'தி ஃபேமிலிமேன் - 2' தொடருக்கு தமிழ்த்திரையுலகம் எதிர்ப்பா ஆதரவா?

'தி ஃபேமிலிமேன் 2'

பட மூலாதாரம், AMAZON PRIME VIDEO

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை தமிழர்களின் போராட்டங்களும் அவர்களின் வரலாறும் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாவது சீசனில் தவறாக திரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத்துறையினர் பலரும் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

இந்த தொடர் வெளியாகவிருந்த சில தினங்களுக்கு முன்பு அதன் டிரெய்லர் காட்சிகள் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற காட்சிகளை பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆதரவு செயல்பாட்டாளர்கள் பலரும் அந்த தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்ள். தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும் இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி தொடருக்கு தடை கோரியிருந்தார்.

இருப்பினும் கடந்த 4ஆம் தேதி அந்த தொடர் அறிவித்தபடி வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழ்த்திரையுலக படைப்பாளிகள், அந்த தொடர்பான தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்'

'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன லாபம் உங்களுக்கு? இவர்கள் திரிப்பதை எல்லாம் சரி செய்து உண்மையான வரலாற்றை பதிவு செய்ய தமிழ்ப் படைப்பாளிகளும், உலகத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும். நம் வரலாற்றை நாமே எழுதுவோம்" என இந்த தொடருக்கு தனது எதிர்வினையை பதிவு செய்திருந்தார்.

சுரேஷ் காமாட்சி

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

இது தொடர்பாக பேச அவரை தொடர்பு கொண்டோம். "தனிப்பட்ட யாருடைய வரலாறு குறித்து எடுப்பதானாலும் சம்பந்தப்பட்டவர்களது அனுமதி கிடைத்த பின்னரே அதை படமாக்க வேண்டும் என தணிக்கை குழு சொல்கிறது.

அப்படி இருக்கும் போது அனுமதியே இல்லாமல், வரலாற்றை தவறாக சித்தரிப்பது என்பது தவறான விஷயம். இது போராட்டத்தை கொச்சைப்படுத்துவது. நாளை இதுதான் வரலாறு போல ஆகும். ஏனெனில் பத்து வருடங்கள் கழித்து யாரேனும் இதை பார்க்கும் போது 'இப்படிதான் இருந்திருப்பார்கள் போல' என நினைக்கக் கூடும். அது தான் எங்களது பயம். நீங்கள் நடந்த விஷயங்களை பதிவு செய்யும் போது யாரும் அதை மறுக்க போவது கிடையாது. அதற்கே நீங்கள் அனுமதி கேட்க வேண்டும் என்பது வேறு விஷயம். கற்பனையாக நீங்கள் ஆயிரம் விஷயங்கள் பேசலாம். ஆனால், நடக்காத ஒன்றை ஏன் பொய்யாக திரிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. அந்த போராட்டத்தை இழுத்து போர்த்த வேண்டும் என திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா என்ற கேள்வி எழாமல் இல்லை" என்றார்.

வரலாற்று திரிப்புக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்?

"விடுதலை புலிகள் இயக்கத்தில் பெண்கள் விஷயத்தில் இதுவரை கற்பழிப்பு போன்ற தவறான விஷயங்கள் நடந்ததே இல்லை. இலங்கை ராணுவமே அப்படி சொன்னதில்லையே. இங்கு விசாரித்த சிபிஐ அதிகாரிகளுமே கூட கட்டுக்கோப்பான இயக்கம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இணையத்தொடரில் பெண் போராளி கதாபாத்திரத்தை தவறாக சித்தரிக்க வேண்டிய நோக்கம் என்ன? இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சரியான வரலாற்றை பதிவு செய்யவே ஒருவருடைய அனுமதி வேண்டும் எனும்போது, தவறான சித்தரிப்பை எப்படி அனுமதி இல்லாமல் எடுக்க முடியும்? தடை என்ற கோரிக்கை வந்த போது மத்திய அரசு அதற்கு ஏன் செவி சாய்க்கவில்லை? கதையை கதையாகதான் பார்க்க வேண்டும் என்றால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு ஓடிடி தளத்தில் வெளியாக இருந்த இணையத்தொடரை ஏன் வெளிவர முடியாமல் செய்ய வேண்டும்?

தலைவரை இதுபோன்று சித்தரித்தது மட்டுமில்லாமல், பெண் புலிகள் தவறான முறையில் சென்றுதான் போராட்டத்தை எடுத்து செல்வது போலவும் காட்டியிருப்பது கொச்சைப்படுத்துவது போல உள்ளது. அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?".

"போராட்டத்தையே கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள்"

"படைப்பு சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டுதான். அதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் காட்ட முடியாது. நாங்கள் தலைவருடைய வரலாற்றை சரியாக எடுக்கிறோம் என்றால் எங்களுக்கு அனுமதி கிடைக்குமா? கொடுக்க மாட்டீர்கள்தானே? அப்போது ஏன் தவறான விஷயத்துக்கு அனுமதி கொடுக்கிறீர்கள்? யாரையும் நான் குறிப்பிட்டு குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இப்படி ஒரு தவறு நடந்திருக்கும் போது அரசாங்கம் அதை ஏன் வேடிக்கை பார்க்கிறது? இங்கே பலருக்கும் மாற்று கருத்து இருக்கிறது. அதனாலோ என்னவோ, நம்முடைய அழுத்தம் இன்னும் மத்திய அரசுக்கு சரியாக சென்று சேரவில்லை என்றுதான் தோன்றுகிறது.

ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருந்தது, தலைவர் கதாபாத்திரம் குடிப்பது போன்ற காட்சிகளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஏனெனில் தலைவர் மட்டுமில்லை, ராணுவத்தில் யாருமே குடித்ததில்லை என்பதுதான் அங்கு உள்ளவர்கள் சொல்வது. அதேபோல, பெண் புலிகள் சமரசம் செய்தார்கள் என்பது போன்ற காட்சிகளும் அவர்களை கொச்சைப்படுத்துவதுதான். எத்தனை பெண்கள் போராட்டக்களத்தில் நின்றார்கள்? அப்படி துணிந்து நின்ற பெண்களை இதுபோல சித்தரித்திருப்பது வருத்தத்திற்குரியது. கதைக்கு இது தேவையே இல்லாதது. வலிந்து திணித்திருக்கிறார்கள்.

இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட சிலரும் இந்த இணையத்தொடருக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். அதற்காக ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகமே எதிராக இருக்கிறது என்று பொருள் அல்ல. படத்தை படமாக பாருங்கள் என்று சொல்பவர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு அது நடக்கும்போதுதான் அந்த வலி தெரியும்" என்றார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"'தி ஃபேமிலிமேன்' தொடரை புறக்கணிக்கிறேன்" - இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

பட மூலாதாரம், TWITTER

'தி ஃபேமிலிமேன்' சீசன் 2 வெளியானதை தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துகளை பதிவிட்டு வந்தார். தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப் தொடரை புறக்கணிப்பதாகவும், அமேசான் உடனடியாக இந்த தொடரை நிறுத்த வேண்டும் எனவும், நிறுத்தும் வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாராக இருக்கவோ இணையவோ போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

மேலும் இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பலரது எதிர்ப்புகளையும் மறுபகிர்வும் (Retweet) செய்திருந்தார். இது தொடர்பாக பேச அவரை தொடர்பு கொண்டோம்.

"மீண்டும், மீண்டும் இது குறித்தே இணையவெளியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால், இணையதளமே அசுத்தமாகி வருகிறது. இது குறித்து மேலும் தகவல்கள் என்றால் எனது சமூக வலைதள பக்கத்திலேயே பகிர்கிறேன். இது சம்பந்தமான தனிப்பட்ட பேட்டி எதுவும் வேண்டாம்" என முடித்து கொண்டார்.

"உள்நோக்கம் நிச்சயம் இல்லை"

'குயின்' வெப்சீரிஸ் இயக்குநர்களில் ஒருவரான பிரசாத் முருகேசனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம்.

"முதலில் 'தி ஃபேமிலிமேன்' இணையத்தொடரின் இரண்டாவது சீசனின் கதை புனைவு என்பதை மறுப்பதற்கில்லை. இதில் ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள். இந்த கதையை, அவர்கள் சொல்லியிருக்கிற விஷயத்தை நாம் பொது வெளியில் கொண்டு வந்து விவாதிக்க வேண்டுமே தவிர அவர்கள் பேசவே கூடாது, தடை செய்ய வேண்டும் என்பது தேவையில்லாதது. ஏனென்றால், இதில் சொல்லியிருக்கிற விஷயங்கள் உண்டு இல்லை என்பதை ஆதாரபூர்வமாக பேசுவதற்கான ஒரு வெளியை இந்த கதை உருவாக்கியிருக்கிறது. இதில் உள்நோக்கம் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால், சில விஷயங்களை கற்பனையாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதுதான் ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது. மற்றபடி கதை சுவாரஸ்யத்திற்காக கட்டமைத்த விஷயங்களை பரபரப்பாக்க வேண்டாம்.

பிரசாத் முருகேசன்
படக்குறிப்பு, இயக்குநர் பிரசாத் முருகேசன்

இதற்கு முன்பு கூட நிறைய திரைப்படங்களில் அரசியல்வாதிகள், காவல் துறையினர் என நிறைய பேர் யாரோ ஒருவரை குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அதற்காக அது உண்மை என்று ஆகிவிடாது. அப்படிதான் இதை நாம் அணுக வேண்டும். அவர்கள் சொல்லியிருக்கும் விஷயம் 'உண்மையானது இல்லை' என்று நீங்கள் விவாதம் செய்தால் அப்போது எது உண்மை, என்ன நடந்தது என்பதை வேறு வழியில் கொண்டு வரலாம். ஏனெனில், நீங்கள் சொல்வது போல, இந்த புனைவு இன்னும் சில வருடங்கள் கழித்து பார்க்கும் போது 'இதுதான் உண்மை' என்று நம்புவதற்கான அபாயமும் உண்டு.

அதற்காக இதை தடை செய்ய வேண்டும் என்பது இல்லை. ஏனெனில் பல வருடங்களுக்கு முன்பு தடை செய்த எத்தனையோ விஷயங்கள் நமக்கு இப்போதும் கிடைக்கிறது. அதுபோல இன்னும் சில வருடங்களுக்கு பிறகு இதுவும் கிடைக்கக் கூடும். அதற்காக சொல்கிறேன்.

பிரபலமான கவிதை வரிகள் உண்டு. 'என்னுடைய சுதந்திரத்தை நீ பறித்து கொள்வதாக இருந்தால் பறிபோவது என்னுடையது மட்டுமல்ல, உன்னுடைய சுதந்திரமும்தான்' என்ற பொருளில் அது அமைந்திருக்கும். இந்த விஷயத்தில் எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது. அதேசமயம், நாம் இதுபோன்ற ஒரு படைப்பு எடுத்து அதற்கு தடை செய்கிறார்கள் என்றால், அப்போது நான் நம் பக்கம் நிற்பேன். ஆனால், அதே விஷயத்தை நாம் பதிலுக்கு செய்ய கூடாது".

'குயின்' இணையத்தொடரின் இயக்குநர்களில் ஒருவராக பணிபுரிந்துள்ளீர்கள். இந்த தொடரும் அரசியல் தலைவர் ஒருவரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட புனைவு. அந்த சமயத்தில் இதுபோன்ற எதிர்ப்புகளை சந்தித்தீர்களா?

"வேண்டுமென்றே ஒருவரை தூற்றுவது, போற்றுவது என்ற நோக்கத்தோடு இல்லாமல் மிகவும் கவனத்தோடுதான் 'குயின்' இணையத்தொடரை எடுத்தோம். அதாவது, அந்த கதாபாத்திரம் என்ன மாதிரியான ஒரு உணர்வு சூழலில் இருந்தது என்பதை காட்டுவதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்தது. நேரடியாக எதிர்ப்பை சந்தித்தோமா என்று கேட்டால், ஒரு சில வரவே செய்தன. அவை ஆரோக்கியமான விவாதமாகவே இருந்தது. நிச்சயம் இரண்டாவது சீசனில் அதை கவனத்தில் கொள்வோம். இரண்டாவது சீசனுக்கு எங்கள் தரப்பில் தயாராகவே உள்ளோம். ஆனால், பொதுமுடக்கம், நடிகர்களின் தேதி, பாதுகாப்பு இவை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :