You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொன்மகள் வந்தாள்: ஓ.டி.டி. தளத்தில் திரைப்படங்கள் வெளியிட்டால் லாபமா நஷ்டமா?
ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கின்ற விவகாரம் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கிடையே மிகப்பெரிய பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கிறது.
ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான '2டி நிறுவனம்' தயாரித்துள்ளது. 'பொன்மகள் வந்தாள்' மட்டுமின்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'பென்குயின்' திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ஜூன் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஓ.டி.டி. தளத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு திரைப்பட உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், சிறிய பட்ஜெட் திரைப்படங்களை ஓ.டி.டி. தளத்தில் விற்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும், நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படமும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது என்கிற தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில், இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குலாபோ சிதாபோ'. இந்தத் திரைப்படம் வருகிற ஜூன் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகிறது எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்த அறிவிப்பிற்கு பிரபல ஐநாக்ஸ் திரையரங்க குழுமம் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கங்களுக்கும் எப்பொழுதும் பரஸ்பர புரிதல் இருந்து வந்துள்ளது. இதில் இருவருடைய நடவடிக்கைதான் இன்னொருவரின் வருமானத்திற்கு வழிவகுக்கும். பல்லாண்டு காலமாக நீடித்து வரும் இந்த ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் உதவியாக இருந்து வந்துள்ளது. ஒருவரோடு ஒருவர் பக்கபலமாக இருந்து திரைத்துறையை மீட்டெடுக்க வேண்டிய இந்நேரத்தில் சில பங்குதாரர்கள் இந்த உறவுமுறையில் ஆர்வம் இல்லாமல் செயல்படுவது வருத்தமாக உள்ளது. ஐநாக்ஸ் நிறுவனம் சார்பில் நேரடியாக ஓ.டி.டியில் படங்கள் வெளியாவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்."
"அனைத்து தயாரிப்பாளர்களையும் பழைய நடைமுறையையே தொடருமாறு வலியுறுத்துகிறோம். அதுவே சங்கிலி தொடரில் இருக்கும் பயனாளர்கள் எல்லோருக்கும் நல்லது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இயக்குநர் அரவிந்த் இயக்கிய பல்வேறு படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியிருந்தாலும் முன்னணி கலைஞர்களின் படங்கள் வெளியாகததால் அது மிகப்பெரிய அளவில் சினிமாத்துறையில் பேசப்படவில்லை. ஆனால், 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் சூர்யாவின் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து மூத்த நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். எட்டு கோடி ரூபாயில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்ற ஒரு திரைப்படம் இது. மார்ச் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்திருந்த இந்தத் திரைப்படம் ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை" என்று அவர் கூறினார்.
"திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பதே தெரியவில்லை. ஆகஸ்டு, செப்டம்பர் வரை கூட ஆகலாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இந்நிலையில் மார்ச் மாதமே வெளியாக வேண்டிய திரைப்படம் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்துதான் வெளியாக வேண்டிய சூழல் தயாரிப்பாளர்களிடம் இருக்கின்றது"
"இத்தனை நாட்கள் காத்திருந்து இந்தப் படம் வெளியாகி எந்த அளவிற்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்குமோ அந்த லாபம் சாட்டிலைட் மூலமாகவோ, ஓ.டி.டி. மூலமாகவோ கிடைக்கிறது எனில் அதை தயாரிப்பாளர் தேர்ந்தெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஓ.டி.டி. தளத்தை பயன்படுத்தி அவர்கள் முதலீடு செய்த எட்டு கோடி ரூபாயை பெற்றுவிட வேண்டும் என அதில் விற்க முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த முயற்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
"திரையரங்குகள் திறக்கப்படும் போது, தினசரி ஒரு படம் வெளியாக வாய்ப்புள்ளது. அப்படி வெளியாகும்போது எல்லாப் படங்களையும் மக்கள் நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது. திரையரங்க உரிமையாளர்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய இழப்பு கிடையாது. ஒரு படத்தின் வெற்றி / தோல்வி அவர்களை எந்த வகையிலும் பாதிக்காது. திரையரங்கில் ஒரு படம் வெளியிடப்பட்டு அது வசூல் ரீதியாக மிகக் குறைந்த அளவே லாபம் கொடுக்கிறது எனில் அது தயாரிப்பாளரை வெகுவாக பாதிக்கும். ஓ.டி.டி. நிறுவனங்கள் படங்களை திரையரங்கில் ஓடினால் எவ்வளவு லாபம் கிடைக்குமோ அதை கிட்டத்தட்ட கொடுத்து விட்டால் போதும். இதை நல்ல முயற்சியாகத் தான் பார்க்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், "ஏற்கனவே ஒன்றரை மாதங்களாக சினிமாத்துறை முடங்கியிருக்கிறது. அது இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடையுமா அல்லது நான்கு வாரங்கள் ஆகுமா என்பது யாருக்கும் தெரியாது. அதுவரையில் படப்பிடிப்பு நடக்கப் போவதும் இல்லை. ஒருவேளை மூன்று வாரங்கள் கழித்து அல்லது மூன்று மாதங்கள் கழித்து திரையரங்கை திறக்கிறோம் எனில், இந்த மாதிரி படங்களை எல்லாம் ஓ.டி.டியில் போட்டுவிட்டால் திரையரங்குகளில் என்ன படங்களை வெளியிடுவது?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
"எங்களுக்கு தியேட்டர் திறக்கும்போது படங்கள் இருக்காது. சிறிய படங்களையோ, பெரிய கலைஞர்கள் இல்லாத படத்தையோ ஓ.டி.டியில் கொடுக்கும்போது நாங்கள் கேட்கப் போவதில்லை. நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்."
மாஸ்டர் திரைப்படமும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்களே எனக் கேட்ட போது, "மாஸ்டர் படத்தை நிச்சயம் அமேசான் விலை கொடுத்து வாங்காது. தங்களுடைய வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவதற்காக 'பொன்மகள் வந்தாள்' படத்திற்கு அவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளனர். மாஸ்டர் படத்துக்கான பட்ஜெட்டை அவர்களால் கொடுக்க முடியாது" என்று அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
- டாஸ்மாக் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
- இந்தியாவில் அதிகரிக்கும் மதுப்பழக்கம் : கருப்பு பக்கங்களும், சந்திக்கவுள்ள சவால்களும் - விரிவான அலசல்
- கொரோனாவால் களையிழந்த ‘மலைகளின் ராணி’ - முடங்கிய ஊட்டி சுற்றுலாத்தளங்கள்
- என்ன ஆனது சௌதிக்கு? பொற்காலப் பயணத்தில் அது சறுக்குமிடம் பள்ளமா? பாதாளமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: