"கொரோனா மாதிரி கிளம்புறாய்ங்களே": போலி டிவிட்டர் குறித்து வடிவேலு

நடிகர் வடிவேலு ட்விட்டரில் இணைந்திருப்பதாக ஒரு ட்விட்டர் கணக்கும் அவர் பேசும் வீடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது. ஆனால், "இது எவனோ வேண்டாதவன் செய்த வேலை" என்கிறார் வடிவேலு.

சிறிது நேரத்திற்கு முன்பாக, @VadiveluOffl என்ற ட்விட்டர் கணக்கு ஒன்று துவக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதனைப் பின்தொடர ஆரம்பித்தனர். அதில் "பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி -ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு. #PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன்" என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த வீடியோவில், தெனாலிராமன் பட கெட்டப்பில் இருந்த வடிவேலு, "என் ஃப்ரண்டு எல்லோருமா சேர்ந்து அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க, அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்கன்னாங்க. அதான் ஏற்கனவே பேங்கில இருக்கேன்னேன். இல்ல ட்விட்டர்ல ஓபன் பன்னுங்கன்னாங்க. இந்தா, ஓபன் பண்ணியாச்சு. பேங்குல பணத்தை பரிமாறுவது மாதிரி டிவிட்டர்ல அன்பைப் பரிமாறலாம். நடுவுல கொஞ்சம் இடைவெளி விழுந்துபோச்சு. இனி அடிக்கடி சந்திப்போம்" என்று கூறியிருந்தார்.

இது குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது, தனக்கு டிவிட்டர் என்றாலே என்னவென்று தெரியாது என்றார்.

"நான் தெனாலிராமன் படத்தில் நடிக்கும்போது இயக்குனர் யுவராஜ் டிவிட்டர் அக்கவுன்ட் துவங்கலாம் என்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ அது. அதைத் தேடியெடுத்து யாரோ இதைச் செய்கிறார்கள். எனக்கு டிவிட்டர் என்றாலே என்னானு தெரியாது. கொரோனா மாதிரி திடீர் திடீர்னு கெளம்புறாய்ங்க" என்றார்.

ஆனால், பலரும் இது போலி கணக்கு என்பதைக் கண்டறிந்து, அதனை முடக்கும்படி புகார் அளித்துவருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: