You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரரைப் போற்று படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் - சூர்யா
சுதா கொங்குரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் இணையதளத்தில் வெளியாகும் என்று அந்த படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான சூர்யா தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து, ஜோதிகா நடித்திருத்த 'பொன்மகள் வந்தாள்' படமும் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் மே மாத இறுதியில் வெளியானது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதால் சமீப காலமாக பல்வேறு மொழிகளின் படங்களும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களில் வெளியாகி வருகின்றன.
"என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உள்பட பலர் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக முடிவு எடுப்பதே சரியானதாக இருக்கும்," என சூர்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"என் திரைப்படங்களை திரையரங்கில் காண விரும்பும் பொது மக்களும் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."
"உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படமாக சூரரைப் போற்று நிச்சயம் அமையும்; மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம் பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள் கடினமாக உழைத்து ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியும் என நம்புகிறேன்."
அதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு என 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: