You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசிய விமான நிலையத்தில் தவித்தவர்கள் இந்தியா வந்தது எப்படி? - அனுபவங்களை விவரித்த மருத்துவ மாணவர்கள்
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு தினங்களாக அவதிப்பட்ட மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் சுமார் 200 பேர் நேற்று (மார்ச் 18) சிறப்பு விமானத்தில் தாயகம் வந்தடைந்தனர்.
இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பிலிப்பைன்சில் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பிலிப்பைன்சையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடிவு செய்தனர்.
இதையடுத்து மார்ச் 17ஆம் தேதி காலை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து இரு விமானங்களில் சுமார் 200 மாணவர்கள் இந்தியாவுக்குப் புறப்பட்டனர். மணிலாவில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வந்தடைந்து, பின்னர் மற்றொரு விமானத்தில் விசாகப்பட்டினம், டெல்லி ஆகிய இரு நகரங்களுக்கு பயணம் செல்வதாக திட்டம் இருந்தது.
இந்நிலையில், மார்ச் 17ஆம் தேதி காலை கோலாலம்பூர் வந்தடைந்த அம்மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், மலேசியாவில் இருந்து இந்தியா வரக் கூடியவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மார்ச் 17ஆம் தேதி காலை முதல் மாணவர்கள் செய்வதறியாது விமான நிலையத்தில் திகைத்து நின்றனர். மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு என்னாகுமோ என்ற தவிப்புக்கு ஆளாகினர். பல மாணவர்களிடம் மலேசிய கரன்சி இல்லாததால் 17ஆம் தேதி இரவு வரை சாப்பிட ஏதும் வாங்க முடியாமல் திண்டாடியுள்ளனர். இந்திய அரசு தங்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அம்மாணவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஓஜேஷ் அமிர்தலிங்கத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அவர் நடந்தவற்றை விவரித்தார்.
"மணிலாவில் இருந்து புறப்படும் வரை இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்தோ, விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்தோ ஏதும் தெரியாது. அதனால் தான் புறப்பட்டு வந்தோம். மலேசியா வந்தடைந்த பிறகுதான் சூழ்நிலை மாறியது தெரிய வந்தது. இதனால் மாணவர்கள் பலர் பதற்றம் அடைந்தனர். எப்படி ஊர் திரும்புவது என்ற கவலையில் புலம்பத் துவங்கினர்."
"மலேசிய விமான நிலைய அதிகாரிகள் அமைதி காக்கும்படி அறிவுறுத்தினர். இதனால் நாங்கள் அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிந்து எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். பிறகு எங்கள் கோரிக்கைகளை காணொளிகளாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டோம்."
"குறிப்பாக இந்திய பிரதமர் மோதிக்கு வேண்டுகோள் விடுத்ததற்கு அவரிடம் இருந்து நேரடியாக பதில் வரவில்லை என்றாலும், சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும் எனும் நம்பிக்கை இருந்தது. இந்நிலையில், எங்களை பிலிப்பைன்சுக்கு அனுப்பி வைத்த கல்விச்சேவை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோர் எங்களுக்காக சில முயற்சிகளை மேற்கொண்டனர்."
"மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமோ, பிற அமைப்புகளோ எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. கையில் இருந்த தொகையைக் கொண்டு மாணவர்கள் எங்களுக்குள் நிலைமையைச் சமாளித்துக் கொண்டோம்."
"நல்ல வேளையாக ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் சார்பில் இரண்டு அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டு பேசி இரவு உணவுக்கான கூப்பன்களை அளித்தனர். இந்திய மதிப்பில் சுமார் 350 ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை அளித்ததால் எங்களால் சாப்பிட முடிந்தது. அதே போல் 18ஆம் தேதி காலை உணவுக்கும் இவ்வாறு கூப்பன் அளித்தனர்."
"திடீரென மலேசிய விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டதால் பெற்றோரும் உறவினர்களும் கவலையடைந்தனர். மாணவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. எனக்கும் வந்தது. நான் சூழ்நிலையைக் கண்டு பயப்படவில்லை என்றாலும், பெற்றோரின் தவிப்பை புரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக மாணவிகளின் பெற்றோர் வெகுவாக கவலைப்பட்டனர்."
"இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் அமர வைக்கப்பட்ட இடத்திலேயே தூங்கினோம். காலை விமானம் வரும் என்றனர். ஆனால் வரவில்லை. நேரம் கடந்தபடியே இருந்த நிலையில், மாலையில் சுமார் ஐந்தரை மணியளவில் சிறப்பு விமானத்தில் இந்தியா திரும்புவது உறுதியானது. இந்த இரு நாட்களை எங்களால் மறக்க இயலாது. அதிகமான மாணவர்கள் விசாகப்பட்டினம் செல்ல பயணச்சீட்டு பெற்றிருந்ததால், ஒரு சிறப்பு விமானம் அங்கு செல்கிறது. மற்றொரு விமானம் டெல்லி செல்கிறது," என்று விமான நிலைய அனுபவத்தை விவரித்தார் ஓஜேஷ்.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் தரையிறங்கிய பிறகு அவரை பிபிசி தமிழ் மீண்டும் தொடர்பு கொண்டது. அப்போது தங்களை தாயகத்துக்கு பத்திரமாக அழைத்துவந்த விமானக் குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். மேலும் விமானம் பறந்து கொண்டிருந்த வேளையில், இந்திய அரசுக்கு மாணவர்கள் அனைவரும் நன்றி தெரிவிக்கும் காணொளிப் பதிவையும் அனுப்பி வைத்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்