You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்த 15 சுவாரஸ்ய தகவல்கள்: “பாலு...சீக்கிரம் எழுந்து வா”
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வெளியானதை அடுத்து தழுதழுத்த குரலில் இளையராஜா உருக்கமான வீடியோ வெளியிட்டார்.
இது அனைவரையும் அசைத்துப் பார்த்தது. 'பலர் மீண்டும் வாருங்கள் பாலு' என நெஞ்சுருகி அந்த காணொளியைப் பகிர்ந்தனர். அதில் வட இந்தியர்களும் அடங்குவர்.
இந்த நிலையில் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை.
எல்லைகள் கடந்து தன் சிறகை விரித்த இந்த எஸ்.பி.பி யார்?
அவர் குறித்த சுவாரஸ்யமான 15 தகவல்கள்.
- எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம்.
- இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது.
- இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
- 1969ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்திற்கு 'இளையகன்னி' என்கிற பாடலைப் பாடி தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
- 'இளையகன்னி' படம் வெளிவருவதற்கு முன்னரே 'அடிமைப்பெண்' படத்தில் 'ஆயிரம் நிலவே வா' என்கிற பாடல் மூலம் இவரது குரல் தமிழ் உலகிற்கு கேட்க ஆரம்பித்துவிட்டது.
- மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தங்கத் தாரகை மகளே' என்கிற பாடலுக்காக அவர் தேசிய விருதைப் பெற்றார்.
- இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இவர் நான்கு மொழிகளில் பாடிய வெவ்வேறு பாடல்களுக்கு ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கிறார்.
- இவர் பாடகர் மட்டுமல்ல சில படங்களுக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கிறார். மேலும், நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
- உலகிலேயே அதிகமான திரைப்படப் பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனையையும் செய்துள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
- அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் 19 பாடல்களைப் பதிவு செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தவர்.
- கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். இவருடைய ஆர்வத்தைப் பார்த்து சச்சின் டெண்டுல்கர் அவருடைய கையெழுத்திட்ட பேட்டை பரிசாக எஸ்.பி.பிக்கு அளித்திருக்கிறார்.
- ரஜினிகாந்த், இளையராஜா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பெற்றுள்ள 'இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி ஆஃப் தி இயர்' விருதை 2016ஆம் ஆண்டு நடந்த 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இவர் பெற்றார்.
- இந்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பதமபூஷன் விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு ஓவியங்கள் வரைவதில் மிகுந்த பிரியம் உண்டு. அதே போன்று நன்றாக புல்லாங்குழல் வாசிப்பார்.
- பாடகராக மட்டுமல்லாது இசையமைப்பாளர், பின்னணிக் குரல் கலைஞர், குணச்சித்திர நடிகர் ஆகிய பிரிவுகளிலும் ஆந்திர அரசு வழங்கும் நந்தி திரைப்பட விருதுகளை எஸ்.பி.பி பெற்றுள்ளார்.
- வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
பிற செய்திகள்:
- இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 'ரகசிய வானொலி நிலையம்'
- 'விரைவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து, காஷ்மீரில் தேர்தல்' - நரேந்திர மோதியின் சுதந்திர தின உரையின் முக்கிய தகவல்கள்
- பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?
- "மதுக்கடைக்கு அனுமதி வழங்கிய அரசு, சதுர்த்தி விழாவுக்கு தடைவிதிப்பது ஏன்?" - எச்.ராஜா கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: