You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் பிற ஓடிடி செயலிகள் இனி மத்திய அமைச்சகத்தின் கீழ்: விளைவுகள் என்ன?
- எழுதியவர், தீப்தி பத்தினி,
- பதவி, பிபிசி செய்தியாளர்
டிஜிட்டல் செய்தித் தளங்கள், ஆன்லைன் உள்ளடக்க தளங்கள் ஆகியவற்றை இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் உத்தரவை மத்திய அரசு புதன்கிழமை பிறப்பித்தது.
"இந்திய அரசு (பணி ஒதுக்கல்) விதிகள், 1961-ன் கீழ் இணைய தகவல் வழங்குநர்கள் மூலம் அளிக்கப்படும் திரைப்படங்கள், ஒளி, ஒலி நிகழ்ச்சிகள், ஆன்லைன் தளங்களில் வெளியிடப்படும் செய்திகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை கொண்டுவரும் வகையில், அந்த விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக நவம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை தெரிவிக்கிறது.
என்ன தாக்கம் ஏற்படும்?
ஓ.டி.டி. என்று அழைக்கப்படும் ஆன்லைன் காணொளித் தளங்கள், டிஜிட்டல் செய்தித் தளங்கள் ஆகியவற்றுக்கு இந்த அரசாணையால் எவ்விதமான தாக்கங்கள் ஏற்படும் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. அரசின் இந்த முடிவை மேம்போக்காகப் புரிந்துகொள்ள முயன்றால், ஆன்லைன் காணொளித் தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், எம்.எக்ஸ். பிளேயர், ஆஹா போன்றவை மற்றும், டிஜிட்டல் செய்தித் தளங்கள் தொடர்பாக ஒரு கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு இது அதிகாரத்தை வழங்கும் என்று தெரிகிறது.
தணிக்கை வருமா?
ஆனால், தகவல்களை தணிக்கை செய்வதற்கோ, உள்ளடக்கங்களை அரசு விருப்பம்போல முடிவு செய்வதற்கோ இது வழிவகுக்குமா என்பது குறித்து ஒரு தெளிவு இல்லை. இந்தியாவில் தற்போது பல்வேறு வகை ஊடகங்களுக்கும் தம்மைத் தாமே ஒழுங்குபடுத்தும் சில அமைப்புகள் உள்ளன.
அச்சு ஊடகங்களை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்னும் சட்டபூர்வ அமைப்பு கண்காணிக்கிறது. தொலைக்காட்சி செய்திகளைக் கண்காணிக்க சுய ஒழுங்காற்று அமைப்பான நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் இருக்கிறது. அட்வர்டைசிங் ஸ்டேன்டர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா விளம்பரத் துறைக்கான வழிகாட்டு நெறிகளை வகுக்கிறது. திரையரங்குகளிலும், தொலைக்காட்சியிலும் திரையிடும் படங்களுக்கு சென்ட்ரல் போர்ட் ஆஃப் பிலிம் சர்ட்டிபிகேஷன் (திரைப்பட சான்றளிப்புக்கான மத்திய வாரியம்) தணிக்கை செய்து சான்றளிக்கிறது.
துறையை சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
டிஜிட்டல் செய்தித் தளங்களை செய்தி விளம்பர அமைச்சகத்தின்கீழ் கொண்டுவருவதில் கொள்கை அளவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார் 'நியூஸ் மினிட்' செய்தித் தளத்தின் முதன்மை ஆசிரியர் தன்யா ராஜேந்திரன்.
"ஆனால் எந்தத் தொடர் நிகழ்வுகளின் பின்னணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது அச்சமூட்டுவதாக உள்ளது. கொள்கைகள் வகுக்கப்படுவதை தனித் தனி செயல்பாடாகப் பார்க்க முடியாது. டிஜிட்டல் ஊடகத்தை முறைப்படுத்த தாங்கள் விரும்புவதாக தேவையற்ற ஆர்வத்தோடு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது மத்திய அரசு. டிஜிட்டல் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு உச்ச வரவம்பினையும் சமீபத்தில் அரசு அறிவித்தது. எனவே, டிஜிட்டல் ஊடகத்தை முறைப்படுத்த அரசு விரும்புமானால், முதலில் அது தொடர்புடைய துறையை சேர்ந்தவர்களிடம் விவாதிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றும் கூறினார் தன்யா.
11 டிஜிட்டல் செய்தித் தளங்கள் சேர்ந்து உருவாக்கிய டிஜிபப் நியூஸ் இந்தியா ஃபௌண்டேஷன் என்ற பேரமைப்பின் தவிசாளராக (சேர்பெர்சன்) ஆக இருக்கிறார் தன்யா.
"இந்தியாவில் உள்ள, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களைப் பற்றி இந்திய அரசு குறிப்பிடுகிறது. ஆனால், பல ஓ.டி.டி. தளங்கள், டிஜிட்டல் தளங்கள் இந்தியாவில் இயங்கினாலும், இந்தியாவில் பதிவு செய்யப்படாதவையாக இருக்கலாம். இந்திய அரசு இதைப்பற்றி சிந்தித்து டிஜிட்டல் துறையின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டுமே அல்லாது, புதிய உத்தரவைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த, நிர்வகிக்க, உள்ளடக்கங்களை தணிக்கை செய்ய, வணிகத்தை மட்டுப்படுத்த முயலக்கூடாது" என்றும் குறிப்பிட்டார் தன்யா.
இணைய சுதந்திர அமைப்பு என்ன சொல்கிறது?
உருவாக வாய்ப்புள்ள முறைப்படுத்தல் அல்லது சட்டம் என்ன வடிவம் எடுக்கும் என்பது தொடர்பாக ஒரு படபடப்பு இருப்பதாக குறிப்பிடுகிறது இந்தியன் டிஜிடல் லிபர்ட்டிஸ் ஆர்கனைசேஷன் (இந்திய டிஜிடல் சுதந்திர அமைப்பு), இன்டர்னெட் ஃப்ரீடம் ஃபௌன்டேஷன் (இணைய சுதந்திர அமைப்பு) ஆகியவை வெளியிட்ட ஒரு அறிக்கை.
"இந்த உத்தரவோ, வேறு சட்ட நடவடிக்கைகளோ, தணிக்கையில் கொண்டுபோய்விடுமா என்பது வெளிப்படையாக உள்ள கேள்வி. அல்லது போலிச் செய்தி போன்ற சமூகப் பிரச்னையைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் அரசுக் கட்டுப்பாட்டை கொண்டுவருமா என்ற கேள்வியும் இருக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'பொறுத்துப் பார்க்கவேண்டும்'
இது தொடர்பாக கருத்து கேட்பதற்காக பல ஓ.டி.டி. தளங்களையும், இயமை (IAMAI) எனப்படும் இன்டர்னெட் அன்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற தொழில்துறை அமைப்பையும் தொடர்புகொள்ள முயன்றது பிபிசி.
ஆனால் தெலுங்கு மொழி ஓடிடி தளமான ஆஹா (AHA)-வின் உள்ளடக்க நிர்வாககுழுவின் தவிசாளர் அல்லு அரவிந்த் மட்டுமே பேச முன்வந்தார். இந்த உத்தரவு எப்படி வடிவம் எடுக்கும் என்று தம்மைப் போன்ற துறைசார்ந்தவர்கள் பார்க்க காத்திருப்பதாக கூறிய அவர், சென்சார் போர்டு போன்ற ஒன்றை உருவாக்க முயல்வது பேரழிவாகப் போய் முடியும் என்றும், ஆனால், அப்படி ஒன்றை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"நிர்வாணத்தை காட்டுதல் போன்றவற்றின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஏனெனில், ஓ.டி.டி. தளங்களின் உள்ளடக்கம் ஒளிபரப்புவோரிடம் இருந்து நேராக வீட்டுக்குச் செல்கிறது. இந்த உலகத் தொற்று காலத்தில் குடும்பமாக ஓ.டி.டி. தளங்களில் நிகழ்ச்சியைக் காணும்போது குடும்பமாக அமர்ந்து பார்ப்பவர்களிடம் சில சங்கடங்கள் ஏற்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், நிர்வாணம் தவிர்த்து, பிற துணிச்சலான ஒலி, ஒளி வெளிப்பாடுகள் பெரிதாக கட்டுப்படுத்தப்படாது என்பதே தற்போதைக்கு என் நம்பிக்கையாகவும், வேண்டுகோளாகவும் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தமது எண்ணங்களை வெளிப்படுத்தும் வரை காத்திருக்கவேண்டும் என்று கூறிய அவர், விதிகளை வகுக்கும் முன்னர் அரசு துறை சார்ந்தவர்களோடு கலந்தாலோசிக்கும் என்று உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
இணைய உள்ளடக்கத்தை நெறிப்படுத்த அரசு எப்படித் திட்டமிடுகிறது என்பதைப் பொறுத்துப் பார்க்கவேண்டும் என்று ஊடக சட்டங்கள் தொடர்பான பேராசிரியர் மடபூஷி ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்தார்.
துறையை இந்த நடவடிக்கை சீண்டிவிட்டுள்ள அதே நேரம் அமைச்சகம் எப்படி நிதானத்தைக் கடைபிடிக்கும் என்பதைப் பொறுத்துப் பார்க்கவேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மரபான ஊடகங்களின் கோரிக்கை
"வெற்றிடத்தில் கட்டற்றுப் பணியாற்றிய நாள்கள் முடிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. கட்டுப்பாடுகள் மிகக் குறைவாக இருந்த சூழ்நிலைகளில் டிஜிடல் துறையினர் சிறப்பாக செயல்பட்டதாக வரலாறு காட்டுகிறது. டிஜிடல் துறையினர் இடைநிலையில் செயல்படுகிறவர்கள். இந்த துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது சிரத்தையோடு செயல்பட உரிமை பெற்றவர்கள் என்று ஐ.டி. சட்டம் 2000 கூறினாலும், கள நிலவரம் முற்றிலும் வேறுபட்டது" என்று பிபிசியிடம் தெரிவித்தார் சர்வதேச சைபர் செக்யூரிட்ட சட்ட கமிஷனின் தவிசாளர் பவன் துக்கால்."முறைப்படுத்தல் என்று வரும்போது தங்களுக்கும், டிஜிடல் தளங்களுக்கும், சமமான நெறிமுறைகள் வேண்டும் என்று மரபான ஊடகங்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றன. அந்தக் கோரிக்கையின் மீதுதான் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைப்படுத்தல் செய்வதை நோக்கி இந்தப் பயணம் தொடங்கியுள்ளது. அது என்னவிதமான முறைப்படுத்தலாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று துக்கால் தெரிவிக்கிறார்.
'போலிச் செய்திகளுக்கு குறிப்பாக சட்டம் கொண்டுவந்திருக்கலாம்'
போலிச் செய்திகள் போன்ற குறிப்பான சவால்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுவருவதற்குப் பதிலாக அரசு முழு சூழலையே முறைப்படுத்தும் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த நடவடிக்கைக்கு முன்னர் நடந்த தொடர் நிகழ்வுகள் இதோ:
ஓடிடி தளங்களை முறைப்படுத்தக் கோரி ஷஷாங்க் ஷேகர் ஜா என்ற வழக்குரைஞர் தொடுத்த பொது நல மனு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அக்டோபரில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்தது உச்சநீதிமன்றம்.
இதற்கு முன்னதாக, 'யு.பி.எஸ்.சி. ஜிஹாத்' என்ற தலைப்பில் சுதர்சன் டிவியில் வெளியான ஒரு நிகழ்ச்சிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் செப்டம்பரில் ஒரு மனு தாக்கல் செய்தது.
டிஜிடல் ஊடகங்களை முதலில் முறைப்படுத்தவேண்டும் - மத்திய அரசு
"இதனால் ஏற்படும் தீவிர தாக்கங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஊடகங்களுக்கு எதிரான கட்டுப்பாட்டை கொண்டுவர விரும்பினால், முதலில் அது டிஜிடல் ஊடகங்கள் தொடர்பில் கொண்டுவரப்படவேண்டும். ஏனெனில், எலக்ட்ரானிக் ஊடகங்கள் (டிவி), அச்சு ஊடகங்கள் தொடர்பில் ஏற்கெனவே போதிய கட்டமைப்பும், நீதித்துறை உத்தரவுகளும் உள்ளன" என்று அந்த மனுவில் குறிப்பிட்டது மத்திய அரசு.
ஓ.டி.டி. தளங்களையும் மைய நீரோட்ட ஊடகங்களின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது. இணைய உள்ளடக்கங்களை முறைப்படுத்தும் பிரச்சனையும், அதை எந்த அமைச்சகம் மேற்பார்வை செய்யவேண்டும் என்பதும் இரண்டாண்டுகளாக நடந்துவரும் விவாதம்.
தொடர் நிகழ்வுகளின் காலவரிசை
அக்டோபர் 2018: ஆன்லைன் தளங்களின் உள்ளடக்கங்களை முறைப்படுத்தவேண்டும் என்று கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆகியவை பதில் அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. "தங்கள் உள்ளடக்கங்களைக் காட்ட ஆன்லைன் தளங்கள் தங்களிடம் உரிமம் ஏதும் பெறத்தேவையில்லை. தங்கள் அமைச்சகம் அதை முறைப்படுத்தவும் இல்லை" என்று தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தங்கள் பதில் மனுவில் குறிப்பிட்டது.
"இணையத்தில் உள்ளடக்கங்களை இடுவதற்காக ஒரு அமைப்புக்கோ, நிறுவனத்துக்கோ உரிமம் தருவதற்கோ, உள்ளடக்கத்தை முறைப்படுத்துவதற்கோ விதிமுறை ஏதும் இல்லை. எனவே, இணையத்தில் உள்ளடக்கத்தை முறைப்படுத்தவில்லை" என்று மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தமது பதில் மனுவில் குறிப்பிட்டது. 2019 ஜனவரி மாதம் சுய கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்தது இன்டர்னெட் மொபைல் அசோசியேஷன் (இயமை) என்ற தொழில் கூட்டமைப்பு.
இணைய உள்ளடக்க வழக்குநர்களுக்கான வழிகாட்டு நெறிகளை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த சுய வழிகாட்டு நெறிகளுக்கு நெட்ஃப்ளிக்ஸ், ஜீ5, ஆல்ட்பாலாஜி, அர்ரே, ஈரோஸ்நவ், ஹாட்ஸ்டார், வூட், ஜியோ, சோனி லைவ் ஆகிய நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன.
2019 பிப்ரவரி: வழிகாட்டு நெறிமுறையோ, சட்ட முறைப்படுத்தலோ செய்யும்படி உத்தரவிட எந்தக் காரணமும் இல்லை என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆகஸ்ட் 2019 : சினிமேட்டோகிராப் சட்டத்தின் கீழ் ஆன்லைன் உள்ளடக்கங்களுக்கு சான்றொப்பம் தருவது தொடர்பாக தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் ஆலோசனைகளை வரவேற்பதாக மத்திய அரசின் பிரஸ் இன்ஃபர்மேஷன்பீரோ ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டது.
அக்டோபர் 2019: ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களின் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றை தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அந்த தளங்கள் என்னென்ன செய்யக்கூடாது என்று ஒரு பட்டியலை அமைச்சகம் வெளியிடும் என்று அவர்களிடம் குறிப்பாக உணர்த்தியது அரசு.
5 பிப்ரவரி 2020: சுய கட்டுப்பாட்டு சட்டதிட்டங்களை அறிவித்தது இயமை. இதில் ஹாட்ஸ்டார், வூட், ஜியோ, சோனிலைவ் ஆகிய நான்கு நிறுவனங்கள் கையொப்பம் இட்டன.
டிஜிடல் கன்டென்ட் கம்ப்ளைன்ட் கவுன்சில் (DCCC) என்ற ஒரு சுயேச்சையான அமைப்பை உருவாக்கப் போவதாக அந்த சட்ட திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அரசிடம் இருந்தும், பயனர்களிடம் இருந்தும் வரும் புகார்களை இந்த அமைப்பு ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தாமே தணிக்கை செய்துகொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்வதன் தொடக்கம் என்றும், தொலைக்காட்சிக்கு நேர்ந்தது ஆன்லைன் ஸ்ட்ரீமிங்குக்கும் நேர்வதற்கான முன்னோட்டம் என்றும் இதனை இணைய சுதந்தர அமைப்பு விமர்சித்தது. மார்ச் 2020: ஓடிடி தளங்கள் வழிகாட்டு நெறிகளையும், தீர்ப்பு வழங்கும் அமைப்பையும் உருவாக்கிக் கொள்ள தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 100 நாள் காலக்கெடு வழங்கினார்.
ஆனால், இயமையில் இணைந்து இயங்கும் ஸ்டிரீமிங் தளங்களுக்கு வழிகாட்டு நெறியை, தீர்ப்பு வழங்கும் அமைப்பை உருவாக்கும் விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
செப்டம்பர் 2020: பொது முறைப்படுத்தல் விதி ஒன்றில் ஓடிடி தளங்கள் கையொப்பம் இட்டன. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, எம்.எக்ஸ் பிளேயர், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோ, ஈரோஸ் நவ், ஆல்ட் பாலாஜி, ஹாய்சோய், ஹங்கமா, ஷெமாரூ, டிஸ்கவரி பிளஸ், ஃப்ளிக்ஸ்ட்ரீ, வையாகாம் 18, ஜீ 5 ஆகிய தளங்கள் இதில் கையொப்பம் இட்டன.
வயது வாரியாக உள்ளடக்கங்களை பகுப்பது, தலைப்புகளை ஒட்டி உள்ளடக்கங்களை விவரிப்பது, யார் அணுகலாம் என்பதை கட்டுப்படுத்தும் கருவிகளை வடிவமைப்பது ஆகியவை இந்த சுய கட்டுப்பாட்டு விதிமுறையில் அடக்கம் என்று இயமை தெரிவித்தது. இந்த விதிகளை மீறுவது தொடர்பான புகார்களை விசாரிக்க வெளிப்படையான, தெளிவான, முறைப்படியான அமைப்பு முறையும், மேல் முறையீட்டு அமைப்பும் இந்த விதிமுறையில் வரையறுக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் மத்திய அரசு ஓ.டி.டி. தளங்களை, டிஜிடல் செய்தித் தளங்களை தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்திருப்பது விவாதத்தை தோற்றுவித்துள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று துறை சார்ந்தவர்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம்
- லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் ட்விட்டர்: இந்திய அரசு நடவடிக்கை பாயுமா?
- "புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது வருத்தத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியளிக்கிறது" - அருந்ததி ராய்
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது மீண்டும் ரத்து: குழப்பங்களை ஏற்படுத்தும் அறிவிப்புகள்
- சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்
- 4 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து தயாரிப்பு: சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தகவல்
- ஜோ பைடனின் முதல் நடவடிக்கை எது? கொரோனா முதல் இனவெறி பிரச்னை வரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: