நடிகை ஊர்வசி: 'ஸ்கிரிப்ட் கொடுக்காமல் நடிக்க வைத்த ஆர்ஜே பாலாஜி" - ஏன் தெரியுமா?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வெளியான புத்தம் புது காலை, சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய மூன்று திரைப்படங்களிலும் ஊர்வசியின் நடிப்பு வெகுவாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஊர்வசி, தான் நடிக்கவந்தது முதல் தற்போது வரையிலான சுவாரஸ்யமான நிகழ்வுகளை பிபிசி தமிழின் முரளிதரன் காசி விஸ்வநாதனுடன் பகிர்ந்து கொண்டார். அவருடனான உரையாடலில் இருந்து..

கே. சமீபத்தில் வெளியான புத்தம் புது காலை, சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய மூன்று படங்களிலும் உங்களுடைய நடிப்பு பேசப்படுகிறது. இந்த படங்களோடு உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்களேன்.

ப. எல்லாப் படங்களைப் போலத்தான் இந்தப் படத்திலும் நடித்திருந்தேன். ஆனால், கொரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்பட்டதுதான் பெரிய சிக்கலாகி விட்டது. இந்த மூன்று படங்களில் சூரரைப் போற்று பெரிய செலவில் எடுக்கப்பட்ட படம். திரையரங்குகள் திறக்க நாளாகும் என்று தெரிந்தவுடன், ஓடிடியில் வெளியானது. ஆனால், ஓடிடியில் வெளியாகி மூன்று - நான்கு நாட்களில் இவ்வளவு பெரிய வரவேற்புக் கிடைத்தது எனக்குப் புதிய அனுபவம். நான் நினைத்தே பார்க்கவில்லை. தியேட்டரில் வெளியாகியிருந்தால், முதலில் 'சூரரைப் போற்று' வெளியாகியிருக்கும். அடுத்ததாக 'மூக்குத்தி அம்மன்' வெளியாகியிருக்கும். ஒரு இடைவெளி இருந்திருக்கும். ஆனால், ஓடிடியில் ஒரே நேரத்தில் வெளியானது நல்ல வரவேற்பைத் தந்திருக்கிறது.

'புத்தம் புது காலை'யைப் பொறுத்துவரை அது ஓடிடிக்காகத்தான் எடுக்கப்பட்டது என்பது முன்பே தெரியும். அந்தப் படத்தின் குழுவே ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தது. ஊரடங்கு சமயத்தில் உருவாக்கப்பட்ட படம் என்பதால், அதைப் பற்றியே ஒரு படத்தை எடுத்துப் பார்ப்போமே என்றுதான் அந்தப் படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயராமுடன் நடித்தது புதிதாக இருந்தது.

கே. 'சூரரைப் போற்று', 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரு படங்களிலும் அம்மா பாத்திரம்தான் என்றாலும் வெவ்வேறு விதமாக இருந்த. பல காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஸ்க்ரிப்டில் இருந்ததைத் தவிர நீங்கள் ஏதாவது கூடுதலாகச் செய்தீர்களா..

ப. ஸ்க்ரிப்டில் இருந்ததைத் தவிர நம் இஷ்டத்திற்கு ஏதும் செய்ய முடியாது. 'சூரரைப் போற்று' படத்தின் ஸ்க்ரிப்ட் எனக்கு பல நாட்களுக்கு முன்பே வந்து விட்டது. அந்தப் படத்தில் அழும் காட்சியில், நான் பேசும் வசனத்தை லொக்கேஷனிலேயே பதிவு செய்வதுபோலத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஏனென்றால், இம்மாதிரி காட்சிகளில் ஒரு தடவை பேசுவதை போல மறுபடியும் பேச முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், ஸ்பாட்டிற்குச் சென்ற பிறகு, அங்கு நிறைய சத்தமாக இருந்தது. ஆகவே டப்பிங் செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டோம். அப்படித்தான் அந்தக் காட்சி எடுக்கப்பட்டது.

'மூக்குத்தி அம்மன்' படத்தில் அப்படியெல்லாம் திட்டமிடவில்லை. தொடர்ந்து ஜாலியான சீன்களை எடுத்துக்கொண்டிருந்தோம். பிரேக்கிற்கு முன்பாக இந்த சீனை எடுத்தோம். அதில் என் பாத்திரம் எல்லோருக்கும் தெரியும். அந்த அம்மா எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்பவரில்லை. சின்னச் சின்ன பொய் சொல்பவர். ஆனால், அந்த மாதிரி ஒரு அம்மாவிடம் திடீரென மகன், "ஓடிப்போன ஒருத்தனுக்காக ஏன் நான்கு குழந்தைகளை நீ பெத்த?" என்று கேட்பான். அந்தச் சூழலில் நீங்க என்ன பேசுவீங்க என்றார் பாலாஜி. யோசிப்பதற்குள் 'டேக்' என்று சொல்லிவிட்டார். யோசிப்பதற்குக்கூட நேரமில்லை.

கே. அந்தக் காட்சியின் வசனங்கள் நீங்களாகப் பேசியதா?

ப. ஆமாம். அவர் சூழலையும் பதிலையும் விளக்கி விட்டார். நீங்கள் பேசுங்கள். சரியாக வரவில்லையென்றால் வசனத்தை எழுதி மீண்டும் எடுக்கலாம் என்றார். ஆனால், அந்தக் காட்சி நன்றாக வந்தது.

கே. சுதா கொங்கரா, ஆர்.ஜே. பாலாஜி என இளம் இயக்குர்களின் படங்களில் நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது?

ப. சுதாவை இளம் இயக்குநர் எனச் சொல்ல முடியாது. நீண்ட காலமாகத் துறையில் இருக்கிறார். கடினமான உழைப்பாளி. நீண்ட காலமாக எனக்கு நண்பர். த்ரோகி என்பது அவரது முதல் படம். அதில் எனக்கு ரோல் ஏதும் இல்லை என்பதால், ஒரு பாத்திரத்திற்கு டப்பிங் செய்திருந்தேன். சூரரைப் போற்று படத்தைப் பொறுத்தவரை, மிகப் பெரிய உழைப்பிற்குப் பிறகு அந்தப் படத்தை உருவாக்கினார். ஒரு ஆவணப் படம் போல ஆகிவிடக்கூடாது என்பது முதல் கவனமாக இருந்தது. தவிர, அடிப்படை வசதிகளே இல்லாத நாட்டில், குறைந்த கட்டணத்தில் விமானம் வேண்டும் என்று சொல்லும் ஒருவரது கதை. அடிப்படை வசதி முக்கியமா, விமானம் முக்கியமா என்ற கேள்வி வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் சுதா. இந்த விஷயங்கள் எல்லாம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டன. இந்தப் படத்தில் ஒரு எழுத்தாளர், இயக்குநர் என்ற வகையில் அவர் செய்தது மிகப் பெரிய சாதனை. குறிப்பாக, பெண் பாத்திரங்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தார்.

பாலாஜியைப் பொறுத்தவரை, அவர் புதிய இயக்குநர்தான். 'எல்.கே.ஜி.' படம் ஒரு அங்கதத் திரைப்படம். 'மூக்குத்தி அம்மனைப்' பொறுத்தவரை அது ஒரு ஆன்மீக அங்கதப் படம் என்று சொல்லலாம். கொஞ்சம் தவறினாலும் பெரிய பிரச்னையாகிவிடக்கூடிய திரைக்கதை. பல வசனங்கள் எடுக்கப்பட்டுவிட்டு, பிறகு நீக்கப்பட்டிருக்கின்றன. யாருக்காவது மன வருத்தத்தைக் கொடுத்தால், அதில் பொழுதுபோக்கு இருக்காது; வெறும் சர்ச்சை மட்டும்தான் இருக்கும். எல்லோரும் பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் இது. ஆகவே அதற்கான முயற்சி என்பது பெரிய விஷயம்.

பாலாஜிக்கு ஸ்க்ரிப்ட் முழுவதும் அத்துப்படி. மனதிலிருந்து வசனங்களை எடுத்து, அப்படியே சொல்வார். இது பாக்யராஜின் ஸ்டைல். அவருக்கும் ஸ்க்ரிப்ட் மனதிலேயே இருக்கும்.

கே. 1983லிருந்து இப்போதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறீர்கள். திரும்பிப் பார்க்கும்போது திருப்தியடைகிறீர்களா?

ப. நான் இப்படி ஒரு நடிகையாக வருவேன் என்று எதிர்பார்த்ததில்லை. நான் இதற்கு சரியான ஆள் இல்லை என்றுதான் நிறையப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். திரும்பப் படிக்கப் போய்விடலாம் என்று நினைத்தேன். கலை உலகில் எதையும் திட்டமிடவே முடியாது. கிடைத்ததெல்லாம் போனஸ்தான். யாரோ படம் எடுக்கிறார்கள். யாரோ இயக்குகிறார்கள். அதில் நமக்கு நல்ல பாத்திரங்களைக் கொடுக்கிறார்கள். அதை பலர் பாராட்டுகிறார்கள். ஆகவே இதில் எனக்கு இப்போதும், அப்போதும் மகிழ்ச்சிதான்.

கே. சில வருடங்களில் பல மொழிகளில் 15 படங்கள் வரை நடித்திருக்கிறீர்களே.. இது எப்படி சாத்தியமானது?

ப. 'முந்தானை முடிச்சு' படத்தில் நடிக்கும்போது நான் 9வது நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்தால் அடுத்த படத்தின் ஷூட்டிங் இருக்கும். பள்ளிக்கூடத்திற்குப் போகிறதுபோல ஒரு விஷயமாகத்தான் அப்போது இருந்தது. தூக்கம் போதாமல் இருக்கும். பெரும்பாலும் பயணங்களின்போது தூங்குவேன். அந்த காலகட்டத்தில் முழு ஸ்க்ரிப்டையும் நான் கேட்டதில்லை. வீட்டில்தான் கேட்பார்கள். ஒரு 'ஒன் லைன்' போல எனக்கு என் அம்மா கதையைச் சொல்வார். ஸ்பாட்டிற்குச் சென்றதும் இயக்குநர் விளக்குவார். அப்படித்தான் சென்று கொண்டிருந்தது.

ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் நானே கதையைக் கேட்டு, தேர்வுசெய்ய வேண்டிய சூழல் வந்தது. அந்தக் காலகட்டத்தில் மலையாளத்தில் 15 நாள் அல்லது 22 நாட்கள்தான் ஒரு படத்தின் ஷூட்டிங்கே நடக்கும். அதில் எனக்கு பத்து - 12 நாட்கள் ஷூட்டிங் இருக்கும். பிறகு அடுத்த படத்தில் நடிக்கச் சென்றுவிடுவேன். அதனால்தான், அத்தனை படங்கள் நடிக்க முடிந்தது. இப்போது அப்படி நடிப்பது கடினம்.

கே. நீங்கள் எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் சரி, ஒரு சிறிய நகைச்சுவை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அது இயல்பாகவே அமைகிறதா அல்லது உணர்ந்து செய்கிறீர்களா?

ப. நகைச்சுவை என்பதை consciousஆக செய்ய முடியாது. அது சரியாக வராது. ஆனால், நான் காமெடி செய்தால் பார்ப்பவர்களுக்குப் பிடிக்கும் என்பது புரிந்திருக்கிறது. மலையாளத்தில் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, கதாநாயகிகள் குறும்புக்காரர்களாக, சற்று பொய்பேசுபவர்களாக, நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருந்தால் பிடிக்கும் என்பது தெரிந்தது. சத்யன் அந்திக்காடு என்ற இயக்குநர்தான் அதை ஊக்குவித்தார். எனக்கு அந்த பாணி நன்றாக இருக்கிறது என்றார். நகைச்சுவை செய்யும் நாயகிகள் மிகக் குறைவு. எனக்கும் அப்படி நடிப்பது ரொம்பவும் பிடிக்கும்.

கே. தமிழில் இந்த பாணியை எப்போது துவங்கினீர்கள்?

ப. தமிழில் அதற்கு ஒரு துவக்கத்தைச் சொல்ல வேண்டுமென்றால், 'மைக்கல் மதன காமராஜன்' படத்தைத்தான் சொல்ல வேண்டும். அதில் நாயகன், நாயகி இருவருமே அப்பாவித்தனமாக இருப்பார்கள். பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும். அதை எல்லோரும் ஏற்க ஆரம்பித்தவுடன் அடுத்தடுத்து நடித்த ரெட்டை ரோஜா, வனஜா கிரிஜா படங்களில் அதுபோல நடிக்க ஆரம்பித்தேன்.

கே. அந்த ஒரு நிமிடம், மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், உத்தமவில்லன், மகளிர் மட்டும் என கமல்ஹாசனோடு பல படங்களில் நடித்திருக்கிறீர்கள். நீங்கள் இருவருமே திரையில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது.

ப. கமல் ஒரு மிகச் சிறந்த நடிகர். அவர் வரும் காட்சிகளில் அவரிடம் எல்லாவற்றையும் விட்டுவிடலாம். அவர் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தைப் போல. எல்லோரையும் ஒரே மாதிரி கவனித்து, நடிக்க வைப்பார். நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

கே. நீங்கள் திரையில் தோன்றும்போது, உங்களுடைய நடிப்பு, பேச்சு எல்லாம் உடன் நடிக்கும் நடிகர்களை சற்று மங்கச் செய்துவிடுகிறது என யாராவது சொல்லியிருக்கிறார்களா.. நடிக்கத் தயங்கியிருக்கிறார்களா?

ப. இது பற்றிப் சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். "அய்யோ ஊர்வசி நடிக்கிறாங்களா, ரொம்ப டாமினேட் செய்துவிடுவாரே" என்று ஆண்களும் சொல்லியிருக்கிறார்கள். பெண்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வேண்டுமென்றே அதைச் செய்வதில்லை. அதற்கு இயக்குநர் அனுமதிக்க மாட்டார்.

கே. தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, நாயகிகளின் பெயரை வைத்து ஒரு பாடல் வருவதென்பது ஒரு உச்சமாக பார்க்கப்படுகிறது. குஷ்பு, நயன்தாரா என சில நாயகிகளுக்கே அது நடந்திருக்கிறது. 'டேக் இட் ஈஸி ஊர்வசி' என உங்கள் பெயரிலும் ஒரு பாடல் இருக்கிறது. பாடல் வெளிவந்த தருணத்தில் எப்படி உணர்ந்தீர்கள்..

ப. அந்த சமயத்தில் ஒரு விழாவில் வாலியைப் பார்த்தேன். உன் பெயரில் ஒரு பாட்டு வருகிறது என்றார். அதற்கு முன்பு 'மகளிர் மட்டும்' திரைப்படத்தில் 'கரவை மாடு மூன்று' என ஒரு பாட்டு வந்தபோது, அந்த வரியை வாயசைத்து பாட மாட்டேன் என்று சொன்னேன். உடனே வாலிக்கு போன் செய்து கொடுத்தார்கள். அவர், "உனக்கு என்ன பிரச்னை?" என்று கேட்டார். 'கரவை மாடு' என நாங்களே எங்களை எப்படி சொல்லிக்கொண்டு பாடுவது என்று கேட்டேன். அப்படி அர்த்தம் கொள்ள வேண்டாம். பெண்கள் வீட்டிற்கு வெளியிலும் வீட்டிலும் கஷ்டப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட வார்த்தை அது. வில்லனை பழிவாங்குவதற்காக அந்த வார்த்தையைச் சொல்லிப் பாடுகிறீர்கள் என்று கூறி சம்மதிக்க வைத்தார்.

இப்போது என் பெயரில் 'டேக் இட் ஈஸி ஊர்வசி' என பாடல் வருகிறது என்று சொன்னவுடன் சற்று பயமாகத்தான் இருந்தது. எந்தப் படம் என்று தெரியவில்லை என்பதால், பார்ப்பவர்களிடமெல்லாம் எந்தப் படத்தில் அப்படி ஒரு பாடல் வரப்போகிறது என்று கேட்டுக்கொண்டிருந்தேன். பாடல் வந்த பிறகு, எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. உடனே வாலிக்கு போன் செய்து, மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். பிறகு அதே பெயரில் ஒரு டிவி நிகழ்ச்சியையும் நடத்தினேன்.

கே. படங்களை இயக்குவதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா..

ப. ஏன் இப்படி? நல்லாதானே போய்க்கிட்டிருக்கு... அதெல்லாம் பெரிய வேலை. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும். பல மொழிகளைப் பேசக்கூடியவர்களை வேலை வாங்க வேண்டும். பலருக்கு பதில் சொல்லவேண்டும். படம் ரிலீஸ் ஆன பிறகும் வேலை இருக்கும். அந்த அளவுக்கு எனக்கு மெச்சூரிட்டி கிடையாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: