'எஸ்.பி.பி-க்கு என் மூலம் கொரோனா தொற்று பரவவில்லை' - மாளவிகா மறுப்பு

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு, பாடகி மாளவிகா மூலமாகத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது எனப் பலரும் குற்றம் சாட்டிய நிலையில், மாளவிகா அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று பிரபல தெலுங்கு தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியொன்றில் எஸ்.பி.பி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இதற்கு காரணம் பாடகி மாளவிகாதான் என்று பலர் குற்றம் சாட்டினர். மாளவிகா கொரோனா தொற்று உள்ளதை மறைத்துவிட்டதாகவும், அவர் மூலமாகவே அனைவருக்கும் தொற்று பரவியதாகவும் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பாடகி மாளவிகா அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.

அந்த பதிவில், "எஸ்.பி.பிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு பிறகு ஆகஸ்ட் 8ஆம் தேதிதான் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்த பின்னர் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை," என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதுபோன்று வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளித்திருப்பதாகவும் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார்.

"இந்த நிகழ்ச்சியில் என்னுடன் பாடகர்கள் அனுதீப், ஹேமசந்திரா, சத்யாயாமினி, தாமினி,காருண்யா உட்பட பாடகர்களும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டு இருந்தால் என்னுடன் இருந்த மூன்று பெண் பாடகர்களுக்கும், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கும் தொற்று பரவியிருக்க வேண்டுமே," என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

"கடந்த ஐந்து மாதங்களாக எங்கள் வீட்டில் வேலை பணியாட்களை கூட நாங்கள் அனுமதிக்கவில்லை. எனக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. அதனால் நாங்கள் முழு பாதுகாப்போடு தான் இருந்தோம். இந்த டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மட்டுமே நான் என்னுடைய வீட்டிலிருந்து வெளியேறினேன்."

"என்னுடைய டிரைவருடன் காரில் செல்லும்போது கூட உரிய பாதுகாப்புடன் பயணித்தேன். எஸ்.பி.பி அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த காரணத்தினால் நானும் பரிசோதனை செய்து கொண்டேன். துர்திஷ்டவசமாக எனக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. என் அம்மா, அப்பாவுக்கும், என்னுடைய இரண்டு வயது குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. என் கணவருக்கும், எங்கள் கார் ஓட்டுநருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. என் தந்தையை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறோம்," என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆரம்பத்தில் சீராக இருந்த அவருடைய உடல்நிலை நாட்கள் செல்லச் செல்ல மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.

அதற்குப் பிறகும் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவியும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: