லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் ட்விட்டர்: இந்திய அரசு நடவடிக்கை பாயுமா?

(இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் இடம்பெற்ற முக்கிய செய்திகளில் பதிவான முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

லடாக் யூனியன் பிரதேசத்துக்குள் இருக்க வேண்டிய லே பகுதியை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச வரைபடத்தில் இடம்பெறச் செய்த சர்ச்சைக்குரிய விவகாரத்துக்கு தீர்வு காண வரும் நவம்பர் இறுதி வரை அவகாசம் வழங்குமாறு ட்விட்டர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்திய மின்னணு, தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸில், ட்விட்டர் நிறுவன நடவடிக்கை, இந்திய நாடாளுமன்ற இறையாண்மையை களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஏன் கருதக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஐந்து நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ட்விட்டர் நிறுவன துணைத் தலைவருக்கு அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. தவறான வரைபடத்தை காண்பிக்கும் விவகாரத்தில் உரிய பதில் அளிக்காவிட்டால் உங்கள் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்த நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி கூறுகிறது.

இது தொடர்பான மின்னஞ்சல் செய்திக்குறிப்பில் இந்திய அரசுக்கு அனுப்பிய பதில் குறித்து ட்விட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர் விளக்கியிருக்கிறார்.

அதில், மக்கள் உரையாடல் தொடர்பான சேவையை வழங்குவதில் இந்திய அரசு, இந்திய மின்னணு, தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளும் பணியில் ட்விட்டர் நிறுவனம் காட்டும் ஈடுபாடு தொடரும். இந்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு உரிய பதிலை அனுப்பியுள்ளோம். ஜியோ டேக் பிரச்னை தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள், தரவுகளின் விவரத்தை நாங்கள் இந்திய அரசிடம் பகிர்ந்துள்ளோம் என்று அந்த செய்திக்குறிப்பில் ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார் என்று தி இந்து நாளிதழ் செய்தி கூறுகிறது.

'மக்கள் வாக்களித்தது மகா கூட்டணிக்கு; தேர்தல் ஆணையம் அறிவித்தது பாஜகவுக்கு''- தேஜஸ்வி மீண்டும் புகார்

மகா கூட்டணிக்கு ஆதரவாகவே பிஹார் மக்கள் வாக்களித்துள்ளனர், ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வெளி வந்துள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டிருக்கிறது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.

பிகாரில் பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது இந்தநிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் இன்று தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது

''பிஹார் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகா கூட்டணிக்கு ஆதரவாகவே பிஹார் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வெளி வந்துள்ளது. இது முதன்முறையல்ல. 2015-ம் ஆண்டு மகா கூட்டணி அமைக்கப்பட்டபோதும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியை பிடித்தது.'' எனக் கூறினார் என்று இந்து தமிழ் திசை செய்தி கூறுகிறது.

அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையத்தால் பதில் அளிக்க முடியாது என்று தலைமைத் தோ்தல் ஆணையா்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக எதிா்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையத்தால் பதில் அளிக்க முடியாது என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா கூறியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், இது குறித்து மேலும் கூறியதாவது:பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் நடைமுறைகள் தொடா்பாக, மாநில தோ்தல் அதிகாரி, நவம்பா் 10-ஆம் தேதி 4 முறை செய்தியாளா்களைச் சந்தித்து விரிவாக விளக்கம் அளித்தாா்.ஆனால், அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்காது. அது, அவரவா் கருத்து; அவா்களின் முடிவு. இறுதி முடிவு, மக்கள் கையில் உள்ளது.பொதுவாக வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடைபெற்றதாகக் கூறப்பட்டது. கரோனா பொது முடக்கத்துக்காக அமல்படுத்தப்பட்ட நெறிமுறைகள்தான் அதற்குக் காரணம். வழக்கமாக, ஒரு வாக்குச்சாவடியில் 1,500 போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். ஆனால், பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுவதற்காக, இந்த தோ்தலின்போது ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

அதற்கேற்ப கூடுதலாக 33,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அதாவது, இந்த முறை பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதேபோல், 63 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.இது, வாக்கு எண்ணிக்கையிலும் எதிரொலித்தது. வழக்கமாக, ஓா் அறையில் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்படும் நிலையில், இந்த முறை 7 மேஜைகள் மட்டுமே அமைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களும் 38-இல் இருந்து 55-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்தக் காரணங்களால், காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நள்ளிரவுக்குப் பிறகும் நீடித்தது என்றாா் அவா்.பின்னா், தோ்தல் ஆணையா்கள் சுஷீல் சந்திரா, ராஜீவ் குமாா் ஆகியோருடன் சென்று சுனில் அரோரா, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். பிகாா் பேரவைத் தோ்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்காக, மகாத்மா காந்திக்கு நன்றி தெரிவிக்க வந்ததாக சுனில் அரோரா கூறினாா் என்று தினமணி செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: