You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்'': ஆயுஷ் செயலர் கூறியதற்கு கிளம்பும் எதிர்ப்பு
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான 'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழிப் பயிற்சி முகாமில், இந்தியில் மட்டும் பயிற்சியை நடத்தியது குறித்து கேள்விகேட்டபோது தாங்கள் அவமதிக்கப்பட்டதாக தமிழக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வடஇந்தியாவைச் சேர்ந்த பலருக்கும் ஆங்கிலம் தெரியாததால் பயிற்சிக் கூட்டத்தை ஆயுஷ் செயலர் இந்தியில் நடத்தினார் என்கின்றனர் அவர்கள்.
ஆயுஷ் அமைச்சகம் ஆகஸ்டு 18ஆம் தேதி நடத்திய பயிற்சி முகாமில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை யோகா மருத்துவத்தை ஐந்தாண்டு படிப்பு படித்த மருத்துவர்கள் பங்குபெற்றனர்.
அதேநேரம், வடமாநிலத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு, டிப்ளொமா படிப்பு மட்டுமே முடித்த சிலர் பங்குபெற்றதாகவும், அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், இந்தியில் வகுப்புகளை நடத்தியதாக தமிழக மருத்துவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.
ஆயுஷ் அமைச்சகத்தின் பயிற்சியில் பங்குபெற்ற தமிழக மருத்துவர் சௌந்தர பாண்டியன் பயிற்சி குறித்து ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியபோது, அவரை ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் அச்சுறுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
''பயிற்சி முகாமை முழுக்கமுழுக்க இந்தியில் மட்டுமே நடத்தினார்கள். குறிப்பாக யோகா மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. இயற்கை மருத்துவம் குறித்து பேசவேண்டும் என நான் ஆங்கிலத்தில் கேட்டபோது, வைத்யா ராஜேஷ் காட்டமாகப் பேசினார். அவருக்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது என்றார். ஆனால் கேள்வி கேட்ட என்னை பற்றிய விவரங்களை சேகரித்து, தமிழக அரசாங்கத்திடம் புகார் கொடுக்கவுள்ளதாக மிரட்டினார். ஆன்லைன் வகுப்பில் கேள்வி கேட்டதற்கு விடையளிக்காமல் மிரட்டுவது சரியாகுமா,'' என்கிறார் மருத்துவர் சௌந்தர பாண்டியன்.
பயிற்சியில் கலந்துகொண்ட மற்றொரு மருத்துவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, அடிப்படை ஆங்கிலம் தெரியாத வடமாநில சுகாதார பணியாளர்கள் வகுப்பில் இருந்ததால்தான் இந்தியில் மட்டும் பயிற்சி நடைபெற்றது என்றார்.
''பயிற்சி தொடங்கியதும், இந்தியில் சில நேரம் பேசினார்கள். அது தொடக்கவுரையாக இருக்கும். பின்னர் ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்தியில் மட்டுமே பேசியதால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேள்வி கேட்டோம். ஆனால் எங்கள் கேள்விகளை புறக்கணித்து இந்தியில் மட்டுமே வகுப்பு நடந்தது. மூன்றாவது நாளும் தொடர்ந்து நாங்கள் கேள்வி எழுப்பியதால், இந்தி புரியாதவர்கள் வெளியேறுங்கள் என ஆங்கிலத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் அச்சுறுத்தும் வகையில் பேசினார்,'' என்கிறார் அந்த மருத்துவர்.
''ஆயுஷ் அமைச்சகத்தின் பயிற்சியின் முடிவில் இந்தியா முழுவதும் கிராம அளவில் யோகா தெரபிஸ்ட் பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பவுள்ளனர். அந்த பணியிடங்களுக்கு எங்களை போன்ற தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள்அல்லாமல், 12ஆம் வகுப்பு அல்லது டிப்ளொமா படித்தவர்களை தேர்வு செய்வது சரியா? இந்த பயிற்சியில், ஒரு மணி நேரம் சர்க்கரை வியாதி குறித்த கூட்டம் நடைபெற்றது. அதில் டைபெட்டிஸ் மேலீட்டஸ்-ஐ 'DM' என பல முறை உச்சரித்தார்கள். பயிற்சியின் முடிவில் வட மாநில பணியாளர் ஒருவர்' DM' என்றால் என்ன என கேள்வி கேட்டார்,'' என்கிறார் அந்த மருத்துவர்.
இந்தியா முழுவதும் சுமார் 400 மருத்துவர்கள் கலந்து கொண்ட ஒரு தேசிய அளவிலான முகாமில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என கூறுவது சரியா என அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்தி தெரியாதவர்கள் இன்னும் எத்தனை நாள் அவமானப்படவேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யெச்சோ நாயக்கிற்கு அவர் அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கனிமொழி, இனி இதுபோன்று நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழச்சிகளில் ஆங்கிலத்திலும் நடைபெற வழிசெய்ய வேண்டும் என்றும், இந்தி வரும் இடங்களில், அம்மொழி புரியாதவர்களுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், "ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்க வேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித் திருநாடு" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்பில் மருத்துவரை மிரட்டியது மற்றும் இந்தி மொழியில் மட்டும் பேசியது குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள ஆயுஷ் செயலர் வைத்யா ராஜேஷ் தற்போது வைரலாகியுள்ள தனது காணொளி உண்மையான காணொளி இல்லை என்றும் அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பயிற்சியில் வெறும் 350 நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தபோது, 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள் என்றும் அவரது இணைப்பை யாரோ சிதைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: