கொரோனா: பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு வைரஸ் தொற்று

வெள்ளிக்கிழமையன்று லக்னோவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் பாலிவுட் பாடகி கனிகா கபூரும் ஒருவர்.

இதை கனிகா கபூர் தன்னுடைய சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தார்.

மார்ச் மாதம் கனிகா லண்டனில் இருந்து இந்தியா வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தெர்மல் ஸ்கீரினிங் செய்தபோது கோவிட் -19 இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவர் இரண்டு மூன்று பெரிய அளவிலான பார்டிகளில் கலந்து கொண்டார். அதில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இப்போது கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக லக்னோவில் அனைத்து கடைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை மார்ச் 23 வரை மூட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனிகா கபூர் குடும்பம் வாழும் குடியிருப்பை முடக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

லக்னோ மாவட்ட ஆட்சியர் அபிஷேக் பிரகாஷ், இது குறித்து கூறுகையில், "தற்போது அவர் இருக்கும் பகுதியை முடக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. மக்களை வெளியில் வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தப்பகுதியான மகாநகரை சுற்றி இருக்கும் குர்ம் நகர், இந்திரா நகர், டேடி புலியா, விகாஸ் நகர், அலிகஞ் போன்ற இடங்களில் மருத்துவமனை, மருந்து கடை போன்ற முக்கிய கடைகளை விடுத்து மற்ற கடைகளை மூடுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

கனிகா கபூர் வாழும் மஹாநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நகரின் முக்கிய நபர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் மொத்தம் 700 வீடுகள் இருக்கும். இந்த குடியிருப்பு கட்டடம் பாஜக எம்பி சஞ்சய் சேட் உடையது. இதனால் இந்தப் பகுதியில் இருக்கும் அனைவரிடமும் விசாரணை செய்வது அரசுக்கு பெரிய சவாலாக இருக்கும்.

பார்டியில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள்

கனிகா கலந்து கொண்ட பார்டி ஒன்று முன்னாள் அமைச்சர் அக்பர் அஹமது டம்பியின் வீட்டில் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பார்டியில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவும் அவரது மகன் துஷ்யந்த் சிங்கும் கலந்து கொண்டார்கள்.

கனிகா கபூரின் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் தானும் தனது மகனும் தங்களைத் தாங்களே தனிமை படுத்தி கொண்டதாக வசுந்தரா ராஜே டீவீட் செய்துள்ளார்.

இந்த பார்டியில் உத்தர பிரதேசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்கும் கலந்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: