You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏ.ஆர். ரகுமான் மகள் கதீஜா: "நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன அதை கவனியுங்கள்" - தஸ்லிமா நஸ்ரினுக்கு பதில்
"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்," என்று எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரகுமான் மகள் கதீஜா பதிலளித்துள்ளார்.
கவலை கொள்கிறேன்
பிப்ரவரி 11ஆம் தேதி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் மகள் கறுப்பு புர்கா அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "எனக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் மகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மூச்சு திணறலே ஏற்படும். கலாசாரம் வாய்ந்த படித்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கூட சுலபமாக மூளை சலவை செய்யப்பட்டுவிடுவது எனக்குக் கவலை அளிக்கிறது." என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
எத்தனையோ பிரச்சனைகள் உள்ளது
ஏ.ஆர்.ரகுமான் மகள் ட்விட்டரில் இல்லை.
தஸ்லிமாவின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பிப்ரவரி 14ஆம் தேதி, "அன்புக்குரிய தஸ்லிமா நஸ்ரினுக்கு, எனது உடையை கண்டு உங்களுக்கு மூச்சடைப்பது எனக்கு கவலை அளிக்கிறது. கொஞ்சம் நல்ல காற்றை சுவாசித்து கொள்ளுங்கள். ஆனால், எனக்கு மூச்சு திணறவில்லை பெருமிதமாகதான் உள்ளது." என்ற தொனியில் பதில் அளித்துள்ளார்.
கதீஜா, "பெண்ணியம் என்றால் என்ன என்பது குறித்து கொஞ்சம் கூகுளில் தேடிப் பாருங்கள். பிற பெண்களை சாடுவதும், அவர்களின் தந்தையை பிரச்சனைக்கு இழுப்பதும் பெண்ணியம் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "உங்களுடைய ஆராய்ச்சிக்காக நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாக எனக்கு நினைவில்லை." என்றும் தெரிவித்துள்ளார் கதீஜா.
ஆண்களுக்கே அவமானம்
இப்படியான சூழலில் இது குறித்து மீண்டும் ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ள தஸ்லிமா, "உண்மையில் புர்கா பெண்களைவிட ஆண்களுக்கே அவமானம். ஆண்கள் எல்லாம் பாலியல் வல்லுறவு செய்பவர்கள் என்பதே புர்காவுக்கு அர்த்தம்," என்று கூறி உள்ளார்.
மேலும் அவர், "பாலியல் தாக்குதலிலிருந்து தப்பிக்க புர்கா உதவாது," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்பே சர்ச்சை
கதீஜாவின் புர்கா குறித்து சர்ச்சை எழுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ ஆர் ரஹ்மான் தன் மகள் கதீஜாவோடு கலந்துகொண்டார். அப்போது கதீஜா உடலை முழுவதுமாக மறைக்கும் வண்ணம் உடுத்தியிருந்த புர்கா ஆடை சர்ச்சைகளை உருவாக்கியது. அப்போதே அதற்கு பதிலளித்த கதீஜா 'இது நான் தேர்ந்துகொண்ட பாதை, இதற்கும் எனது தந்தைக்கும் சம்பந்தம் இல்லை' எனத் தெரிவித்து இருந்தார்.
ஏ.ஆர். ரகுமான் தனது குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தில் ரகுமானின் மனைவி உள்ளிட்ட பிற பெண்கள் புர்கா அணியவில்லை. Freedomtochoose என்ற ஹாஷ்டேகுடன் அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து இருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: