You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 244ஆக உயர்வு - Coronavirus India Updates
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 244ஆக உயர்ந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சக அதிகாரிகள், கொரோனா தொற்று இருப்பவர்களை கண்டறியும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் பிரதமர் அறிவித்த ஒருநாள் ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பது தொற்று பரவுதலை தடுக்கும் என்று குறிப்பிட்டனர்.
ஒருவரையொருவர் சில மீட்டர்கள் தூரம் தள்ளி இருப்பது நல்லது என்பதை வலியுறுத்திய அவர்கள், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவ மத்தியக்குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக, அத்தியாவசிய பொருட்களை கொண்டுவரும் வாகனங்கள் தவிர, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் நுழைய மார்ச் 21 முதல் தடை விதித்துள்ளது தமிழக அரசு.
கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகளில் , சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுவரும் வாகனங்கள் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்காக பயணிக்கும் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் நுழைய தடை என அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் பொது மக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் வாகனங்களில் வரும் நபர்களுக்கு கொரோனோ அறிகுறிகள் இருக்கின்றனவா என ஆரம்பக்கட்ட சோதனைகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிலை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய பாஸ்கர், கொரோனா தொற்றுக்கு என தனியாக 100 ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மக்கள்நல வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், இன்னும் பொதுமக்களின் நகர்வு அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது என்றார். தேவையற்ற பயணங்களை கட்டாயம் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்..
இது விடுமுறை காலம் அல்ல என்று குறிப்பிட்ட அமைச்சர் இந்த நாட்களில் சுற்றுலா ஏதும் செல்லாமல் மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று
இந்நிலையில் கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தற்போது கேரளாவில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை நான்கு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். நான்கு பேருமே 64 வயதை கடந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் வழியாக நிலைமையை குறித்து உரையாடினார்.
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை 13,486 பேரிடம் 14,376 மாதிரிகள் பெறப்பட்டு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பன்னாட்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தலைமை அலுவகங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார்துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் மார்ச் 31 வரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென டெல்லி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கவும் டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே 90131 51515 என்ற எண்ணில் கொரனோ உதவி மையம் ஒன்றை இந்திய அரசு அறிவித்துள்ளது.
தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179ஆக இருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 223ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 18 நிறுவனங்களுக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கான உரிமத்தை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆணையரகம் வழங்கியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா குறிப்பிடத்தக்க வகையில் அந்த நோய்த்தொற்றை தங்களது நாட்டில் கட்டுப்படுத்தியுள்ளதாக கூறும் நிலையில், கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலால் தவித்து வரும் உலக நாடுகளுக்கு உதவும் நோக்கில் காணொளி வாயிலாக மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டோங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த கருத்தரங்கில் இந்தியா பங்கேற்க உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நிலை என்ன?
இந்தியாவில் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென்று இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ள நிலையில், அன்றைய தினம் சென்னை கோயம்பேடு சந்தை இயங்காது என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேபோன்று, அன்றைய தினம் காலை 7 மணிக்கு மேல் பால் விற்பனை இல்லை என்று தனியார் பால் முகவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் ஏதும் மார்ச் 22ஆம் தேதியன்று இயங்காது என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் இதுவரை மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் முழு உடல்நலன் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து வரும் அனைத்து கேரள மாநில வாகனங்களை காவல்துறையினர், சுகாதார துறையினர் திருப்பி கேரள நோக்கி அனுப்புகின்றனர்.
மேலும் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்கள் மருத்துவமனை செல்வோர், அத்தியாவசமான பொருட்களை கொண்டு செல்வேர்கள் என பலரை தீவிரமாக கண்காணித்து மருத்துவ சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று மாலை முதல் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, இந்து அறநிலையத்துறை உத்தரவு.
22ஆம் தேதி சுய ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதுதொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நேற்று (வியாழக்கிழமை) இரண்டு எட்டு மணிக்கு பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் இந்தியாவில் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் இதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மோதி கூறினார்.
அன்று காலை காலை 7 முதல் இரவு 9 வரை இது அமலில் இருக்கும் என்றும் இந்த அனுபவம் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவி செய்யும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- ‘’எனது மகளின் புகைப்படத்தை அணைத்து இன்று உனக்கு நீதி கிடைத்துவிட்டது என்றேன்’’
- "பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - முதல்வர் கமல்நாத் ராஜிநாமா அறிவிப்பு
- நரேந்திர மோதி அறிவிப்பு: 22-ம் தேதி இந்தியாவில் மக்கள் ஊரடங்கு
- நிர்பயா வழக்கு: நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் - மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட உடல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்