You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியுரிமை திருத்த சட்டம்: தடியடி, கைது, விடுதலை; நள்ளிரவில் முடிந்த இஸ்லாமியர்கள் போராட்டம்
சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்தும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் மாநிலத்தில் பல பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், காவல்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கலைந்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட சுமார் 120 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்லாமிய அமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சென்னை மாநகரக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
முன்னதாக, சென்னையில் தடியடி மற்றும் கைது சம்பவம் குறித்த செய்திகள் பரவியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கும் மேல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுதும் போராட்டம் தொடங்கியது எப்படி?
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டம் இரவு வரை தொடர்ந்த நிலையில், அவர்களை கலைந்துபோகும்படி காவல்துறையினர் வலியுறுத்தினர்.
இருந்தபோதும் அவர்கள் கலைந்துபோகாத நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர், கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் மூன்று காவலர்கள் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையடுத்து காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. சுமார் 120க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, தொடர்ந்து அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
இந்தச் செய்தி பரவியதும் சென்னையில், ஆலந்தூர், கிண்டி, அண்ணா சாலை, அண்ணா நகர், செங்குன்றம் பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி சென்னை மட்டுமல்லாது, மதுரை, வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின், சென்னையில் போராட்டம் முடியும் முன்னரே கலைந்து சென்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.
பிப்ரவரி 14ஆம் தேதி என்பது கோவையில் 1998இல் தொடர் குண்டுவெடிப்பு நடந்த தினம் என்பதால் இன்று அங்கு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
சென்னையில் போராட்டம் தொடங்கும் முன்னரே, கோவை மாநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், சென்னை சம்பவம் குறித்து அறிந்ததும் இரவு 11 மணியளவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
பின்னர் அவர்களும் சென்னையில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட பின் கலைந்து சென்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: