மத்தியப்பிரதேச மாநில அரசியல் சர்ச்சை: "பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - முதல்வர் கமல்நாத் ராஜிநாமா அறிவிப்பு

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் பதவியை தான் ராஜிநாமா செய்யப்போவதாக போபாலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மாநில ஆளுநரிடம் இன்று (மார்ச் 20) தனது ராஜிநாமாவை சமர்ப்பிக்க போவதாக கமல்நாத் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

''அண்மையில் பெங்களுரூவில் பணயக்கைதிகளாக சட்டமன்ற உறுப்பினர்கள் அழைத்து செல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டிருக்கின்றனர். உண்மை ஒருநாள் வெளியே வரும். மக்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்'' என்று கமல்நாத் குறிப்பிட்டார்.

''கடந்த 15 மாதங்களாக நான் மத்தியப்பிரதேச மாநில முதல்வராக மாநிலத்தின் நலனுக்காக உழைத்து வந்தேன். 15 ஆண்டுகளாக அவர்கள் செய்யாததை நான் செய்தேன். ஆனால், முதல் நாளில் இருந்து எனது ஆட்சிக்கு எதிராக இவர்கள் சதித்திட்டம் தீட்டிவந்தார்கள். எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பெங்களூருவுக்கு கடத்தி செல்லப்பட்டனர். பல கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டது. மக்கள் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள்'' என்று கமல்நாத் மேலும் கூறினார்.

முன்னதாக, கடந்த வாரத்தில் மத்தியப்பிரதேச அரசியலில் தீவிர குழப்பம் ஏற்பட்டது.

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியா, கடந்த சில நாள்களாக வீசிய அரசியல் புயலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், அவருக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர்.

இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத்துக்கு மாநில ஆளுநர் உத்தரவிட்டார். இந்நிலையில் தனது பதவியை கமல்நாத் ராஜிநாமா செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :