You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அருந்ததி ராய்: "புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது வருத்தத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியளிக்கிறது" -
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
"ஒரு எழுத்தாளராக எழுதுவது மட்டும்தான் என் வேலை. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெறுவதற்காகப் போராடுவது என் வேலையில்லை. எழுத்தாளர்கள் படிக்கப்படுவதை இம்மாதிரி தடைகளால் ஏதும் செய்ய முடியாது," எனத் தனது புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்திருக்கிறார்.
அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அருந்ததி ராய், அந்தப் புத்தகம் இத்தனை நாள் பாடத் திட்டத்தில் இருந்ததே தனக்குத் தெரியாது எனக் கூறியிருக்கிறார்.
"என்னுடைய புத்தகமான Walking with the Comrades ஏபிவிபியின் அச்சுறுத்தலுக்கும் அழுத்தத்திற்கும் பணிந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, வருத்தத்தைவிட மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஏனென்றால், அது பாடத் திட்டத்தில் இடம்பெற்றதே எனக்குத் தெரியாது. இத்தனை ஆண்டுகளாக அது கற்பிக்கப்பட்டது சந்தோஷம்தான். இப்போது பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து எனக்கு பெரிய அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. ஒரு எழுத்தாளராக எழுதுவது மட்டும்தான் என் வேலை. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெறுவதற்காக போராடுவது என் வேலையில்லை. இதை மற்றவர்கள் செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது பரவலாக படிக்கப்படும்," என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும், எழுத்தாளர்கள் படிக்கப்படுவதை இம்மாதிரி தடைகளால் ஏதும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "தற்போதைய ஆட்சியில் இலக்கியம் குறித்து இம்மாதிரி குறுகிய, மேலோட்டமான, பாதுகாப்பு உணர்வற்ற தன்மையை வெளிப்படுத்துவது, அந்த ஆட்சியை விமர்சிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை ஆதரிப்பவர்களுக்கும்கூட பின்னடைவாகத்தான் இருக்கும். உலக அரங்கில் ஒரு மரியாதையையும் கண்ணியத்தையும் பெற விரும்பும் ஒரு சமூகத்தின், நாட்டின் அறிவுஜீவித் திறனை இது கட்டுப்படுத்தும்" என்றும் அருந்ததி ராய் கூறியிருக்கிறார்.
வெளியில் இருந்து வரும் அழுத்தங்களுக்காக பாடங்களை நீக்குவது என்பது சுதந்திரச் சிந்தனையின் வேர்களில் வெந்நீரைப் பாய்ச்சுவதைப் போல என்கிறார் அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான வசந்திதேவி.
"நான் ஒரு காலத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்திருக்கிறேன். அங்கு இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடந்திருப்பது வருத்தமாக இருக்கிறது. அதன் கருத்து சுதந்திரத்தையும் சிந்தனைச் சுதந்திரத்தையும் பறிப்பதைப் போல இருக்கிறது. 2011ல் வெளிவந்த புத்தகம், 2017ல் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இது தடைசெய்யப்பட்ட புத்தகம் அல்ல. இப்போதும் விற்பனையில் உள்ள புத்தகம்தான். இந்துத்துவவாதிகள், ஏபிவிபி போன்றவர்கள் கேட்டார்கள் என்பதற்காக 2017ல் இருந்து உள்ள ஒரு பாடத்தை தூக்கியெறிவது பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் இலக்கணத்தை மீறுவதாக உள்ளது," என்கிறார் வசந்திதேவி.
ஒரு புத்தகம் பாடத்திட்டத்தில் இடம்பெற பல நடைமுறைகளைத் தாண்ட வேண்டும் எனச் சுட்டிக்காட்டும் வசந்திதேவி, எதிர்ப்பு வந்தவுடன் நீக்குவது சரியல்ல என்கிறார். "ஒரு புத்தகம் பாடத் திட்டத்திற்கு உள்ளே வர நீண்ட நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் 'போர்ட் ஆப் ஸ்டடிஸி'ல் விவாதிப்பார்கள். அதற்குப் பிறகு, அகாடமிக் கவுன்சில், செனட் ஆகியவற்றின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்குப் பிறகுதான் மாணவர்களுக்கு ஒரு புத்தகம் பாடமாக முன்வைக்கப்படுகிறது. இப்படி ஒரு எதிர்ப்பிற்காகப் புத்தகங்களைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது, சுதந்திர சிந்தனையின் வேர்களிலேயே வெந்நீரைப் பாய்ச்சுவதைப்போல," என்கிறார் அவர்.
நம்முடைய காலத்தின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவர் அருந்ததி ராய் எனக் கனடா நாட்டு எழுத்தாளரான நவோமி க்ளெய் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டும் வசந்திதேவி, அம்மாதிரி ஒருவருடைய எழுத்தை படிக்கும் வாய்ப்பை மாணவர்களிடமிருந்து பறிப்பது சரியல்ல என்கிறார்.
ஆனால், மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் போன்றோரை ஆதரிக்கும் வகையில் எழுதினால் அவற்றை நீக்குவதை ஆதரிக்கத்தான் வேண்டும் என்கிறார் வலதுசாரி கல்வியாளரான ராம சுப்ரமணியன். "மாவோயிஸ்ட், நக்ஸலைட் ஆகியோரைப் புகழ்வதைப்போல எழுதினால், அம்மாதிரி பாடங்களை நீக்குவது குறித்த முடிவை ஆதரிக்கிறேன். இப்போதுதான் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அருந்ததி ராய் ஏதோ விருது வாங்கிவிட்டார் என்பதற்காக அவர் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. பல இடங்களில் நிர்வாகக் குழுக்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர்தான் இருக்கிறார்கள். இதனால்தான் இப்படி நடக்கிறது. பிரிவினை வாதம் குறித்த பாடம் இருந்தால் நீக்குவதில் தவறில்லை. இதில் காவி என்றெல்லாம் பேசுவதில் அர்த்தமில்லை," என்கிறார் ராமசுப்ரமணியன்.
மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் இம்மாதிரி பாடத் திட்டத்திலிருந்து பாடங்களோடு புத்தகங்கள் நீக்கப்படுவது முதல் முறையல்ல. 2012ஆம் ஆண்டில் டி. செல்வராஜின் சிறுகதைத் தொகுப்பான 'நோன்பு', தமிழ் மொழிப் பாடத்தின் முதலாவது செமஸ்டரில் இடம்பெற்றிருந்தது. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த 'ஆண்டாள்' என்ற சிறுகதைக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அந்தக் கதை பிறகு நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக சரஸ்வதி என்ற கதை அதில் சேர்க்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: