குடியுரிமை திருத்த சட்டம்: எதிர்ப்பை வெளிப்படுத்திய நூதன வழிமுறைகள்

கடந்த மாதம் இந்திய அரசு நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை போராட்டங்கள் மட்டுமின்றி, திருமணங்களில் பதாகைகளை ஏந்துதல், இலவச சட்ட ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு புதிய வழிகளில் இந்தியாவின் இளையோர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

"உள்நாட்டில் பல்லாண்டுகால துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவை தவிர்த்து தங்களுக்கு வேறெந்த நாடும் இல்லை" என்று நினைப்பவர்களுக்காக இந்த சட்டத்தை ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறும் நிலையில், முஸ்லிம்களை மட்டும் விலக்கும் இந்த சட்டம் பாரபட்சமானது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் இன்னமும் கூட போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக உருமாறியதில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய கொடூரமான தாக்குதல்கள் என்று குறிப்பிடும் பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

காவல்துறையினர் விதித்த தடைகள் மற்றும் இணைய முடக்கத்தையும் மீறி நாடுமுழுவதும் இன்னமும் போராட்டக்காரர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர்.

இந்த போராட்டங்களுக்கு பின்னால் வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், இணைய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.

"நம் அனைவராலும் வீதியில் இறங்கி போராட முடியாது" என்று கூறுகிறார் டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு இலவசமாக உதவிகள் வழங்கி வரும் இளம் மருத்துவரான நேஹா திரிபாதி.

இன்ஸ்டாகிராமில் தனது மின்னஞ்சல் முகவரியை வெளியிட்ட இவர் போராட்டக்காரர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக அறிவித்திருந்தார். இது தான் உதவி செய்வதற்கான வழி என்று அவர் கூறுகிறார்.

"நானும் போராட்டங்களில் பங்கெடுக்க முயற்சி செய்தேன். ஆனால், அது உண்மையிலேயே அச்சமளிக்கும் வகையில் இருந்தது. எனவே, அந்த அச்சம் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கு நான் முடிவு செய்தேன்."

மன மற்றும் உடல் நலனை உறுதிசெய்தல்

நேஹாவை போன்று பலரும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை வீதியில் இறங்காமலேயே வெளிப்படுத்துகின்றனர்.

"நான் இப்போதுதான் புதிதாக டெல்லியில் குடியேறியதால் போராட்டங்களில் பங்கேற்க முடியவில்லை. ஆனால், போராட்டக்காரர்களுக்கு தேவையான உளவியல் சார்ந்த உதவிகளையும், சுய பாதுகாப்பு குறித்த முக்கியத்துவங்களையும் அலைபேசி வழியே வழங்கினேன்" என்று கூறுகிறார் உளவியல் மருத்துவரான அஞ்சலி.

போராட்டக்காரர்களின் சுய பாதுகாப்பை வலியுறுத்தும் குறிப்புகள் அடங்கிய வரைகலைகள் இன்ஸ்டாகிராமில் பலத்த வரவேற்பு பெற்றிருந்தது. அப்படிப்பட்ட பதிவுகளில் ஒன்றான, "அமைதியின்மை நேரங்களில் மன ஆரோக்கியத்தின்" முக்கியத்துவம் என்பதை சங்கீதா என்பவர் பதிவு செய்திருந்தார்.

ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியபோது தனக்கு கவலையாக இருந்ததாகவும், ஏதோவொரு வகையில் பங்களிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாகவும் சங்கீதா கூறுகிறார்.

"நாடு கலவரமாக இருக்கும் நிலையில், ஒருவரது உடல்நிலை குறித்து பேசுவது அற்பமான, சுயநலமிக்க ஒன்றாக கருதப்படலாம்; ஆனால், இது தவிர்க்க முடியாத முக்கியமான ஒன்று" என்று அவர் கூறுகிறார்.

போராட்டங்கள் நடைபெற்ற இடங்களிலும், தங்களது மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை வழங்குவதன் மூலம் பல்வேறு மருத்துவர்களும் போராட்ட்டக்காரர்களுக்கான தங்களது ஆதரவை வேறுபட்ட வகையில் வெளிப்படுத்தினர்.

"சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டது. மருத்துவர்களாகிய நாங்கள் ஒரு குழுவாக போராட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்கினோம்" என்று கூறுகிறார் டெல்லியை சேர்ந்த மருத்துவரான அஹ்மத்.

அவசர உதவிகளை வழங்குவதற்கு முன்வரும் தன்னார்வ மருத்துவர்களை பகுதிவாரியாக தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்ட பட்டியலில் இவரது பெயரும் அடக்கம்.

இதேபோன்று, போராட்டங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் தடுக்கப்பட்ட, கைதுசெய்யப்பட்டவர்களுக்கு சட்டரீதியிலான ஆலோசனை வழங்குவதற்கு என்று தனியே மற்றொரு பட்டியல் உருவாக்கப்பட்டிருந்தது.

கலைகள் வழியே ஆதரவு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களில் பலர் இன்ஸ்டாகிராமை ஒரு முக்கிய தளமாக பயன்படுத்தினர். பல்வேறு இடங்களில் நடக்கும் போராட்டங்கள் குறித்த சமீபத்திய தகவல்கள், சுய பாதுகாப்பின் அவசியம், இணைய முடக்கத்தின்போது ஒன்றுக்கூடும் வழி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இன்ஸ்டாகிராம் வாயிலாக தகவல்கள் பரப்பப்பட்டன.

இன்னும் சிலரோ, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்த காணொளிகளை தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கு வழியே பரப்பினர்.

வரைகலை கலைஞர்கள் காப்புரிமை அற்ற பதாகைகளை வடிவமைத்து தருவதன் மூலம் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தனர். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே நாட்டை சேர்ந்தவர்களே என்பதை வலியுறுத்தும் வகையில், ஷிலோ ஷிவ் சுலேமான் என்ற கலைஞர் உருவாக்கிய பதாகை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, அது பிரதி எடுக்கப்பட்டு நாடுமுழுவதும் நடந்த போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டது.

நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தின் அடையாளமாக மாறிய பெண்களை தாங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

"இந்த நாட்டில் பெண்கள் அடக்குமுறையின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். எங்களது குரல்கள் பெரும்பாலும் ஆணாதிக்க சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டன. ஆனால், இனி அது தொடராது" என்று மற்றொரு கலைஞரான பேர்ல் டிசோசா கூறுகிறார்.

வாட்சாப்பில் அனுப்பப்படும் 'காலை வணக்கம்' போன்ற குறுஞ்செய்திகள் வடிவில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களை பரப்பும் பணியை மற்றொரு இன்ஸ்டாகிராம் கணக்கு மேற்கொண்டது.

"ஒவ்வொரு குடும்பம் மற்றும் நட்பு வட்டத்துக்குள்ளும் நிலவும், இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை, விடாப்பிடித்தனம், சமூக பிரச்சனைகளில் அக்கறையின்மை போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இதையொரு வழியாக பயன்படுத்துகிறோம்" என்று தங்களது அடையாளத்தை வெளியிட விரும்பாதவர்கள் தெரிவிக்கின்றனர்.

'குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பது'

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை திருமணங்கள், பட்டமளிப்பு விழா, இசை கச்சேரி உள்ளிட்ட வித்தியாசமான முறைகளின் மூலம் பலரும் வெளிப்படுத்தினர்.

டெல்லியில் தங்கள் சுற்றுப்புறத்தில் நடந்த வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நதீம் அக்தர் மற்றும் அமினா ஜக்கியா ஆகியோர் தங்களது திருமண புகைப்படங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பதாகைகளை வைத்திருக்க முடிவு செய்தனர்.

"திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சம்பவம் திருமணம் நிகழ்வு குறித்த எங்களது உற்சாகத்தை குறைத்துவிட்டது" என்று பிபிசியிடம் பேசிய மணப்பெண்ணின் சகோதரியான மரியம் ஜக்கியா கூறினார்.

"நீண்டகால அடிப்படையில், ஒரு முஸ்லிமாக இந்தியாவில் எங்களது எதிர்காலம் குறித்து எழுந்த கவலையின் காரணமாக எங்களது கவனம் போராட்டங்களை நோக்கி சென்றது."

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற டெப்ஸ்மிதா சௌத்ரி, பார்வையாளர்களுக்கு முன்னால் குடியுரிமை திருத்த சட்டத்தை கிழித்து, சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் திகைக்க வைத்தார்.

இந்த செயலை செய்வது குறித்து தான் சம்பவம் தினத்துக்கு முந்தைய இரவே தன்னைத்தானே தயார் செய்துகொண்டதாகவும், ஆனால் அதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் 24 வயதான அவர் கூறுகிறார்.

"இந்த சட்டம் அரசமைப்பிற்கு விரோதமானது மற்றும் மிகவும் பாரபட்சமானது. இதன் விளைவாக ஏற்பட்ட வன்முறை என்னை வெகுவாக பாதித்துவிட்டது. நான் ஒரு கூச்ச சுபாவமுள்ள நபர் என்றாலும், குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது" என்று அவர் கூறுகிறார்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த சிலர் தங்களது பாரம்பரிய கலையான 'கோலம்' வாயிலாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தங்களது எதிர்ப்பை வீடுகளின் முன்பு வெளிப்படுத்தினர்.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அந்த கோலங்களை வரைந்த சிலர் மீது காவல்துறை நடவடிக்கையும் பாய்ந்தது.

இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டம் பாரபட்சமானது என்றும் அது இந்தியாவின் 200 மில்லியன் முஸ்லிம் சிறுபான்மையினரை ஓரங்கட்டுவதற்கான இந்து-தேசியவாத கொள்கையின் ஒரு திட்டம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

"இதற்கு மேலும் நம்மால் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருக்க முடியாது" என்று கூறுகிறார் சமீபத்தில் நடந்த இசை கச்சேரி ஒன்றில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்திய ஆதித்யா ஜோஷி.

"அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வருகின்றனர். அதில் ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் கண்டிப்பாக பங்களிக்க வேண்டும்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: