You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Coronavirus news: "தனிமைப்படுங்கள் அல்லது தண்டிக்கப்படுவீர்" - என்ன நடக்கிறது சீனாவில்? - விரிவான தகவல்கள்
வெளியூர்களிலிருந்து பெய்ஜிங் திரும்பும் மக்கள் 14 நாள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதவர்கள் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.
விடுமுறை முடிந்து சீன தலைநகரான பெய்ஜிங் திரும்புவோர் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கான உரிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று சீன அரசு கூறி உள்ளது.
எகிப்தில் கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருப்பது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
பெய்ஜிங்கில் இரண்டு கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.
சீன புத்தாண்டையொட்டி கொடுக்கப்பட்ட விடுமுறையானது கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து நீடிக்கப்பட்டது.
சரி. கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச அளவில் நடந்த விஷயங்களைப் பார்ப்போம்.
- வுஹான் நகரத்திலிருந்து பரவிய இந்த வைரஸால் இதுவரை 1,523 பேர் பலியாகி உள்ளனர்.
- சனிக்கிழமை மட்டும் சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக 143 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 2,641 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,492ஆக உயர்ந்துள்ளது.
- சீனாவுக்கு வெளியே 24 நாடுகளில் 400 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
- ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.
- இந்த வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்த விசாரணையை இந்த வார இறுதியில் உலக சுகாதார அமைப்பு தொடங்க உள்ளது. இந்த விசாரணை குழுவில் 12 சீனர்களும் , 12 சர்வதேச உறுப்பினர்களும் இருப்பர்.
- வியட்நாமில் 16 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது உறுதியானதை அடுத்து, சீன எல்லையில் உள்ள வியட்நாம் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- வட கொரியா மீதான தடைகளை தளர்த்தும்படி செஞ்சிலுவை சங்கம் கோரி உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி அளிக்க முடியும்.
- கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று பேரும் குணமடைந்துவிட்டதாக கேரள நிதி அமைச்சர் தாமஸ் தனது ட்விட்டரில் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :