தமிழக பாடப் புத்தகங்களில் QR கோடுகள்: மாணவர்களுக்கு எவ்வளவு பலனளித்தன?

    • எழுதியவர், ரா. வித்யா வினோத் குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்காத நிலையில், புதிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள க்யூ.ஆர். கோட்கள் (Quick Response Code) மூலம் தமிழ்நாட்டில் பெருமளவிலான மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான பாடத் திட்டம் கடந்த 2018ல் மாற்றப்பட்டது. முதலில் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கும் 2019ல் பிற வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

இப்புதிய பாடத்திட்டம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட சில மாநில பாடத்திட்டங்கள், சி.பி.எஸ்.இ., கேம்பிரிட்ஜ் பாடத் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இதில் தொழில்நுட்ப யுக்திகளை புகுத்தும் வகையில் ஒவ்வொரு பாடத்திலும், தலைப்பு, முக்கிய கருத்துகள் மற்றும் பயிற்சி வினாக்கள் உள்ள பகுதிகளில், 'க்யூ.ஆர். கோடு'கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதனை என்.சி.இ.ஆர்.டி உருவாக்கிய தீக்ஷா செயலியில் உள்ள க்யூ.ஆர். கோடு டவுன்லோடர் ஸ்கேன் செய்தால், வீடியோ வடிவில் கூடுதல் தகவல்களை பெறலாம். உதாரணமாக, பயிற்சி வினாக்கள் பகுதியில் ஒவ்வொரு பாடத்திற்கும் நிறைய கேள்விகள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு, போட்டி தேர்வுகளுக்கு இம்முறையில் பயிற்சி பெறுவது பெரிதும் உதவக்கூடும்.

தீக்ஷா செயலியை தற்போது வரை இந்தியா முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் தமிழக பாடத்திட்டத்திற்கான பகுதியில் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து தமிழ், ஆங்கில வழியில் 365 புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள 9,961 க்யூ.ஆர். கோட்கள் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோ தகவல்களைப் பார்க்க முடியும். இந்த ஆண்டு இதுவரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாத சூழலில், தீக்ஷா செயலியில் இருந்து ஒரு கோடியே 45 லட்சம் முறை க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.

11 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமான முறை, பாடத்திட்ட வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. ஒரு கோடியே 11 லட்சம் முறை வீடியோக்கள் பதிவிறக்காமல் பார்வையிடப்பட்டுள்ளன. மொத்தம் 3 லட்சத்து 93 ஆயிரம் மணி நேரம் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாக தீக்ஷா செயலியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

''தீக்ஷா செயலியின் அறிமுகத்திற்கு பின் கடந்த 2019 ஜூலை மாதம், TNTP (Tamilnadu Teachers platform) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 2 லட்சத்து 31 ஆயிரம் ஆசிரியர்கள், உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு பிரத்தியேக பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் இரண்டு லட்சத்து 22 ஆயிரம் பேர் தற்போதுவரை இந்த இணைய தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் பயிற்சி, பாடத்திட்டம் சார்ந்த ஆசிரியர்களுக்கான தகவல்கள் மட்டுமே இதில் இடம்பெற்றிருக்கும்.

ஊரடங்கு சமயத்தில் மட்டும் 15,000 தகவல்கள்ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 8 ஆயிரத்து 370 தகவல்களை தீக்ஷா செயலியில் பதிவேற்றி உள்ளோம்" என்கிறார் தீக்ஷா செயலியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்.

தீக்ஷா செயலி மூலம் க்யூ.ஆர்.கோடுகளை ஸ்கேன் செய்து படிக்கும்போது மாணவர்களால் வேறு தேவையில்லாத இணைய செய்திகள் மீது கவனம் திரும்பாது. இணையதள வசதி இருக்கும்போது வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்துவிட்டு, பிறகு எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார் அவர்.

தீக்ஷா (Digital Infrastructure For Knowledge Sharing) செயலி என்பது தேசிய கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் (NCERT) கடந்த 2017ல் உருவாக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாநில பாடத் திட்டங்கள் தவிர, தேசிய மற்றும் சர்வதேச பாடத்திட்டங்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட, 12 மொழிகளில் பாடத்திட்ட தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: