இயக்குநர் ஷங்கர்: "அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது"

"அந்நியன் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியது நான்தான்; அதனை விரும்பியபடி பயன்படுத்தும் உரிமை என்னிடமே உள்ளது," என ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

அந்நியன் படத்தின் கதை உரிமை முழுமையாக தன்னிடம் இருப்பதால் அந்தப் படத்தை இந்தியில் ரீ - மேக் செய்யக்கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அந்த நோட்டீஸில், "அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் நான்தான். படத்தின் கதை உரிமை முழுவதையும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான்தான் வாங்கியிருக்கிறேன். அதற்கான பணமும் அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்தக் கதையின் முழுமையான உரிமையாளர் நான்தான். இந்த நிலையில், என்னுடைய அனுமதி இல்லாமல் அந்தக் கதையை தழுவியோ, மூலக்கருவைக் கொண்டோ, ரீ - மேக் செய்து படம் எடுப்பது சட்டவிரோதமாகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ரவிச்சந்திரனின் நோட்டீஸிற்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

அதில், அந்நியன் படத்தின் கதை தனக்குத்தான் சொந்தமென அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தெரியும் என ஷங்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் "படம் வெளியாகும்போது கதை, திரைக்கதை, இயக்கம்: ஷங்கர் என்று குறிப்பிட்டுத்தான் படம் வெளியானது. நான் கதை, திரைக்கதை உரிமையை எழுத்து மூலமாக நான் யாருக்கும் வழங்கவில்லை. அதை என் விருப்பப்படி பயன்படுத்துவதற்காக என்னிடமே வைத்துக்கொண்டேன். என்னுடைய உரிமையில் எந்தச் சூழலிலும் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைப் பொறுத்தவரை, அவர் படத்திற்கு வசனம் எழுதுவதற்காக மட்டுமே நியமிக்கப்பட்டார். அதன்படியே திரையிலும் அவர் பெயர் குறிப்பிடப்பட்டது. அவர் கதையிலோ, திரைக்கதையிலோ, பாத்திரப்படைப்பிலோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை.

கதை என் வசமே இருப்பதால் நான் விரும்பியபடி அதை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். உண்மையைச் சொன்னால் உங்கள் நிறுவனத்திற்குத்தான் அந்நியன் படத்தின் மீது எவ்வித ரீ - மேக் உரிமையும் கிடையாது. அப்படி எதையும் நான் எழுத்து மூலம் அளிக்கவில்லை. அப்படியிருக்கும்போது கதை உரிமை உங்களிடம் இருப்பதாக நீங்கள் சொல்ல முடியாது.

அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் நீங்கள் நிறைய லாபம் அடைந்தீர்கள். ஆனால், தேவையில்லாமல் என் எதிர்கால முயற்சிகளின் மீது உரிமை கொண்டாடாதீர்கள்" என்று ரவிச்சந்திரனுக்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

சர்ச்சை ஏன்?

விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டில் அந்நியன் திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தை ஆஸ்கா் ஃபிலிம்ஸ் சார்பில் வி. ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தப் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீ - மேக் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் நேற்று அறிவித்திருந்தார். இந்திப் படத்தை ஜெயந்திலால் கடா என்பவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்நியன் படத்தின் கதை உரிமை முழுமையாக தன்னிடம் இருப்பதால் அந்தப் படத்தை இந்தியில் ரீ - மேக் செய்யக்கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், "அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் நான்தான். படத்தின் கதை உரிமை முழுவதையும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான்தான் வாங்கியிருக்கிறேன். அதற்கான பணமும் அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்தக் கதையின் முழுமையான உரிமையாளர் நான்தான். இந்த நிலையில், என்னுடைய அனுமதி இல்லாமல் அந்தக் கதையை தழுவியோ, மூலக்கருவைக் கொண்டோ, ரீ - மேக் செய்து படம் எடுப்பது சட்டவிரோதமாகும்.

நீங்கள் எடுத்த பாய்ஸ் திரைப்படம் சரியாக ஓடாத நிலையில், பெரும் அழுத்தத்தில் இருந்தீர்கள். இருந்தபோதும் அந்நியன் படத்தை இயக்கும் வாய்ப்பை நான் உங்களுக்கு அளித்தேன். இதற்குப் பிறகுதான் இழந்த இடத்தை நீங்கள் பிடித்தீர்கள். அது என்னுடைய ஆதரவால்தான் நடந்தது. இதை நீங்கள் மறந்து விட்டது வருத்தமளிக்கிறது.

என்னிடம் தெரிவிக்காமல் என்னுடைய வெற்றிகரமான அந்நியன் படத்தை இந்தியில் ரீ -மேக் செய்ய முயற்சிக்கிறீர்கள். நீங்கள் சில நெறிமுறைகளை கடைப்பிடிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அப்படியிருக்கும்போது எப்படி இம்மாதிரி ஒரு சட்டவிரோதமான செயலைச் செய்கிறீர்கள் என்பது புரியவில்லை.

முழு உரிமையும் என் வசம் உள்ள கதையை வைத்துக்கொண்டு இந்த விவகாரத்தில் இதற்கு மேல் ஏதும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறீர்கள்" என ஷங்கருக்கு ரவிச்சந்திரன் அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :