Corona Virus: சீனாவில் சிக்கியுள்ள ஆந்திரப் பெண்ணின் நிலை என்ன? #BBCGroundReport

    • எழுதியவர், ஹிர்தய விஹாரி
    • பதவி, பிபிசி தெலுங்கு சேவைக்காக

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இந்தியர்கள் பலர் நாடு திரும்பினர். ஆனால், ஆந்திராவை சேர்ந்த ஜோதி என்ற பெண் வுஹானில் சிக்கியிருக்கிறார்.

அவருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், ஜோதி இந்தியா திரும்பாதது அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜோதியின் நிலை குறித்து தெரிந்து கொள்ள, அவரது வீட்டிற்கு சென்றது பிபிசி.

அன்னீம் ஜோதியின் தாய் பிரமீளா தேவி, தற்போது கர்னூல் மாவட்டத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார். தனது மகள் ஜோதியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரும் போராட்டத்தில் அவர் இருக்கிறார். எனினும் சற்று திடமாகவே காணப்பட்டார்.

"நேற்று நான் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்தேன். அதனால்தான் இன்று சற்று நிதானமாக இருக்கிறேன். இல்லையென்றால் உங்களுடன் பேசியிருக்க முடியாது" என்கிறார் பிரமீளா தேவி.

மத்திய காவல் படையில் கான்ஸ்டபிளாக இருந்து ஓய்வுபெற்ற ஜோதியின் தந்தை மஹேஷ்வர் ரெட்டி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

2019ல் பி.டெக் படித்து முடித்த ஜோதி, அதன் பிறகு 98 பேருடன் வுஹானில் உள்ள நிறுவனத்திற்குக் கடந்த ஆகஸ்டில் பயிற்சிக்காக சென்றதாக கூறுகிறார் ஜோதியின் தாய் பிரமீளா தேவி.

"அவர் இன்னும் சில நாட்களில் திருமணம். நாங்கள் மண்டபம் கூட முன்பதிவு செய்தாகிவிட்டது."

"என் மகள் தொலைப்பேசியில் முதலில் பேசும்போது, பயிற்சிக்காக வந்த பெண்கள் அனைவரும் ஒன்றாக தங்கியிருப்பதாகவும், கொரோனா தொற்று குறித்த அச்சத்தினால் யாரும் வெளியே செல்லவில்லை என்றும் கூறினார். எல்லாம் நலமாக இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், கொரோனாவால் மரணம் ஏற்படுவதாக செய்தி வெளியானதிலிருந்து பயத்திலேயே இருக்கிறேன்" என்கிறார் பிரமீளா

மார்ச் 14ஆம் தேதி அன்று ஜோதிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. சீனாவிற்கு செல்லும் முன்புதான் நிச்சயம் செய்யப்பட்டது.

முன்னதாக வுஹானில் சிக்கியிருப்பவர்களை இந்தியா கொண்டுவர இரண்டு சிறப்பு விமானங்களை இந்திய அரசு அனுப்பியிருந்தது. இது கொரோனாவால் பாதப்பு ஏற்படாதவர்களுக்கானது. சீனாவில் உள்ள இந்திய தூதரகம் வழியாக இதை அறிந்த இந்தியர்கள், வுஹானில் இந்த விமானத்தைப் பிடித்தனர். இதனைத் தனது தாய்க்கு தெரிவித்த ஜோதியும் வுஹான் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

"முதல் விமானம் புறப்பட தயாராக இருக்கிறது. நான் இன்னும் சிறிது நேரத்தில் விமானத்திற்குள் சென்று விடுவேன். நான் திரும்பி அழைக்கிறேன் என்று அழைப்பை துண்டித்தாள். பிறகு மீண்டும் அழைத்து தன்னை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என்றாள். அவள் அவ்வளவு பயத்திலிருந்தால். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்த விமானத்தில் வருவாள் என்று நினைத்தோம். ஆனால் அதிலும் வரவில்லை" என்கிறார் பிரமீளா.

முதல் விமானத்தில் வரவிருந்த ஜோதி, அவருக்கு காய்ச்சல் இருந்ததால் இந்தியா செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனை சீன அதிகாரிகள் ஜோதிக்கு விவரித்தார்கள்.

"ஜோதி எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். ஒரு பக்கம் அவர் கொரோனா தொற்று குறித்த அச்சத்திலிருந்தார். மறுபக்கம் விமானத்தை தவற விடக்கூடாது என்ற பதற்றம். அனைவரும் அறக்க பறக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அப்போதே ஜோதி சோர்வடைந்தார். சில நாட்களாக சரியான உணவும் இல்லை. ஜோதிக்கு மட்டும்தான் விமான நிலையத்தில் இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. தனக்கு மட்டும் இரண்டு முறை சோதனை நடத்தப்படுகிறதே என்ற அச்சம் ஜோதிக்கும். இந்த பதற்றத்தில்தான் அவரது உடலின் வெப்பநிலை அதிகரித்தது. இதனால் விமானத்தில் ஏற ஜோதிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்படவில்லை" என்று ஜோதியை திருமணம் செய்யவுள்ள அமர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"அப்படி ஜோதிக்கு வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால், அவர்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. குறைந்தது அவரை பாதுகாப்பான இடத்திற்காவது அனுப்பியிருக்க வேண்டும். அதுவும் இல்லை. மருத்து மாத்திரைகளும் ஜோதிக்கு கொடுக்கவில்லை. இதை எதுவும் செய்யாமல் ஜோதியையும், ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த சத்யசாய் என்ற மற்றொரு இளைஞரையும், நடு ரோட்டில் நிற்க வைத்துவிட்டார்கள். பிறகு இருவரும் போராடி அவர்களது நிறுவனத்தின் விடுதிக்கு சென்றிருக்கிறார்கள். இப்போது இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஒரு நாளைக்கு 3-4 முறை ஜோதியுடன் தொலைப்பேசியில் பேசுகிறோம். அவர் நல்ல உடல்நலத்துடன்தான் இருக்கிறார். ஆனால், வுஹானில் தங்கியிருப்பதால் ஜோதிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? இந்திய அரசு பொறுப்பேற்குமா? அல்லது பாதுகாப்பான இடத்தில் ஜோதியை தங்க வைக்காது சீன அரசு பொறுப்பேற்குமா?" என்று கோபத்தோடு கேள்வி எழுப்புகிறார் அமர்.

தற்போது ஜோதி அவரது நிறுவனம் கொடுத்த விடுதியில் தனியே தங்கியிருக்கிறார். அவரை சுற்றி நான்கு சுவர்கள் மட்டுமே. கொரோனா அச்சத்தினால் ஜன்னலை கூட ஜோதி திறப்பதில்லை என்கிறார் அவரது தாய் பிரமீளா.

ஜோதியோடு சீன சமையற்கார பெண் ஒருவரும் அங்கு சிக்கியிருக்கிறார். அப்பெண் மாட்டுக்கறி, பன்றிக்கறி போன்ற உணவுகளையே சமைக்கிறார். ஆனால், ஜோதி அவற்றை சாப்பிடாமல் பிரெட் மற்றும் பிஸ்கெட்டுகளையே உண்கிறார். இறைச்சியினால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவருக்கு உள்ளதாக பிரமீளா தெரிவித்தார்.

பிரமீளாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, வுஹானில் இருந்த ஜோதியிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரது தாயிடம் பேசிய பிறகு, ஜோதி பிபிசியிடம் பேசினார்.

"நான் என் அறையை விட்டு எங்கும் வெளியே செல்வதில்லை. மதியமும், மாலையும் தினமும் என் விடுதிக்கு உணவு வரும். சாதமும், காய்கறிகள் மற்றும் இறைச்சியால் செய்யப்பட்ட கிரேவியும் தருவார்கள். இங்கு சாப்பாடு என்றாலே இறைச்சிதான். மாட்டுக்கறி, கோழிக்கறி அல்லது பன்றிக்கறியைக் காய்கறிகளோடு சேர்த்து வேகவைத்து அதில் உப்பு, மிளகாய் தூளை தூவித் தருவார்கள். ஆனால் நான் அதை சாப்பிடுவதில்லை. நான் சாதத்துடன் என் வீட்டில் இருந்து கொண்டு வந்த ஊறுகாயை வைத்தே சாப்பிடுகிறேன். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இதுதான் என் உணவு. அப்படி இல்லை என்றால் வெறும் நூடுல்ஸை வேகவைத்து சாப்பிடுவேன். மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இங்கிருப்பவர்கள் அதிகளவில் இறைச்சி எடுத்துக் கொள்கிறார்கள். இறைச்சியால் கொரோனா பரவுவது தெரிந்தும் அவர்களை அதைதான் சாப்பிடுகிறார்கள்" என்று பிபிசியிடம் பேசிய ஜோதி தெரிவித்தார்.

தன்னுடன் பேசக்கூட யாரும் இல்லாமல்,தனியே நான்கு சுவர்களுக்குள்ளேயே அவர் அடைந்திருக்கிறார்.

"என்னுடன் இருந்த மற்ற பணியாளர்கள் இந்தியா சென்றுவிட்டனர். நானும் சத்தியசாயும் மட்டும்தான் இங்கு இருக்கிறோம். எங்கள் அலுவலக நிர்வாகம் எங்களை பார்த்துக் கொள்கிறது" என்றார் ஜோதி.

ஜோதி ஏற்கனவே அச்சத்தில் இருப்பதால், அவரிடம் அதிகம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால், அதை மதித்து ஜோதியிடம் பேசியதை முடித்துக் கொண்டார் பிபிசி செய்தியாளர்.

ஜோதியை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

"ஜோதியின் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்ததால் அவரால் இந்தியா செல்ல முடியாமல் போனது. சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அவருடைய பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் ஜோதியுடன் தொடர்பில் இருக்கிறோம். அவருக்கு முறையாக உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது. சீனாவிலிருந்து விரைவாக அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வுஹானில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் சீனா மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது. ஒட்டுமொத்த ஹூபே மாகாணமே முடக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியே வர யாருக்கும் அனுமதியில்லை. ஜோதி உள்ளிட்ட அங்கு சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்" என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா: இந்தியாவுக்கு வர துடிக்கும் ஆந்திர மாணவி ஜோதி

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: