You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் நாளை முதல் மீண்டும் மதுக் கடைகள் திறப்பு
தமிழ்நாட்டில் மதுக் கடைகளைத் திறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாநிலத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மதுக்கடைகளை நடத்திவரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகள் மீறப்பட்டதாகக் கூறி, மதுக்கடைகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது.
இதனால் மே 16ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகரக் காவல்துறை பகுதிகளில் மதுக்கடைகள் இயங்காது. மால்கள், வணிக வளாகங்கள், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மதுக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். கடைக்கு வருபவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்துவர வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இன்று (மே 15) உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
டாஸ்மாக் கடைகளை மூட விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நான்கு வாரங்களுக்கு பிறகு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
எனவே டாஸ்மாக் கடைகளில் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் கடைகளை மூட உத்தரவிட்டது.
"மது ஒரு அவசிய பொருள் அல்ல எனவே மத்திய அரசால் மே 17ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை கடைகளை மூட வேண்டும்" என உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி உட்பட பல்வேறு விதிமுறைகள் மீறப்படுகின்றன எனவே மதுபான கடைகளை மூட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் உட்பட பல்வேறு தரப்பினர் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் தொடுக்கபப்ட்ட மனுவின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு கால அவகாசம் கோரியுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த விசாரணை இன்றும், நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: