You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Janata Curfew நரேந்திர மோதி அறிவிப்பு: 22-ம் தேதி இந்தியாவில் மக்கள் ஊரடங்கு
கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
அன்று காலை காலை 7 முதல் இரவு 9 வரை இது அமலில் இருக்கும் என்றும் இதனை மக்கள் ஏற்று நடக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவம் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகை உலுக்கிவரும் கொரோனா தொற்று சிக்கல் இந்தியாவையும் கவலைக்குள்ளாக்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை - மார்ச் 19 - இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் இந்த 'மக்கள் ஊரடங்கு' பற்றி அறிவித்தார்.
இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளோர், போக்குவரத்து, உணவு, ஊடகம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் ஊரடங்கு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் கைத்தட்டியோ, தங்கள் வீட்டின் அழைப்பு மணிகளை அடித்தோ நன்றி தெரிவிக்கவேண்டும்.
ஐந்து மணிக்கு உள்ளாட்சி மன்றங்கள் சைரன் ஒலி எழுப்பவேண்டும். சாத்தியமானால் ஒவ்வொருவரும் 10-பேரை அழைத்து மக்கள் ஊரடங்கு பற்றி எடுத்துச் சொல்லவேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பொருளாதார சிக்கல் நடவடிக்கைக் குழு
கொரோனா வைரஸ் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதால் அதனை எதிர்கொள்ள நிதியமைச்சர் தலைமையில் பொருளாதார சிக்கல் நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார் மோதி.
உலகம் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. மொத்த மனித சமூகத்தையும் இது சூழ்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இது தொடர்பான செய்தியை கவலையோடு கவனித்து வருகிறோம்.
இந்த உலகளாவிய தொற்றில் இருந்து இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்பது போன்ற தோற்றம் இருக்கிறது. இந்த நம்பிக்கை உண்மையல்ல. இந்த வைரஸ் தொற்றினை எதிர்த்துப் போராட இது பற்றிய விழிப்புணர்வும், உஷார் நிலையும் மிகவும் முக்கியம்.
கூட்டத்தில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். சமூகத்தில் மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது மிக முக்கியம்.
இதுவரை அறிவியலால் இந்த நோய்க்கு மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் கவலை எழுவது இயல்பு.
இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது என்பது குறித்து இந்திய அரசு கவனத்துடன் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருந்து, அரசு அளிக்கிற உத்தரவுகளை மதித்து நடக்கவேண்டும்.
வருகிற வாரங்களில் அவசியம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்த சில நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
மருத்துவ சேவை
சாதாரன மருத்துவ ஆலோசனைகளுக்கு, வழக்கமான பரிசோதனைகளுக்கு இந்த சூழ்நிலையில் மருத்துவரிடம் செல்லவேண்டாம். தேவையெனில் தொலைபேசி மூலம் ஆலோசனை பெறலாம். மிக அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை மக்கள் ஒரு மாதத்துக்குத் தள்ளிப் போடவேண்டும் என்றும் மோதி கேட்டுக்கொண்டார்.
அத்தியாவசியப் பொருள்கள்
அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே வழக்கமாக எப்போதும் வாங்குவதைப் போலவே பொருள்களை வாங்குங்கள்.
இந்த நேரத்தில் அவரவர், தங்கள் வேலையை செய்ய முடியும். சில சங்கடங்கள் ஏற்படும். இது போன்ற நேரத்தில் புரளிகள் பரவும். சில எதிர்பார்ப்புகளை அரசால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும்.
இந்த நேரத்தில் நாம் நமது முழு ஆற்றலையும், கொரோனாவில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளவே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி முன்னோக்கி நடைபோடவேண்டும் என்பதே என் விருப்பம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: