You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
coronavirus news: மின்சாரத்தை பயன்படுத்தி மருத்துவமனையில் இருந்து தப்பிய ரஷ்ய பெண்
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு பெண் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டார்.
இதை கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த பெண்ணை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அப்பெண் அதற்கு கடும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
முப்பத்து இரண்டு வயதாகும் அலா இல்யினா தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இருக்கிறார். அவரை அழைத்துச் செல்ல வெளியில் காவல்துறை காத்திருக்கும் நிலையில் இல்யினா கதவை திறக்க மறுத்துவருகிறார்.
சீனாவில் இருந்து கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் இல்யினா. அவருக்கு கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் உண்டாகும் கிருமித் தொற்று உள்ளதா என்பதை அறிந்துகொள்ள கடந்த ஆறாம் தேதி பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால், அவரை இரு வார காலம் தனிமைப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இயற்பியலில் பட்டய படிப்பை முடித்தவராக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள இல்யினா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் ஜனவரி 30-ம் தேதி சீனாவில் உள்ள ஹைனன் தீவிலிருந்து ரஷ்யாவுக்கு திரும்பிய பிறகு தனக்கு தொண்டை வலி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். பிப்ரவரி ஆறாம் தேதி ஆம்புலன்ஸ் மூலமாக ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் உள்ள பாட்கின் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றிருக்கிறார்.
பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதாவது, கோவிட்-19 தொற்று, இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வாரங்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
''எனக்கு எடுக்கப்பட்ட மூன்று பரிசோதனைகளும் நான் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்பதை பிரதிபலித்தன. பின்னர் எதற்காக தனிமைப்படுத்தல்?'' என அந்த பதிவில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதன்பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த மின் பூட்டில் அதிக அளவிலான மின்சாரத்தைப் பாய்ச்சி, அதை உடைத்து தப்பித்திருக்கிறார். அந்த கட்டடத்தில் இருந்து தப்பிக்கும் வழி குறித்து ஒரு வரைபடத்தையும் வரைந்துள்ளார்.
அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக தன்னை வெளியில் அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இல்யினா கூறுகிறார்.
தற்போது இல்யினாவை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், அங்கே பிப்ரவரி 19-ம் தேதி வரை, தனிமைப்படுத்தி வைக்கவும் ஒரு நீதிமன்ற ஆணை வேண்டி அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் குறைந்தபட்சம் 1,350 பேர் இறந்துள்ளனர். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.
அதில் ரஷ்யாவும் ஒன்று. ரஷ்யாவில் இதுவரை இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் குணமாகி மருத்துவமனையில் இருந்து சென்றுவிட்டார்.
சீனாவில் இருந்து குறைந்தது 144 ரஷ்யர்களை விமானம் மூலம் ரஷ்ய அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்கள் சைபீரியாவில் இரண்டு வாரம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: