You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
JNU தாக்குதல்: தொடரும் போராட்டங்கள் - நடப்பது என்ன?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதலை கண்டித்து நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஜே.என்.யு. தாக்குதலை கண்டித்து நள்ளிரவில் மும்பை கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் மும்பை நகரில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று, ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தாக்குதலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இப்பகுதியில் நள்ளிரவில் தொடங்கிய போராட்டங்கள் காலையில் விடிந்த பின்பும் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நள்ளிரவில் டெல்லி போலீஸ் தலைமையகத்தின் முன்பாகவும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாகவும் தாக்குதலைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
இதேபோல் கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஹைதராபாத், புனே உள்பட நாட்டின் பல இடங்களிலும் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியின் லெஃப்டனன்ட் ஆளுநர் அனில் பைஜாலிடம் பேசிய போது ஜே.என்.யு வின் பிரதிநிதியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுகொண்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே ஜே.என்.யுவின் பதிவாளர் பிரமோத் குமார் வெளியிட்ட அறிக்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
''ஜனவரி 1 அன்று ஜவர்ஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் குளிர்கால வகுப்புக்கான பதிவு தொடங்கியது.
ஆனால் ஜனவரி 3 ஆம் தேதி சில மாணவர்கள் இதை எதிர்த்தனர் மேலும் தகவல் மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவுக்குள் நுழைந்தனர். இணையதளம் செயல்படாமல் போனது. பிறகு அந்த மாணவர்கள் அடையாளம் கண்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். பிறகு ஜனவரி 4 அன்று மீண்டும் சில மாணவர்கள் இணையத்தோடு சேர்த்து மின்சாரத்தையும் துண்டித்தனர்.
சில கட்டிடங்களின் பாதைகளை வழி மறித்தனர். பிரகு ஜனவரி 5 ஆம் தேதி ஏற்கனவே பதிவு செய்த மாணவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். பிறகு ஜனவரி 5ஆம் தேதி மதியம் பள்ளி வளாகத்திலும் விடுதியிலும் மாணவர்களை அனுமதிக்க மறுத்தனர்.
ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணியளவில் பதிவு செய்வதை எதிர்த்து போராட்டம் செய்தனர் அப்போது முகமூடி அணிந்த சிலர் கல்லூரி வளாகம் மற்றும் விடுதியினுள் நுழைந்து மாணவர்களைத் தாக்கினர்''
இவ்வாறு ஜே.என்.யுவின் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து ஜே.என்.யு வின் துணை வேந்தர் ஜெகதீஷ் குமார், இவ்வாறு மாணவர்கள் தாக்கப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த எவ்வித வன்முறை சம்பவங்களையும் ஜே.என்.யு நிர்வாகம் கண்டிக்கிறது என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
டெல்லி போலீஸ் (தென் மேற்கு) துணை கமிஷனர் தேவேந்திர ஆர்யா, ஏஎன் ஐ முகாமையிடம் நடந்த வன்முறை குறித்து கூறுகையில், 'ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இது தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்த சம்பவங்கள் தொடர்பான சமூகவலைதள வீடியோ பதிவுகள் மற்றும் சிசிடிவி பதிவுகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்' என்று தெரிவித்தார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''முகமூடி இணைந்த நபர்கள் எப்படி பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்? துணைவேந்தர் என்ன செய்து கொண்டிருந்தார்? போலீசார் வெளியே நின்று கொண்டு என்ன செய்தார்கள்? உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்த கேள்விகள் விடையளிக்கப்படாமல் உள்ளன. இது ஒரு திட்டமிடப்பட்ட சதித்திட்டமாகத் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு நிச்சயம் விசாரணை தேவை'' என்று கோரியுள்ளார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் திங்கள்கிழமை காலையில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், இடதுசாரி மாணவர்கள் ஜே. என். யு வை ரௌடிகளின் மையமாக மாற்றிவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜே.என்.யுவில் நடந்த வன்முறைக்கு பாஜகவே காரணம் என்று வெளிப்படையாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே காயமடைந்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் காயங்களுக்கான சிகிச்சைப்பிரிவான தலைவரான ராஜேஷ் மல்கோத்ரா கூறுகையில், ''காயம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட 34 ஜே.என்.யு. மாணவர்களும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்'' என்று தெரிவித்துள்ளார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அதிகாரத்தில் இருக்கும் அமைப்பு சமூகத்தில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகின்றனர். இப்போதுகூட இதை நாம் கண்டுகொள்ளவில்லை என்றால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அவர்களை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: