You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நித்தியானந்தா கைலாசா நாணயங்களை வெளியிட்டார்; விநாயகர் சதுர்த்தியன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா தொடக்கம்
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தாம் ஏற்கனவே கூறியபடி தான் உருவாக்கிய தனிநாடு என்று அவர் கூறும் கைலாசாவின் நாணயங்களை இன்று வெளியிட்டுள்ளார்.
கைலாசா நாட்டின் நாணயங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று தாம் வெளியிட்ட காணொளி ஒன்றின் மூலம் அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
உள்நாட்டு புழக்கத்துக்கு என்று ஒரு தனி நாணயமும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு என்று வேறொரு தனி நாணயமும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
'இந்து முதலீட்டு மற்றும் ரிசர்வ் வங்கி' என்று பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் வங்கியின் செயல்பாடுகளை நிர்வகிக்க வேறு ஒரு நாட்டுடன் தனது நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் இன்று வெளியிட்டுள்ள காணொளியில் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 360 கட்டுரைகள் மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றை கைலாசா துறவிகள் மடத்தின் உறுப்பினர்கள் இதற்காக ஆராய்ச்சி செய்தனர் என்றும் நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வல்லுறவு கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்தியாவிலிருந்து தலைமறைவான சாமியார் நித்தியானந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தலைமறைவாக உள்ளார் என்றும், அவர் மீதான வழக்கு விசாரணைகளுக்கு 50க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்துக்கு வராமல் இருந்துள்ளார் என்றும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன
ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா
"என்னிடம் ஒரு மிகப்பெரிய செய்தி உள்ளது. கணபதியின் அருளுடன் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா மற்றும் அதன் நாணயம் ஆகியவை குறித்த முழு தகவல்களையும் வெளியிடப் போகிறோம். அனைத்தும் ஏற்கனவே தயாராக இருந்தது. இந்த நல்ல நாளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்," என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
கைலாசாவுக்கான 300 பக்க பொருளாதாரக் கொள்கையும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கைலாசாவின் ரிசர்வ் வங்கி வாட்டிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு கட்டமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்துக்களுக்கான நாடு
இந்துக்களுக்கு என்று 'கைலாசா' எனும் தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை சென்ற ஆண்டின் இறுதியில் வெளியிட்டார் நித்தியானந்தா.
https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம் கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது என்றும் இந்து ஆதி சைவர் சிறுபான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்க வேண்டும் எனும் உறுதியான நோக்குடன் மட்டுமல்லாமல் அதை ஒட்டுமொத்த உணவுடனும் பகிர வேண்டும் எனும் நோக்குடனேயே கைலாசம் இந்த தேசம் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவின் 'கைலாசா' எங்கு உள்ளது?
உலகிலேயே மிகவும் தூய்மையான இந்து தேசம் என்று நித்தியானந்தா கூறும் கைலாசா தென்னமெரிக்க நாடான ஈக்குவெடாரின் கடல் எல்லையில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ளது.
கைலாச குடியரசு (Republic of Kailaasa ) என்று அதிகாரபூர்வமான பெயரைக் கொண்டுள்ள இந்த நாட்டுக்கு என்று தனியான கொடி, முத்திரை, கடவுச்சீட்டு ஆகியவை உள்ளன.
எனினும் ஐ.நா உள்ளிட்ட அமைப்புகளோ, உலக நாடுகளோ இந்தத் தீவை தனி நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை.
யார் இந்த நித்யானந்தா?
தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்தவர் நித்யானந்தா. பெங்களூர் அடுத்த பிடதியில் உள்ள ஆசிரமும் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பெற்றவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையுடன் படுக்கையறையில் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ பதிவுகள் வெளியாகி, அது தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட நிலையில் இவர் சர்ச்சைக்குரிய பிம்பமாக உருவெடுத்தார்.
பிறந்த ஊரான திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் பல இடங்களில் இவருக்கு ஆசிரமம் இருக்கிறது. இவருக்கு எதிராக பாலியல் புகார்களும் விசாரிக்கப்படுகின்றன.
பாலியல் வல்லுறவு, ஆபாசம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தவிர, தனது கருத்துகளால் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார் நித்யானந்தா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: