ஓடிடி, சமூக ஊடகங்களுக்கு பிரத்யேக கொள்கை: கடிவாளம் போட்ட இந்திய அரசு - முக்கிய தகவல்கள்

ஓடிடி என சுருக்கமாக அழைக்கப்படும் "ஓவர் தி டாப்" என அழைக்கப்படும் இணையதள திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை வழங்கும் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான பிரத்யேக கொள்கைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதனால் இதுவரை தணிக்கை குழுவின் கண்காணிப்பு வளையத்தில் இருக்காத இந்த இரு வேறு ஆனால், ஒன்றுக்கு ஒன்று தொடர்பைக் கொண்ட தளங்களை, தனது கண்காணிப்பு வரம்புக்குள் இந்திய அரசு கொண்டு வர முற்பட்டிருக்கிறது.

இது தொடர்பான புதிய கொள்கைகள் அடங்கிய வழிகாட்டுதல்களை, டெல்லியில் இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும் மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் வியாழக்கிழமை வெளியிட்டனர். அதன் விவரங்களை செய்தியாளர்களிடமும் அவர்கள் விளக்கினர்.

"இந்தியாவில் சமூக ஊடக தொழில்கள் வரவேற்புக்குரிய ஒன்று என்றாலும், அவற்றில் பகிரப்படும் சில தகவல்கள், வெறுப்புணர்வைத் தூண்டக்கூடியதாக உள்ளன என மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் பல ஆண்டுகளாகவே வந்து கொண்டிருக்கின்றன. போலிச் செய்திகளின் பிரச்னையும் இதில் அடங்கும்," என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

இதை கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி ஓடிடி தளங்களை நடத்தும் நிறுவனங்கள், சமூக ஊடக தளங்களின் நிர்வாகங்கள், தலைமை புகார் அதிகாரியை நியமிக்க வேண்டும். அதுபோல, முதலாவதாக ஒரு தகவலை பதிவிடும் நபர் பற்றிய விவரத்தை அரசோ, நீதிமன்றமோ கேட்கும்பட்சத்தில் அதை அந்த தளங்கள் வெளியிட வேண்டும். இந்த புதிய வழிகாட்டுதல்கள், மூன்று மாதங்களுக்குள் அமலுக்கு வரும் என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, வெளிநாடுகளுடனான உறவுகள், பாலியல் வல்லுறவு, பாலியல் உணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்கள் வந்தாலோ, ஆட்சேபகர தகவல்கள் பகிர்வதாக தெரிய வந்தாலோ, இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி அரசுத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள் என்ன?

புகார் தெரிவிக்கும் குறைதீர் கட்டமைப்பை மூன்று கட்டங்களாக அணுகும் வகையில் செய்தி வெளியீட்டாளர்கள், ஓடிடி தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.

ஓடிடி தளங்கள், அவை திரையிடும் படங்கள் தொடர்பான பார்வையாளர் காணும் நெறிகளை U (யூனிவெர்சல்), U/A 7+, U/A 13+, U/A 16+, and A (பெரியவர் மட்டும்) என சுயமாக அறிவிக்கும் எழுத்துகளை இடம்பெறச்செய்ய வேண்டும்.

U/A 13+ அல்லது பதிமூன்று வயதுக்கு மேற்பட்டோர் காணக்கூடிய படங்கள் அல்லது நிகழ்ச்சியாக இருப்பின், அதை அந்த வயதுக்கு கீழ் உள்ளவர்கள், பார்க்க முடியாதவாறு பெரியவர்களால் கடவுச்சொல் போட்டு பூட்டக்கூடிய வகையிலான வசதியை ஓடிடி செயலி நிறுவனம் வழங்க வேண்டும்.

பெரியவர்களுக்கு மட்டுமான "A" படங்களை பார்க்கும் முன் அதை காண்பவரின் வயதை சரிபார்க்கும் வழிமுறைகளை ஓடிடி தளத்தின் செயலிகள் கொண்டிருக்க வேண்டும்.

பத்திரிகை செய்தி வழங்கும் டிஜிட்டல் ஊடக வெளியீட்டாளர்கள், இந்திய பத்திரிகை கவுன்சில் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்ட விதிகளின்படி அவற்றின் செய்திகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாளிதழ்களுடன் போட்டிபோடும் சரியான தளமாக டிஜிட்டல் ஊடகங்கள் திகழ வேண்டும்.

குறைதீர் நடைமுறைகள்

டிஜிட்டல் ஊடகங்கள், அவற்றுக்கு வரும் புகார்கள் தொடர்பான குறைதீர் நடவடிக்கைக்காக மூன்று கட்ட சுய நடைமுறையை கொண்டிருக்க வேண்டும். முதல் நிலையில் பதிப்பாளர், இரண்டாம் நிலையில் சுய ஒழுங்குமுறை அமைப்பு, மூன்றாம் நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறையின் மேற்பார்வைக்குழு என அந்த வசதிகள் இருக்க வேண்டும். நிகழ்ச்சி நெறிகள் தொடர்பாக வரும் புகார்களை பெறுதல், சரிபார்த்த், குறித்த நேரத்தில் அவற்றுக்கு தீர்வு தரக்கூடிய பதிலை வழங்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடைமுறை கொண்டிருக்க வேண்டும். இந்த சுய ஒழுஙகுமுறை அமைப்புக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியோ குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர் தலைவராக இருந்து பதிப்பாளருக்கு அறிவுறுத்தல்களை வழங்கக் கூடியவராக இருப்பார்.

இந்த செயல்திட்டம், அரசின் குறைவான தலையீட்டை நோக்கமாகக் கொண்டது. எனினும், அந்த தலையீட்டையும் குறைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்களுக்குள்ளாகவே வலுவான ஒரு செயல்முறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

புதிய விதிகளால் என்ன பயன்?

இந்த புதிய விதிகளால் ஒலி-ஒளி சேவைத்துறையின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும், தங்களுக்கு விருப்பமான தகவலை பெற குடிமக்களுக்கு அதிகாரமளிக்கப்படும், தங்களுடைய குறைகளுககு குறித்த நேரத்தில் தீர்வைப் பெற புகார்தாரரால் முடியும், சிறார்கள் - ஆபாச நிகழ்ச்சிகள் பார்ப்பதில் இருந்து தடுக்கப்படுவார்கள் அல்லது பாதுகாக்கப்படுவார்கள், டிஜிட்டல் ஊடகம் மூலம் போலிச் செய்திகளை எதிர்கொள்ளவும் அதற்கு பொறுப்பானவர்களாக வெளியீட்டாளரையும் ஆக்க முடியும் என்று இந்திய அரசு கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: