You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தி திணிப்பு: "தமிழ் உணர்வை சிறுமைப்படுத்துவதா?" கொதித்தெழுந்த மத்திய அரசு அதிகாரி
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி மொழி திணிக்கப்படுவதாக ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை புறநகர் பகுதியில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தில் இந்தியை தாய்மொழியாக கொண்ட வடஇந்தியர்கள் பணியில் உள்ளபோதும், இந்தி தெரியாத உதவி ஆணையராக பணிபுரிந்து வரும் பாலமுருகனுக்கு, இந்தி மொழியை பரப்பும் பிரிவில் திட்டமிட்டு வேலை ஒதுக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய பாலமுருகன் தனது குடும்பத்தார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பதால் சிறு வயதில் இருந்தே, தாய்மொழி தமிழ் மீதான பற்று அதிகரித்திருந்தது என்றும் அதனால் இந்தி பிரிவில் பணியாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
''தமிழகத்தில் 1965ல் ஜனவரி மாதம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அதே ஜனவரி 23ம் தேதி நான் பிறந்தேன். என் தந்தை மருத்துவர் பாலசுந்தரம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஜனவரி 27ம் தேதி நடந்த தடியடியில் காயமடைந்தார். என் குடும்பத்தில் இந்தி எதிர்ப்பு போராட்ட உணர்வு என்பதை விட தாய்மொழியை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருந்தது. தற்போது எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் ஈடுபாடோடு செய்யமுடியாது என்ற காரணத்தால்தான் இந்தி பிரிவில் இருந்து மாற்றம் வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதோடு இந்தி தெரிந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் வேண்டுமென்றே என்னை போன்றவர்களை அமர்த்துவதை இனிவரும் காலங்களில் தவிர்க்கவேண்டும் என்பதற்காக கடிதம் எழுதியுள்ளேன்,'' என பாலமுருகன் கூறினார்.
பணி நிமித்தமாக மும்பையில் வசித்தபோது, தனது குழந்தைகள் இந்தி கற்றுக்கொண்டனர் என்று கூறிய அவர், ''என் மனைவிக்கு இந்தி தெரியும். என் குழந்தைகள் மும்பையில் படித்தபோது இந்தி கற்றுக்கொண்டனர். இந்தி கற்றுக்கொள்ளகூடாது என்பது என் கொள்கை அல்ல. இந்தி தெரியாத என்னை இந்தியை பரப்பும் வேலையில் அமர்த்தியதை ஏற்க முடியாது என்பதுதான் என் வேண்டுகோள்,'' என்கிறார்.
முன்னதாக, தனது துறைத்தலைவருக்கு இரு பக்க கடிதத்தை பாலமுருகன் அனுப்பியிருந்தார். அதில், ''ஆணையர் அலுவலகத்தில் இந்தியை தாய்மொழியாக கொண்ட ஒரு உதவி ஆணையர் பணியில் உள்ளார். இந்தி பிரிவு பணியை அவருக்கு ஒதுக்காமல், எனக்கு ஒதுக்கியது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும். இது என்னுடைய தமிழ் உணர்வை சிறுமைப்படுத்தும் நோக்குடன் செய்துள்ளனர். இந்த அலுவலகத்தில் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். அவர்களை இந்தி பிரிவு பணியில் அமர்த்தாமல், தமிழர்களை அந்த பணியில் அமர்த்தியுள்ளது சரியான செயலாகாது,'' என பாலமுருகன் கூறியுள்ளார்.
மேலும் "இந்தி பிரிவில் மூன்று பணியிடங்கள் உள்ளதாகவும், தற்போதுள்ள பாலமுருகன் மற்றும் ஒரு அதிகாரி ஆகியோருக்கும் இந்தி தெரியாத நிலையில், அதே பிரிவில் மேலும் ஒரு இந்தி தெரியாத ஒரு அதிகாரியை பணியமர்த்தியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்" என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி பிரிவில் கோப்புகளில் எழுதப்படும் குறிப்பு மற்றும் கடிதங்கள் இந்தியிலேயே இருக்கவேண்டும் என்பது விதி. குறைந்தபட்சம் 50 விழுக்காடாவது இந்தியை பயன்படுத்த வேண்டும். இதற்கு முன்னர் அலுவலகத்தில் இருந்த வட மாநில அலுவலர்கள் இந்தியில் எழுதுவார்கள் என்றும் அவர்கள் எழுதித்தரும் குறிப்பு மற்றும் கடிதங்களுக்கு கையெழுத்து மட்டுமே போட்டதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தி தெரிந்த அதிகாரிகள் அதே அலுவலகத்தில் உள்ளபோது, இந்தி தெரியாத மூன்று அதிகாரிகளை இந்தி பிரிவில் பணியமர்த்துவது இந்தியை திணிக்கும் செயல் என அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- ஹாங்காங் போராட்டம்: 12 வயது சிறுமியை கீழே தள்ளும் காவல்துறை - வைரலாகும் காணொளி
- அதிமுக எம்.பியின் சர்ச்சை பேட்டி: "ஆளும் கட்சியால் ஓரம் கட்டப்படுகிறேன்"
- இலங்கை நாடாளுமன்றம் செல்ல மரண தண்டனை கைதிக்கு நீதிமன்றம் அனுமதி
- சீன வம்சாவளியைச் சேர்ந்த 3,000 பேர் ராஜஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டது ஏன்?
- நடிகை கங்கனா ரனாவத்துக்கு மத்திய படை பாதுகாப்பு - இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
- கொரோனாவில் இந்தியா 2ஆம் இடம்: Go Corona Go முதல் PMCares வரை - கடந்து வந்த பாதை
- ஒபாமா, டிரம்ப் ஆதரவுடன் அமெரிக்காவின் அதிகாரமிக்க பதவியில் தமிழர் சேதுராமன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: