கொரோனா வைரஸ்:ஊரடங்கிற்குப் பிறகு டெல்லியிலிருந்து முதல் பயணிகள் ரயில் சென்னை வந்தது

ஊரடங்கிற்குப் பிறகு டெல்லியிலிருந்து முதல் முறையாக பயணிகள் ரயில் வியாழக்கிழமை இரவில் சென்னை மத்திய ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் வந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, தில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டன. அதன்படி டெல்லியிலிருந்து சென்னைக்கு அறிவிக்கப்பட்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் சென்னை மத்திய ரயில் நிலையத்தை 8 மணி அளவில் வந்தடைந்தது.

மொத்தம் 797 பயணிகள் சென்னையை வந்தடைந்திருந்தனர். இதில் வந்த பயணிகள் அனைவருக்கும் ஆரம்பகட்ட சோதனைகள் ரயில் நிலையத்திலேயே நடைபெற்றன. இதற்குப் பிறகு, அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படவிருப்பது குறித்தும் அதுவரை தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் என்றும் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதுவரை அரசின் தனிமைப்படுத்தும் மையங்களிலோ, பணம் கொடுத்து ஹோட்டல்களிலோ தங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் 523 பேர் அரசின் மையத்தைத் தேர்வுசெய்தனர். 274 பேர் ஹோட்டல்களில் தங்க விருப்பம் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் அரசுப் பேருந்துகள் மூலம் தனிமைப்படுத்தும் மையங்களுக்கும் ஹோட்டல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள் தத்தம் இடங்களைச் சென்றடைந்தவுடன், உடனடியாக கொரோனா சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்படும். சோதனை முடிவுகள் வெளியாகும்வரை இவர்கள் இந்த இடங்களில் தங்கியிருப்பார்கள். சோதனையில், யாருக்கு கொரோனா இருப்பது தெரிய வருகிறதோ, அவர்கள் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுவார்கள். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

சென்னையை வந்தடைந்த பயணிகள் பலர், உடனடியாக வீட்டிற்குச் செல்ல முடியாததை அறிந்து கதறி அழுதனர். சிலர் அதிகாரிகளை நோக்கிச் சத்தமிட்டனர்.

இதற்கு அடுத்த ரயில், சனிக்கிழமையன்று சென்னையை வந்தடைகிறது.

முன்னதாக, தமிழகத்தில் நேற்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 363 பேருக்கு அத்தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11965 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 2,91,492 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சோதனை செய்யும் லேப்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இதில் 38 லேப்கள் அரசு மருத்துவமனைகளில் இயங்கிவருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2240 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் 2 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளனர். இவர்கள் இருவருக்குமே கடுமையான உடல் நல பாதிப்புகள் இருந்துள்ளன. ஒருவருக்கு 43 வயது. மற்றொருவருக்கு 45 வயது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 7365 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், தலைநகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5637ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 9 பேருக்கும் திருவள்ளூரில் 15 பேருக்கும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 8 பேருக்கும் இந்நோயத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்ட்ராவிலிருந்து தமிழகம் வந்த 22 பேருக்கும் கத்தாரிலிருந்து வந்த 2 பேருக்கும் இந்நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களிடம் கடந்த 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை நடத்தப்பட்ட சோதனைகளில் பத்தாம் தேதி குவைத்திலிருந்து வந்த 4 பேருக்கும் 12ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து வந்தவர்களில் ஐந்து பேருக்கும் நோய்த் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது ஒரு கொரோனா நோயாளிகூட இல்லை என சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 11 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் ஒரு நோயாளிகூட இல்லாமல் இருந்த நிலையில், இன்று ஒருவருக்கு நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிவகங்கையில் 11 நாட்களுக்குப் பிறகு புதிதாக ஒருவருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 11 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் இன்று புதிதாக ஒருவருக்கு அந்நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தனர். இவர்களில் கடைசி நோயாளி மே 2ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 11 நாட்களாக அந்த மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. 23 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

இந்த நிலையில், காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தினர் மும்பையிலிருந்து சில நாட்களுக்கு முன்பாக ஊர் திரும்பினர். அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 29 வயதுப் பெண்ணுக்கு அந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: