்தை விக்டராக நடித்திருக்கும் ஃப்ளாவியோவும் பெட்ரோவாக நடித்திருக்கும் கேப்ரியலும் பின்னியிருக்கிறார்கள். இந்தத் தொடரின் மற்றொரு முக்கியமான ஈர்ப்பு, ஆங்காங்கே தெறிக்கும் அட்டகாசமான தென் அமெரிக்க இசை.

போர்ச்சுகீசிய மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும் அமேசான் ஓடிடி தளத்தில் தமிழில் கிடைக்கிறது இந்தத் தொடர். வார இறுதியை நிச்சயம் சிறப்பாகக் கழிக்க இந்தத் தொடர் உதவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :