You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் சிறையில்தான் ஹஃபீஸ் சயீது கடைசிவரை இருப்பாரா? மும்பை தாக்குதல் சந்தேக நபர்
- எழுதியவர், எம். இல்யாஸ் கான்
- பதவி, பிபிசி, இஸ்லாமாபாத்
தீவிரவாத அமைப்பு எனும் குற்றச்சாட்டின்கீழ் தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்தார் என்ற குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டது.
161 பேர் உயிரிழந்த 2008ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் இவர் முக்கிய பங்காற்றினார் என்ற குற்றச்சாட்டும் ஹஃபீஸ் சயீத் மீது இருக்கிறது.
பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனர் ஆவார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை அமெரிக்கா மற்றும் ஐ.நா, சர்வதேச பயங்கரவாதி என்று அறிவித்தன. ஹஃபீஸ் சயீத் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என 2014இல் அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.
சரி. அவரை சிறையில் தள்ள இவ்வளவு காலம் ஆனது ஏன்? அவர் சிறையிலேயே இருப்பாரா? இல்லை வெளியே வந்துவிடுவாரா?
இந்த கேள்விக்கான பதில் சிக்கலானதுதான். ஏனெனில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர் ஹஃபீஸ் சயீத்.
சயீதுக்கு இப்போது தண்டனை வழங்கப்பட்டது ஏன்?
2000ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படுவது, அங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலை ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம்.
மேலும் பாகிஸ்தான் கறுப்புப் பட்டியிலில் சேர்க்கப்படலாம் என்று சர்வதேச பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது மற்றும் பணம் கையாடல் செய்யப்படுவதை கண்காணிக்கும் ஃபினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் எனும் பன்னாட்டு அமைப்பு (FATF) எச்சரிக்கை விடுத்துள்ளதும் இதற்கு காரணமாக இருக்கலாம். பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை FATF கண்காணித்து வருகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை எந்தளவுக்கு முடக்கியுள்ளது என்பது குறித்து FATF ஆலோசனை நடத்தும் ஒருவாரத்திற்கு முன்பாக சயீதுக்கு இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டது.
பயங்கராவதத்திற்கு எந்த நிதியும் வழங்குவதில்லை என்று நீண்ட காலமாக கூறிவரும் பாகிஸ்தான், வெளியுறவுக் கொள்கைகளை விரிவுபடுத்த முயற்சிக்கும் அதே வேளையில் கடுமையாக நிதி நெருக்கடியில் உள்ளது.
1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, நேரடியாகவோ மறைமுகமாகவோ பெரும்பாலும் ராணுவத்தால் ஆட்சி செய்யப்பட்ட பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது.
FATF அமைப்பால் பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்நாட்டிற்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படலாம்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. தற்போது ஹஃபீஸ் சயீதுக்கு சிறை தண்டனை அளித்துள்ளதை அமெரிக்க வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது.
பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?
பணம் கையாடல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை குறைக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றவில்லை என்று கூறி 2018 ஜூன் மாதத்தில் பாகிஸ்தானை FATF தனது 'கிரே' பட்டியலில் சேர்த்தது.
சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்படுதை தவிர்க்க, பாகிஸ்தான் அடுத்த சில மாதங்களில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் பலரை அந்நாடு கைது செய்தது. அதோடு தடை செய்யப்பட்ட அமைப்புகளின் வசம் இருந்த சொத்துகளையும் முடக்கியது.
எனினும் இந்த நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே பார்க்கப்பட்டன. முக்கிய தீவிரவாத அமைப்புகளான ஜமாத்-உத்-தவா மற்றும் ஜெயிஷ்-இ-மொஹமத் ஆகியவை மீது எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கடும் நெருக்கடி காரணமாக ஏப்ரல் 2019ல் ஜமாத் உத் தவா மற்றும் தவா-வல்-இர்ஷத் போன்ற அமைப்புகளுடன் தொடர்புடைய பல அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்தது.
இந்த தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்புடைய சில சொத்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஹஃபீஸ் சயீத் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்ற மதிப்பாய்வுக்காக FATF ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் கடந்த ஜூலையில் ஹஃபீஸ் சயீத் கைது செய்யப்பட்டார்.
அக்டோபரில் நடந்த அந்த மதிப்பாய்வில், பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், அந்நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அடுத்த கூட்டமானது இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது.
சயீத் மீது கடந்த டிசம்பரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, இரண்டே மாதங்களில் விசாரணை முடிந்தது. பாகிஸ்தானில் இவ்வளவு விரைவாக வழக்கு விசாரணை முடிவடைந்தது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.
ஆனால், சயீதுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு துறையோடு நெருங்கிய தொடர்பு இருப்பதால், அவர் சிறையிலேயேதான் வைக்கப்படுவாரா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
முதன்முறையாக ஹஃபீஸ் சயீத் கைது செய்யப்பட்டது இப்போதுதானா?
இல்லை. அமெரிக்க 9/11 தாக்குதல் நடந்ததில் இருந்து பாகிஸ்தான் ஹஃபீஸ் சயீதை பல முறை கைது செய்துவிட்டது. ஆனால், அவர்மீது முறையாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல், விடுவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தார்.
2001 டிசம்பரில் இந்திய நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் 2006 மும்பை ரயில் குண்டு வெடிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய மூளையாக ஹஃபீஸ் செயல்பட்டார் என்று இந்திய அரசாங்கம் குற்றஞ்சாட்டியதில் இருந்து, அவர் பல முறை அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.
2008ல் லஷ்கர்-இ-தொய்பா நடத்திய மும்பை தாக்குதல் தொடர்பாக அவர் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்தும் ஹஃபீஸ் சயீது பல முறை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அரசு அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல், வீட்டுச் சிறையை மட்டுமே நீட்டித்து பின்னர் இறுதியில் விடுவித்துவிடும்.
ஆனால், இந்த முறை என்ன ஆகும் என்று தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: