You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் இந்தியா 2ஆம் இடம்: Go Corona Go முதல் PMCares வரை - கடந்து வந்த பாதை
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின்படி, திங்கள் காலை வரை இந்தியாவில் 42,04,613 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 71,642 பேர் பலியாகி உள்ளனர்.
முதல் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், ரஷ்யா நான்காவது இடத்திலும், ஐந்தாவது இடத்தில் பெருவும் உள்ளன.
அமெரிக்காவில் இதுவரை 6,276,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,88,941 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
சீனாவின் வூஹான் நகரில் இருந்து கேரளம் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவருக்கு ஜனவரி மாத இறுதியில் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதே இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தொற்றாக கருதப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முன்னதாக மார்ச் 22ஆம் தேதி 14 மணி நேர மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டு மே 31ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் படிப்படியாகப் பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டன.
முதல் சமூக முடக்கம் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரையும், இரண்டாம் கட்ட சமூக முடக்கம் ஏப்ரல் 15 முதல் மே 3 வரையும், மூன்றாம் கட்ட சமூக முடக்கம் மே 4 முதல் மே 17 வரையும், நான்காம் கட்ட சமூக முடக்கம் மே 18 முதல் மே 31 வரையும் அமலில் இருந்தன.
பின்னர் அன்லாக் 1.0 வில் தளர்வுகள் ஆரம்பித்தன. செப்டம்பர் 30 வரை அன்லாக் 4.0 அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோ கொரோனா கோ, அகல் விளக்கு... உச்சம் தொட்ட வதந்தி
மக்கள் ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட மார்ச் 22 ஒரு நாள் ஊரடங்கின் போது மாலை நேரத்தில் மக்கள் தீபங்களை ஏற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதற்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து 9 நிமிடங்கள் டார்ச், அகல்விளக்கு அல்லது செல்போன் ஒளியை ஒளிர விட சொன்னார்.
மோதியின் அறிவிப்புக்குப் பின்னால் அறிவியல் காரணங்கள் உள்ளதாக சிலர் சிலாகித்தனர்.
9 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் என்று சிலரும், 9 நிமிடங்கள் விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் பூமியின் வெப்பநிலை உயரும் அதனால் கொரோனா உயிரிழக்கும் என்று சிலரும், ஏப்ரல் 9-ம் தேதி நிலவு ஒளியும் செல்போன் டார்ச் ஒளியும் இணைவதால் ஏற்படும் கதிர்களால் கொரோனா உயிரிழக்கும் என்று சமூக ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், இந்திய அரசு இதனை மறுத்தது.
இந்திய அரசின் தகவல் தொடர்பு துறையின் ட்விட்டர் கணக்கில், "யாரும் அறிவியல்பூர்வமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம். நம் ஒற்றுமையை வெளிக்காட்டவே விளக்கு ஏற்றும் செயல்," என குறிப்பிட்டனர்
"கொரோனாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தின் மன உறுதியையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடுதான் இது. தயவுசெய்து சமுக இடைவெளியைப் பின்பற்றுங்கள்," என்றும் தெரிவித்தனர்.
பின்னர் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மோதிக்கு நன்றி செலுத்த அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது.
இது குறித்து அப்போது ட்வீட் செய்த பிரதமர் மோதி, "எனக்கு மரியாதை செலுத்துவதற்காக மக்கள் 5 நிமிடங்களுக்கு நிற்க வேண்டும் என்று ஏதோ பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக எனக்குத் தெரிய வந்துள்ளது. முதலில் என்னை யாரோ பிரச்சனையில் மாட்டிவிட இவ்வாறான கருத்துகளைப் பரப்புகிறார்கள் என்று தோன்றியது. ஆனால், அது யாரேனும் உண்மையிலேயே என் நல்லதுக்காக நினைத்திருக்கலாம். எனினும், என் மீது உங்களுக்கு அன்பு இருந்து, எனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால், இந்த கொரோனா தொற்று முடியும் வரையிலாவது ஒரு ஏழை குடும்பத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். அதைவிட எனக்கு பெரிய மரியாதை ஏதும் இருக்காது," என்று பதிவிட்டார்.
இதற்கெல்லாம் முன்னதாக மார்ச் இரண்டாம் வாரத்தில் இந்திய குடியரசு கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே, மும்பையில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் 'கோ கோரோனா' என்று கோஷமிட்டார். இது சமூக ஊடகங்களில் வைரலானது.
புலம்பெயர் தொழிலாளர்கள்
இது ஒரு புறம் இருக்க, கொரோனா சமூக முடக்கத்தால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்தனர். திக்கற்றவர்களாக சாரை சாரையாக வீதிகளில் பல நூறு கி.மீ நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் மக்கள் சென்ற காட்சிகள் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியது.
இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பொறுமையில்லாததால் சாலைகளில் நடந்தும், கூட்டமான ரயில்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் என மத்திய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் அப்போது கூறி இருந்தார்.
PMCares
இதற்கு மத்தியில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற ஒரு நிதி அமைப்பு வெளிப்படைத்தன்மை அற்றதாக இருக்கிறது என்ற குற்றச் சாட்டுக்கும், சர்ச்சைக்கும் உள்ளாகின.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து மார்ச் மாத இறுதியில் சமூக பொது முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில், மார்ச் 27ஆம் தேதி, பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி என்ற நிதியத்தை உண்டாக்கினார். சுருக்கமாக பி.எம். கேர்ஸ். (PM Cares)
இந்தியர்கள் அனைவரும் இதற்கு நிதியளிக்க வேண்டும் என அதற்கு அடுத்தநாள் கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவர் பகிர்ந்த ட்வீட்டில், "பி.எம் கேர்ஸ் நிதியத்துக்கு நிதியளியுங்கள். இது என் சக இந்தியர்களுக்கான கோரிக்கை," என்று கூறி இருந்தார். மேலும் அவர், " இந்தியா கொரோனாவை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் இதுபோன்ற இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ளவும் இந்த நிதியானது உதவியாக இருக்கும்," என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிதி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
பி.எம். கேர்ஸ் நிதியம் உருவாக்கப்பட்ட சமயத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த இந்த மக்கள், பசியிலும், தாகத்திலும் பல தங்கள் சொந்த ஊரை அடைய மைல் தூரம் தினமும் நடந்தனர். இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியானார்கள்.
இந்த பி.எம் கேர்ஸ் நிதி அந்த புலம்பெயர் மக்களுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக ஓர் எதிர்க்கட்சி எம்.பி, பி,எம் கேர்ஸ் என்பதற்கு பதிலாக 'PM Doesn't Really Care', அதாவது பிரதமர் உண்மையில் கவலைப்பட மாட்டார் என பெயரை மாற்றுங்கள் என கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: