You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜாமியா நூலகத்தில் போலீசார் புகுந்து தாக்கும் காணொளி - 2 மாதம் கழித்து வெளியானது
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, உண்மை பரிசோதிக்கும் குழு, பிபிசி
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் நடத்திய தடியடி தொடர்பான புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
29 விநாடி நேரம் ஓடும் உள்ள அந்த சிசிடிவி காணொளியில் கல்லூரி நூலகத்தில் இருக்கும் மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்துகின்றனர். அதில் சில மாணவர்கள் நாற்காலிக்கு அடியில் சென்று ஒளிந்துகொள்கின்றனர். சிலர் தங்களை விட்டுவிடுமாறு கைகூப்பி கேட்கின்றனர்.
ஜாமியா மில்லியா மாணவர் அமைப்பான ஜாமியா கோ-ஆர்டினேஷன் கமிட்டி (ஒருங்கிணைப்புக் குழு) பிப்ரவரி 16 அதிகாலை 1.37க்கு இந்த காணொளியை ட்விட்டரில் பதிவு செய்தது. அந்த காணொளி வைரலாகியது.
ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய நபரான சஃபோராவிடம் இது குறித்து கேட்டபோது, அந்த வீடியோ தங்களுக்கு தற்போது தான் கிடைத்தது என்றும் அது தங்கள் கல்லூரியின் எம்.ஏ-எ.ஃபில் மாணவர்களின் நூலகம். அது முதல் தளத்தில் இருக்கிறது. கல்லூரி நிர்வாகம், சிசிடிவி காணொளியை டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தது. அப்போது தாங்கள் கேட்டபோது இதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் அதனால் அவர்களுக்கு கொடுக்க முடியாது என நிர்வாகம் கூறியது. இப்போது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் நீதிமன்றம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த விஷயம் மறந்து போனது போல் உள்ளது என்றும் கூறினார்.
இந்த காணொளி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் இணைய தளமான மெஹஃபில்-ஏ-ஜாமியாவிலிருந்து நேற்று இரவு கிடைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மெஹஃபில்-ஏ-ஜாமியாவில் உறுப்பினரான மொஹம்மத் ஹாரிஃபிடம் பிபிசி பேசியது. "இந்த காணொளி ஸ்டூடண்ஸ் ஆஃப் பிகார் என்னும் வாட்ஸ் ஆப் குழுவில் பகிரப்பட்டது. பின் அனைவரும் பகிர்ந்தவரை கேள்விகள் கேட்க தொடங்கிய பிறகு அவர் பயந்து வீடியோவை அழித்துவிட்டு வாட்ஸ்ஆப் குழுவை விட்டு சென்றுவிட்டார். அவரை தொடர்பு கொண்டபோது தமக்கு அச்சமாக இருப்பதாகக் கூறினார்" என்கிறார் ஹாரிஃப்.
29 விநாடிகள் உள்ள அந்த காணொளி இரண்டு காணொளியை சேர்த்து தயாரிக்கப்பட்டது ஆகும். மூல வீடியோவில் காட்சிகள் மிகவும் மெதுவாக இருப்பதால் என்ன நடந்தது என்பதை சரியாக காட்டுவதற்காக இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்தபோது, ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் அகமது அசிம், இந்த காணொளி உண்மையாகவே தெரிகிறது ஆனால் இதை ஜாமியா மில்லியா அதிகாரிகள் யாரும் ட்விட்டர் பக்கத்தில் போடவில்லை. இது பற்றி இப்போது ஏதும் கூற முடியாது எனக் கூறினார். போலீஸாருக்கு இந்த காணொளி கொடுத்தது குறித்து கூறும்போது , இதைப் பற்றி கருத்து தெரிவிக்க தங்களுக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்றார்.
இது குறித்து டெல்லி போலீஸாரின் மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ். ரந்தாவா கூறியபோது, காணொளியைக் கண்டோம் . இது குறித்து கூறுவதற்கு முன்னர் விசாரணை நடத்த வேண்டும். பிறகுதான் எதுவானாலும் கூற முடியும் எனக் கூறினார்.
இப்போது இந்த காணொளி வெளியே வந்ததால் தங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை. இரண்டு மாதங்களாக போலீஸார் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போதாவது எங்களுக்கு என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியட்டும். நீதித்துறையின் மேல் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது என சஃபோரா கூறியுள்ளார்.
ஏஎன்ஐ முகமை வெளியிட்டுள்ள செய்தியில் டெல்லி காவல்துறை ஆணையர்( குற்றவியல்) ப்ரவீர் ரஞ்சன் கூறுகையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். பல்கலைக்கழகம் இந்த வீடியோவை நம்புகிறது. போலீஸ் இதன் உண்மைத்தன்மை பற்றி கேள்வி கேட்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: