''நிவர் புயல் நஷ்டத்தை தடுக்க பயிர் காப்பீடு செய்யுங்கள்'' - விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுரை

தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் தீவிரமாக மாறினால், டெல்டா மாவட்ட விவசயிகள் பாதிக்கப்படவாய்ப்புள்ளது என்பதால் உடனடியாக விவசயிகள், பயிர்காப்பீடு செய்யுங்கள் என்று தமிழக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் கஜா புயலை போல தாக்கத்தை ஏற்படுத்தினால், முந்தைய காலங்களை போல இழப்புகளை சந்திக்காமல், பொருளாதார இழப்பை தடுக்க விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்யவேண்டும் என விவசாயம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட வாரியான விவசாய துறை அலுவலகத்தில் பயிர்காப்பீடு பற்றிய விவரங்கள் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மண்ணின் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால், புயலின் போது, மரம் எளிதாக சாயும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெல், வாழை, தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக கவனத்துடன் இருக்குமாறும், காப்பீடு செய்திருந்தால், நஷ்டத்தை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவாக உள்ள நிவர் புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்என்றும் தெரிவித்துள்ளது. அதோடு, நிவர் புயல், 100 முதல் 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்பதால், கடல் அலைகள் இயல்பைவிட இரண்டு மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும்என்று கருதப்படும் கடலூர் மாவட்டத்தில் புயல் வீசும் நேரத்தில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படுவதர்க்கான வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பாதிப்பு ஏற்படவுள்ள பகுதிகளில் மாற்று மின்கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நவம்பர் 24, 25ம் தேதிகளில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கஜா புயல் போன்ற ஒரு தாக்கத்தை நிவர் புயல் ஏற்படுத்தாது என்ற தகவல் கிடைத்துள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்திருந்தார்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்று அதிகாலை, 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்றார்.

தற்போது நிவர் புயல் 740 கி.மீ தொலைவில் உள்ளது என்றும், கரையைக் கடக்கும் போது 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக மிக கனமழை, அதி கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், ஆறு தேசிய பேரிடர் மீட்பு படை அரக்கோணத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்று உள்ளனர் என்றார்.

தாழ்வான பகுதி, பாதுகாப்பற்ற பகுதி, பழைய கட்டிடங்களில் வசிப்போர் உடனடியாக அரசு முகாம்களுக்கு வர வேண்டுகோள் விடுத்த அமைச்சர், கஜா புயலை போல நிவர் புயலின் தாக்கம் இருக்காது என்ற கணிப்பு வெளியாகியுள்ளது என்றார். இருந்த போதும், பொது மக்கள், இடி, மின்னல் சமயத்தில் வெளியே வர வேண்டாம் என்றும், நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், நீர் செல்லும் பாதைகள், கடற்கரை பகுதிகளுக்கு குழந்தைகைகளை அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

கனமழை, புயல், காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மீனவர்களுக்கான அறிவுறுத்தலும் தொடர்ந்து மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

ஏரிகளை கண்காணிக்கவும், கால்வாய்கள் அடைப்பில்லை என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மக்கள் அத்தியாவசிய பொருட்களான வலுவன கயிறு, தீப்பெட்டி, மண்ணெண்ணெய்,மெழுகு வர்த்தி, பேட்டரி டார்ச், உலர் பழ வகைகள், பிரட் போன்றவற்றை தற்போதே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்றார்.

நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிவர் புயல்

வங்காள விரிகுடாவில், தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் உருவாகி இருக்கும், குறைந்த காற்றழுத்தம் (Low Pressure), அடுத்த 12 மணி நேரத்துக்குள் அழுத்தமாகவும் (depression), அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (Cyclonic Storm) உருவாகும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை சொல்லி இருக்கிறது. இது 18 கிலோமீட்டார் வேகத்தில், கரையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் சொல்கிறது இந்திய வானிலை ஆய்வுத் துறை.

திங்கட்கிழமையே, தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கிவிடும். மெல்ல மழை தீவிரமடையும். செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை, தமிழகத்தின் சில கடற்கரை மாவட்டங்களில், கன மழை முதல், மிக கன மழை பெய்யலாம். மீனவர்கள் நவம்பர் 25, 2020 வரை மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு துறை சென்னை பிரிவின் துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாடு வெதர்மேன்' நிவர் புயல் பற்றி கணிப்பது என்ன?

வானிலை அறிவிப்பு சுயாதீனமாகக் கணித்துவரும் `தமிழ்நாடு வெதர்மேன்` பிரதீப் ஜான், தன் வலைத்தளத்தில், நிவர் புயல் இரண்டு விதமாக கரையைக் கடக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்.

விதம் 1:

வேதாரண்யம் மற்றும் காரைக்காலுக்கு மத்தியில், 24 - 25 நவம்பர் தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கலாம்.

காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மிக கன மழை பெய்யலாம்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்.

விதம் 2:

காரைக்கால் மற்றும் சென்னைக்கு மத்தியில், 24 - 25 நவம்பர் 2020 தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கலாம்.

மணிக்கு 120 - 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கண மழை பெய்யலாம்.

கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு கண மழை பெய்யும் எனச் சொல்லி இருக்கிறார் பிரதீப் ஜான்.

மேலும் நவம்பர் 24ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுரியமாகச் செயல்பட வேண்டியது அவசியம். அதனால் குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :