நிர்மலா சீதாராமன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த திட்டங்கள் என்னென்ன?

ரேஷன் அட்டை இல்லாத உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றும் இன்றும் வெளியிட்டார்.

நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசாங்க ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர் வைப்பு நிதி செலுத்துபவர்கள் உள்ளிடவர்களுக்கான 15 அம்ச திட்டங்களை அறிவித்திருந்த நிர்மலா சீதாராமன் இன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் திட்டங்களை அறிவித்தார்.

திட்டங்களை அறிவிப்பதற்கு முன்னதாக பேசிய நிர்மலா சீதாராமன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நகர்புற ஏழைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேசினார்.

மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாநில பேரிடர் நிதியத்தை பயன்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.

மேலும், 12,000 சுய உதவி குழுக்கள் மூலம், 3 கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் சூழலில் 7200 புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டும், 86,000 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த திட்டங்கள்

  • இரண்டு மாதங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை மற்று ஒரு கிலோ கொண்டை கடலை வழங்கப்படும். இது ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வழங்கப்படும் இதன்மூலம் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவர்.
  • ஆகஸ்டு 2020க்குள் ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும்.
  • நகரங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ குறைந்த வீட்டு வாடகை திட்டங்கள் செயலாக்கப்படும்; அரசு உதவி பெறும் கட்டடங்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும்; தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யலாம் அதற்கு மத்திய அரசு உதவி செய்யும்.
  • முத்ரா சிஷு திட்டத்தின் கீழ் கடன் பெற்ற சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், 50,000 ரூபாய்க்கு கீழ் கடன் பெற்றவர்களுக்கு 12 மாதங்களுக்கு, வட்டி விகிதத்திலிருந்து 2 சதவீதம் வரை வட்டி குறைக்கப்படும் வழங்கப்படும் இதன்மூலம் 3 கோடி மக்கள் பயன் பெறுவர்.
  • ஒரு மாதத்திற்குள்ளாக சாலையோர வியாபாரிகளுக்கு உதவும் திட்டங்கள் கொண்டு வரப்படும். சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்புக்கடன் வழங்குவதற்காக 50ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவர்.
  • 6 லட்சம் முதல் 18 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்ட நடுத்தர குடும்பங்களுக்கான மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் பெறும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நோக்கில் 6000கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படும்.
  • சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், பயிர்க்கடன்கள் வழங்க கிராமப்புற கூட்டறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு நபார்ட் வங்கி மூலம் கூடுதலாக 30,000 கோடி ரூபாய் வழங்கப்படும். இது 3 கோடி விவசாயிகளுக்கு உதவும் திட்டமாக இருக்கும்.
  • கிசான் கிரேடிட் கார்டுகள் மூலம் 2 லட்சம் கோடி வரை, சலுகை அடிப்படையிலான கடன் உதவிகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளும் பயன்பெறுவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: