You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கும்பகோணத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற திருமங்கையாழ்வார் சிலை - நடந்தது என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
1950களில் கும்பகோணத்தில் ஒரு கோயிலில் இருந்த திருமங்கையாழ்வாரின் உலோகச் சிலை ஒன்று, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது. அதை மீட்பதற்கான முயற்சிகள் துவங்கியிருக்கின்றன.
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோயில் கிராமத்தில் இருக்கிறது சௌந்தரராஜப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை மாற்றப்பட்டு, பழமையான சிலை லண்டனில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டிருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் தற்போது திருமங்கை ஆழ்வாரின் உலோகச் சிலை ஒன்று உள்ளது. ஆனால், அது பழமையான உலோகச் சிலை இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
"இந்தக் கோயிலில் இருந்த திருமங்கை ஆழ்வாரின் சிலையின் பழைய புகைப்படத்தையும் தற்போது உள்ள சிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது வேறுபாடு தெரிந்தது. பிறகு ஆராய்ந்ததில், ஏற்கனவே இருந்த சிலை மாற்றப்பட்டு தற்போது உள்ள சிலை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது" என பிபிசியிடம் கூறினார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐஜியான அன்பு.
"இது 1967க்கு முன்பாக நடந்திருக்க வேண்டும். காரணம், 1967ல் இந்தச் சிலை புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் உள்ள சிலையும் தற்போதுள்ள சிலையும் ஒன்றுதான். அதேபோல, 1957ல் எடுக்கப்பட்ட சிலையின் புகைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதுள்ள சிலை வேறு மாதிரியாக உள்ளது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் உள்ள சிலையும் லண்டன் அருங்காட்சியத்தில் உள்ள சிலையும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆகவே, 1957-67 காலகட்டத்தில் சிலை மாற்றப்பட்டிருக்கலாம்" என்று மேலும் அன்பு தெரிவித்தார் .
ஃப்ரென்ச் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் புதுச்சேரியில் உள்ள பழைய ஆவணங்களில் இருந்த புகைப்படங்கள் திருமங்கையாழ்வாரின் பழைய சிலையை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தற்போது இந்தச் சிலை, ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் கீழ்த் திசை கலைகளுக்கான பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அருங்காட்சியகம் தன்னுடைய இணைய தளத்தில் இந்த சிலை பற்றி அளித்திருக்கும் குறிப்பில், வெண்கலத்தில் செய்யப்பட்ட இந்தச் சிலை 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கூறியுள்ளது. கையில் கத்தியும் கேடயமும் கொண்டிருக்கும் திருமங்கையாழ்வாரின் இந்தத் திருவுருவம், 1967ல் வாங்கப்பட்டதாகவும் அருங்காட்சியகத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. இந்தச் சிலை 57.5 சென்டி மீட்டர் உயரம் கொண்டது.
தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியத் தூதரகத்தின் மூலம் சிலையை மீட்பதற்கான பணிகள் துவங்கப்படுமென சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
"இந்த சிலை யாரால் அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டதென தெரியவில்லை. அருங்காட்சியகத்திடம் அந்தத் தகவல் இருக்கும். அதனைப் பெற்று, பின்னோக்கி வந்தால் எப்படி சிலை மாற்றப்பட்டதெனத் தெரியவரும்" என்கிறார் அன்பு.
"ஆஷ்மோலியன் மியூசியத்திலிருந்து கிடைக்கும் சாதகமான பதில், தமிழகத்திலும் காரைக்காலிலும் நடந்த பழைய சிலை திருட்டுகள் மீது புதிய நடவடிக்கைகளைத் துவங்க மிகப் பெரிய துவக்கமாக இருக்கும். இப்படி திருடப்பட்ட 25க்கும் மேற்பட்ட வெண்கலச் சிலைகள் குறித்த பட்டியலை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள காவல்துறைக்குத் தந்திருக்கிறோம்" என்கிறார் வெளிநாடுகளில் உள்ள இந்திய சிலைகளை மீட்பதில் ஆர்வம் காட்டிவரும் இந்தியா ப்ரைட் திட்டத்தின் இணை ஒருங்கிணைப்பாளரும் The Idol Thief நூலின் ஆசிரியருமான விஜயகுமார்.
புதுச்சேரியில் உள்ள ஃப்ரென்ச் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் புதுச்சேரியில் இருந்த பழைய புகைப்படங்கள்தான் 1960களிலும் 70களிலும் மூடப்பட்ட சிலை திருட்டு வழக்குகளை மீண்டும் திறக்க உதவியிருக்கின்றன. பழைய வழக்குகளை மீண்டும் திறந்து, விசாரிப்பதற்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்" என்றார் அவர்
இந்த திருமங்கையாழ்வார் சிலை, 2360 டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்கிறார் விஜயகுமார்.
தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் சுமார் 315 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 100 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மேலும் 100 வழக்குகளில் துப்புதுலக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 115 வழக்குகள் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன.
இந்தக் கைவிடப்பட்ட வழக்குகளில் புதிதாக துப்பு கிடைக்கும்போது மீண்டும் இந்த வழக்குகள் புதுப்பிக்கப்பட்டு, விசாரணையை தீவிரப்படுத்துவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: